ஒரு பெண் ஒரே மேடையில் இரு ஆண்களை திருமணம் செய்யும் கதையம்சத்துடனான புதிய படத்தை இயக்கியிருக்கும் டைரக்டர் அன்புவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டைரக்டர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துடன் மிட்டாய் என்ற படத்தை இயக்கியிருப்பவர் டைரக்டர் அன்பு. இதில் சந்தோஷ், பிரபா என 2 பேர் நாயகர்களாகவும், மாயா உன்னி நாயகியாகவும் நடித்துள்ளனர். கதைப்படி. சந்தோஷூம், பிரபாவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் மாயா உன்னியை காதலிக்கின்றனர். மாயா உன்னியும் இருவர் அன்பிலும் நெகிழ்கிறார். நண்பர்கள் இருவரையும் அவரும் காதலிக்கிறார் ஒருவரை ஒதுக்கிவிட்டு இன்னொரு வரை திருமணம் செய்ய அவருக்கு மனம் வரவில்லை. என்ன முடிவு எடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ். இரண்டு பேரையுமே திருமணம் செய்து கொள்வது போல் கதையை இயக்குனர் முடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு ஹீரோக்களுடனும் மாயா உன்னி மாலையும் கழுத்துமாய் திருமண கோலத்தில் இருப்பது போன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.