Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

போதைப் பொருள் விவகாரத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

போதை மருந்து கடத்தல் மற்றும் விற்பனையில் தொடர்புடைய நடிகர் – நடிகைகள் பட்டியல் தயாராகி வரும் நிலையில் நடிகை த்ரிஷாவுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதனை த்ரிஷா திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் தம்பிகளும், நடிகர்களுமான ரகுபாபு, பரத்ராஜ், இவர்களது நண்பர் நரேஷ் ஆகியோரை கடந்த வாரம் ‘கோகைன்’ என்ற போதை பொருள் கடத்தல் வழக்கில் ஆந்திரா போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையைத் தொடர்ந்து போதைப்பொருள் சப்ளை செய்த நைஜீரியாவை சேர்ந்த விக்டர் என்பவரும் பிடிபட்டுள்ளார்.

விக்டரிடம் பறிமுதல் செய்யப்பட்ட லேப்-டாப்பை ஆய்வு செய்தபோது நூற்றுக்கணக்கான விஐபிக்களின் செல்போன் நம்பர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த வாக்குமூலத்தில் தனக்கு இந்தியாவில் மட்டும் 800 வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும், அதில் 60 பேர் நடிகர் – நடிகைகள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து போதை மருந்து கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த நடிகர் – நடிகைகள் பட்டியல் தயாராகி வருகிறது. ஏற்கனவே உற்சாக பானம் அருந்திவிட்டு உல்லாசமாக நடுரோட்டில் ஆட்டம் போட்ட விவகாரத்தில் ஒருசிலமுறை சிக்கியிருக்கும் நடிகை த்ரிஷாவுக்கும், போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாயின. இதையறிந்த த்ரிஷா அந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “என்னுடைய தொலைபேசி எண் நைஜீரியா வாலிபருக்கு எப்படி கிடைத்தது என்று எனக்குத் தெரியாது. போதைப் பொருள் விவகாரத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போதை பொருளை பயன்படுத்தும் பழக்கமும் எனக்கு இல்லை. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் என் மீது புரளியை கிளப்பி விட்டுள்ளனர். என் மேலாளர் இதுதொடர்பாக அதிகாரிகளுடன் பேசி வருகிறார். இதற்கு முன்பும் இதுபோல என்மீது பல குற்றச்சாட்டுகளை வெளியிட்டனர். ஆனால் அதில் உண்மை இல்லை என்று பின்னர் வெளியானது. இந்த விஷயத்திலும் உண்மை வெளிவரும். என் பெயரை யாராவது தொடர்புபடுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என்று எச்சரிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply