விலைவாசி உயர்வை கண்டித்து வரும் 7ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் ஏ.பி.பரதன் கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் தூண்டிவிடவில்லை. அவர்களது நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது தான் போராட்டத்தைத் தூண்டியுள்ளது. இப்படியிருக்க, கம்யூனிஸ்டுகளைப் பற்றி முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியுள்ள கருத்துகள் துரதிருஷ்டவசமானது.
போராட்டம் என்பது ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. சத்துணவு ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டம் வேலைநிறுத்தம் அல்ல. அப்படியிருக்க முன்கூட்டியே தாக்கீது கொடுத்திருக்க வேண்டும் என்பது தேவையற்றது. கோரிக்கைகளுக்காக போராடுவது குற்றம் அல்ல; ஆனால் சத்துணவு ஊழியர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்பட்டுள்ளனர்.
அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதும், விடுவதும் முதலமைச்சரின் கையில் இருக்கிறது. இப்படியிருக்க, அவர்களது போராட்டத்துக்காக கம்யூனிஸ்டுகளை பழிபோடுவது ஏற்புடையதல்ல. இருப்பினும் இந்த குற்றச்சாற்றை பரிசாகவே ஏற்றுக் கொள்கிறோம். ஏனெனில், அடித்தட்டு மக்கள், உழைக்கும் வர்க்கத்தினரின் கோரிக்கைகளுக்கு கம்யூனிஸ்டு கட்சிகள்தான் எப்போதும் துணை நிற்கும். கம்யூனிஸ்டுகளையும், மாவோஸ்டுகளையும் ஒன்றுபடுத்தி முதலமைச்சர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். சத்துணவு ஊழியர்களின் போராட்டம் எவ்வித வன்முறையும் இன்றி ஜனநாயக முறைப்படிதான் நடந்தது. ஆனால், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பொதுக் கூட்டத்தில் தி.மு.க.வினர் கல்லெறிந்த சம்பவத்தையெல்லாம் அவர் மறந்துவிட்டார்.
இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் அது இல்லை, இது இல்லை என்று அவர் குறிப்பிடுகிறார். தி.மு.க அரசு செய்யாத நல்ல பல விஷயங்களை இடதுசாரிகள் ஆளும் மாநிலங்கள் கடைப்பிடிக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, தி.மு.க அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு மாவோயிஸ்டுகளைப் பற்றி நன்றாகவே தெரியும். அக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவரே மாவோயிஸ்டுகளின் பேரணியை துவக்கி வைத்துள்ளதையும் முதலமைச்சர் கருணாநிதி மறந்துவிட்டார்.
கம்யூனிஸ்டு கட்சிகளுடன் இதற்கு முன் தி.மு.க கூட்டணி வைத்திருந்ததே, அப்போது கம்யூனிஸ்டுகள் பற்றி தெரியவில்லையா?. தனக்கும், தனது கட்சிக்கு எதிர்காலம் சாதகமாக இல்லை என்பதாலேயே இத்தகைய கருத்துகளை முதலமைச்சர் கூறிவருகிறார். முதலமைச்சர் இனிமேல் இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீதெல்லாம் தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுவோர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும்போதுதான் மாவோயிஸ்டுகள் உருவாக்கப்படுகின்றனர். நியாயமான கோரிக்கைக்காக ஜனநாயக ரீதியில் போராடிய சத்துணவு ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும்.
தொழிற்சங்க உரிமைகளைப் பாதுகாப்பது, தொழிலாளர் நலச் சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவது, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 7ஆம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இப் போராட்டம் வெற்றி அடைவதோடு, வரலாற்றில் இடம் பிடிக்கக் கூடிய போராட்டமாக இருக்கும் என்று பரதன் கூறினார்.