புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடாததால் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக இந்த ஆண்டு நிதி விடுவிக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்தது.இதுதொடர்பாக மாநிலங்களவையில் கேள்விநேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் செளகதா ராய் பதிலளித்தார். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மத்திய அரசு 2010-11 ஆம் ஆண்டில் ரூ 652 கோடியை ஒதுக்கியது. எனினும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடாததால் அந்த நிதி விடுவிக்கப்படவில்லை என ராய் தெரிவித்தார்.புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே மத்திய அரசால் நிதியை விடுவிக்க முடியும் என்றார் அவர்.கடந்த 3 ஆண்டுகளில் இந்த திட்டத்துக்காக மத்திய அரசு ரூ 152.79 கோடி நிதி அளித்துள்ளது. மாநில அரசால் ரூ 1050 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாநில அரசு ரூ 600 கோடி அளிக்க வேண்டும். 2015-ம் ஆண்டில் இந்தத் திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என ராய் தெரிவித்தார்.