நடிகர் தியாகராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் படம் துரோகி. டைரக்டர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி அனுபவத்துடன் இப்படத்தை இயக்கியிருக்கிறார் டைரக்டர் சுதா. நாயகர்களாக நடிகர் ஸ்ரீகாந்தும், வெண்ணிலா கபடிக்குழு விஷ்ணுவும் நடித்துள்ளனர். நாயகியாக நடிகை பூர்ணா நடித்திருக்கிறார். இவர்களோடு நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் தியாகராஜனும் இப்படத்தில் நடித்துள்ளார். ஒரு காலத்தில் முன்னணி நாயகர்களுக்கே சவால் விடும் வகையிலான படங்களில் நடித்து வந்த தியாகராஜன் குறித்து படத்தின் நாயகன் ஸ்ரீகாந்த் கூறுகையில், நாங்க ரிகர்ஸல் பார்க்குறப்ப சரியான நேரத்திற்கு அவரும் வந்து விடுவார். டயலாக் எல்லாம் டிஸ்கஸ் பண்ணுவோம். சீனியர் ஆர்ட்டிஸ்ட் என்ற எந்த பந்தாவும் இல்லாம எங்களுக்கு சொல்லிக் கொடுப்பார், என்று பாராட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், முதன் முதலாக நான் பெண் இயக்குனர் படத்தில் நடிச்சிருக்கேன். ஆண்களுக்கு சமமாக இப்ப பெண்கள் எல்லா துறையிலும் இருக்காங்க. அதுவும் முக்கியமா சொல்லணும்னா, வடசென்னை பகுதியில் சூட்டிங் எடுக்குறது சாதாரண விஷயம் இல்ல. 64 நாட்கள் சூட்டிங் சொல்லி 57 நாட்களில் முடிச்சிருக்காங்க. ஒரு பெண்ணின் பார்வையில் ஒரு ஆணை எவ்வளவு அழகா காட்ட முடியுமோ அந்த அளவுக்கு அழகா எடுத்திருக்காங்க, என்றார்.
முதன் முதலாக இரண்டு ஹீரோ கதையில் நடித்திருப்பது பற்றி ஸ்ரீகாந்திடம் கேட்டதற்கு, என்னைப் பொறுத்தவரை இரண்டு ஹீரோ ரோல் தப்பே இல்லை. இந்தி, தெலுங்கு படங்கள் போல இனி தமிழ்லயும் நிறைய ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கிற மாதிரி வாய்ப்புகள் வரும்னு நினைக்கிறேன். இது ரொம்ப ஆரோக்யமான விஷயம்தான், என்கிறார்.