சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,உலக அழகி ஐஸ்வர்யா ராய், பிரம்மாண்டத்திற்கு பேர் போன ஷங்கர், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் என எல்லா பிரம்மாண்டங்களும் இணைந்துள்ளதால் இந்திய திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் எந்திரன்.
எந்திரன் படத்தின் கதையை அப்படத்தின் ஹிந்தி இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
ரஜினி 10 வருடங்கள் கடுமையாக உழைத்து, ரோபோ ஒன்றை உருவாக்குகிறார். அதற்கு ‘சிட்டி’ என்று பெயரிடுகிறார். ‘சிட்டி’யை வைத்து நாட்டில் பல நல்ல காரியங்களை செய்து முடிக்க திட்டமிடுகிறார்.
‘சிட்டி’ ஒரு சுவாரஸ்யன். மனிதனைப் போலவே வடிவமைக்கப்பட்ட எந்திரன். ‘சிட்டி’க்கு தண்ணீராலோ தீயினாலோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. ‘சிட்டி’ டான்ஸ் ஆடுகிறது, பாட்டு பாடுகிறது, சண்டை போடுகிறது.. எல்லாம் செய்கிறது. மனிதர்களால் செய்யக் கூடியது மட்டுமல்ல, செய்ய முடியாததையும் ‘சிட்டி’யால் செய்ய முடியும். ‘சிட்டி’ இயங்குவதற்கு தேவை மின்சாரம் மட்டுமே.
ரஜினி என்ன சொன்னாலும் ஏன் எதற்கு என கேட்காமல் அதை அப்படியே செய்து முடிப்பான் ‘சிட்டி’. அது விளையாட்டாக சொல்லப்பட்டதா இல்லை நிஜமாகவே செய்வதற்காக சொல்லப்பட்டதா என்பது பற்றி ஆராயும் திறன் ‘சிட்டி’க்கு கிடையாது. சொன்னதை செய்து முடிப்பான். எல்லாம் வல்ல ‘சிட்டி’யால் செய்ய முடியாத ஒன்று – பொய் சொல்வது.
ஒரு டெலிபோன் டைரக்டரியை ஒரு முறை புரட்டிப் பார்த்தால் போதும், அதிலுள்ள எல்லா தகவல்களையும் அப்படியே ஞாபகத்தில் ஏற்றிக் கொள்ளும் ஆற்றல் படைத்த ‘சிட்டி’க்கு மனித உணர்வுகளை மட்டும் புரிந்து கொள்ள முடியாது.
ரஜினி பின் விளைவுகளை அறியாமல், மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும்படி ‘சிட்டி’யை மெருகேற்ற, ‘சிட்டி’க்கு வரும் முதல் உணர்வு.. காதல்..! இரும்பிலே ஒரு இதயம் துடிக்க ஆரம்பிக்கிறது.
‘சிட்டி’யின் காதலால் ரஜினிக்கு என்ன பாதிப்புகள் வருகின்றன? ரஜினி எதற்காக ‘சிட்டி’யை உருவாக்கினாரோ, அந்த திட்டம் நிறைவேறியதா? தன் படைப்பான ‘சிட்டி’யை ரஜினியே அழித்துவிடுவாரா..? ரஜினியா.. ‘சிட்டி’யா..? செப்டம்பர் மாதம் தான் தெரியும்.