Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருச்சியில் முதல்- அமைச்சர் கருணாநிதி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி:- காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை மத்திய அரசு கெஜெட்டில் வெளியிட வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளதே?
பதில்:- காவிரி நடுவர் மன்றம் அமைத்த பிறகு ஏற்பட்ட பிரச்சினைகள் உங்களுக்கு தெரியும். அந்த பிரச்சினை தீர்க்க தற்போது சட்ட ரீதியாக நடவடிக்கை கையாளப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. இதற்கிடையே தமிழக அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் மனிதாபிமான அடிப்படையில் நடந்து வருகிற பேச்சுவார்த்தைகளும், மனிதாபிமானம் மட்டுமல்ல மழை அபிமானமும் இருக்கிற காரணத்தால் நமக்கு கூடுமான வரையில் காவிரி நீர் கிடைத்து வருகிறது.
கே:- இந்த வருடத்துக்கு தேவையான நீரை கர்நாடக அரசு திறந்து விடும் என்று நம்புகிறீர்களா?
ப:- தேவையான நீரை கர்நாடக அரசிடம் கேட்போம். அவர்கள் தராத பட்சத்தில் அதை தருமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம்.
கே:- தமிழகம் வந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா அதிக மழை பெய்தால் மட்டும் தண்ணீர் திறந்து விடுவோம் என்று கூறியுள்ளாரே.
ப:- மழையில்லாமல் எதை திறந்து விடுவது?
கே:- இந்த வழக்கை விரைவுபடுத்தி கெஜட்டில் வரும் அளவுக்கு விரைவுபடுத்தப்படுமா?
ப:- நீதிமன்ற வழக்கை விரைவு படுத்த உத்தரவாதம் அளிக்க முடியாது. வழக்கு முடிந்ததும் விரைவுபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கே:- நிருபமா ராவ் இலங்கை சென்று வந்த பிறகு உங்களை சந்தித்தார்களா? இலங்கை தமிழர்களுக்கு மறு வாழ்வு நடவடிக்கை குறித்து உறுதி கூறினார்களா?
ப:- இலங்கை செல்லும் முன்பு சந்தித்தார். அங்கு இலங்கை தமிழகர்களுக்கு தேவையான அவர்கள் நலம்பேண தேவையான திட்டங்களை இலங்கை அரசிடம் வலியுறுத்துவேன் என்று கூறிச் சென்றார்.
கே:- வேலை வாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டதே?
ப:- கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்களில் அதுவும் ஒன்று. தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அடிப்படையில் வேலை என்ற தீர்மானத்தை நிறைவேற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கே:- மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறி விட்டது என எதிர்கட்சிகள் கூறி போராட்டங்கள் நடத்தி வருகிறதே?
ப:- எங்களை பொறுத்த வரை தமிழகத்தில் விலைவாசி உயர்வு தாக்கத்தை எந்தளவு குறைத்து அதை வாங்கி புசிக்கும் மக்களுக்கு எந்தளவு சுமையை குறைவாக்க முடியுமோ அந்தளவுக்கு குறைத்து உள்ளோம்.
கே:- டெல்லியில் பெட்ரோலுக்கு விற்பனை வரியை குறைத்ததுபோல தமிழ் நாட்டிலும் குறைத்து விலை குறைக்கப்படுமா?
ப:- மீண்டும் குறைக்க முடியாது.
கே:- ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது என மத்திய அரசிடம் புகார் கூறி உள்ளார்களே?
ப:- 2001ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது என்ன பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்ததோ அந்த அளவு பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு உள்ளது.
கே:- தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மாதம் 1 ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி விட்டு ரூ.67 கோடிக்கு சொத்து குவித்த வழக்கு 15 ஆண்டாக தொடர்ந்து வருகிறதே?
ப:- சட்டம் அனை வருக்கும் பொதுவானது. நீதி அனைவருக்கும் சமமானது என முழங்கி விட்டு ஆனால் அது தன்னைத் தவிர என்று அடைப்புக்குள் போட்டுக் கொள்கிறவர்களை என்ன சொல்வது?
கே:- மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டும் சில சங்கங்கள் போராட்டம் நடத்துகிறார்களே?
ப:- இதை அந்த சங்கங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
கே:- வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க. கூட்டணி விரிவுப் படுத்தப்படுமா?
ப:- தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி நல்ல இணக்கமானதாகவும் நலமாகவும், பலமாகவும் உள்ளது. எங்கள் கூட்டணியில் வேறு கட்சிகளை சேர்ப்பது பற்றி நாங்களும், காங்கிரசும் பேசி முடிவு செய்வோம்.
கே:- தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ள நிலையில் திருச்சியில் நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில் ஜெயலலிதா தொண்டர்களை பார்த்து நம்பிக்`கை’யோடு இருங்கள் என்று சமிஞ்ஞை செய்து உள்ளாரே?
ப:- எந்த கட்சி தலைவரும் தங்கள் கட்சி தொண்டர்களை பார்த்து நம்பிக்கை இல்லாமல் இருங்கள் என்று கூறுவார்களா?
கே:- ஜெயலலிதாவும், விஜயகாந்தும் மக்கள் விரும்பும் கூட்டணி அமைப்போம் என்று கூறுகிறார்களே அப்படி என்றால் என்ன கூட்டணி?
ப:- அது நீங்கள் விரும்பும் கூட்டணி.
கே:- 2011ல் தி.மு.க. கூட்டணிக்கு எத்தகைய வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
ப:- 2011லும் தி.மு.க. ஆட்சி தொடரும்.
கே:- நவம்பர் 7-ந்தேதி மத்திய மந்திரி சபை, விரிவாக்கம் செய்யப்படும் என்று பிரதமர் அறிவித்து உள்ளார். அதில் தி.மு.க. சார்பில் மேலும் அமைச்சர்கள் பதவி கேட்கப்படுமா?
ப:- இல்லை
கே:-தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக இன்னும் நடைமுறைபடுத்துவதில் தாமதம் ஆகிறதே?
ப: இதில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து அனைவரும் ஏற்றுக் கொள்ளும படியான முடிவை அறிவிக்க கால அவகாசம்கேட்டு உள்ளார்கள். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அது நடை முறைப்படுத்தப்படும்.
கே:- கிராமப்புற ஆவின்பால் ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்களே.
ப:- பரிசிலீக்கப்படும்.
முன்னதாக ரூ.12 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்- அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மேலும் ரூ. 1 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாலுகா அலுவலக புதிய கட்டிடம் உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களையும் முதல்- அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்டஉதவிகள் வழங்கினார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: