சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான பூவிலங்கு படத்தின் மூலம் 1984ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் முரளி. 46 வயதான அவர் பகல் நிலவு, இதயம், அதர்மம், வெற்றி கொடி கட்டு, காலமெல்லாம் காதல் வாழ்க, அள்ளித்தந்த வானம், சுந்தரா டிராவல்ஸ், தேசியகீதம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். நேற்று இரவு வீட்டில் இருந்தபோது நெஞ்சுவலிப்பதாக கூறிய முரளி, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக முரளியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. முரளியின் மரணச் செய்தியறிந்த கோலிவுட் பிரபலங்கள் பலரும் முரளியின் வீ்ட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
நடிகர் முரளி பிரபல கன்னட பட தயாரிப்பாளர் சித்தலிங்கையாவின் மகன் ஆவார். முரளியின் தந்தை கன்னடர் என்றாலும் அவரது தாய் ஒரு தமிழ்ப்பெண். பெங்களூருவில் பிறந்த இவர், சினிமாத்துறைக்கு வந்த பின்னர் தமிழ்நாட்டிலேயே இருந்தார். தமிழ் தவிர பிற மொழி படங்களில் நடிக்காதவர் என்ற பெருமையும் முரளியை சேரும். நடிகர் முரளி கடைசியாக நடித்த படம் பானா காத்தாடி. முரளியின் மகன் அதர்வா நாயகனாக அறிமுகம் ஆன இந்த படத்தையும் முரளியை அறிமுகப்படுத்திய சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரித்தது. தான் நடித்த பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவராக நடித்த முரளி, கடைசியாக நடித்த பானா காத்தாடியிலும் எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு மாணவராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகன் நடித்த முதல் படமே முரளிக்கு கடைசி படமாக அமைந்து விட்டது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திரையுலகை சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என யார் அழைப்பிதழ் வைத்தாலும் நேரில் சென்று வாழ்த்துவதை வாடிக்கையாக கொண்டிருந்த முரளியின் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.
நடிகர் முரளி கடல்பூக்கள் படத்திற்காக 2001ம் ஆண்டு தமிழக அரசின் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார். முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா என்ற மகன் மற்றும் காவ்யா என்ற மகள் உள்ளனர். மகள் காவ்யா எம்.பி.பி.எஸ். படித்து முடித்துள்ளார். அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நடிகர் முரளி, கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் திருமணம் பேசி முடித்துள்ளார். மே மாதம் பிரமாண்டமாக திருமண விழாவை நடத்த திட்டமிட்டிருந்தாராம் முரளி. அதற்குள் இப்படியொரு சோக முடிவு ஏற்பட்டு விட்டது என்று முரளியின் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
முரளியின் இறுதிச்சடங்குகள் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. வளசரவாக்கம் வீட்டில் இருந்து புறப்படும் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. பெசன்ட்நகர் மின் மயானத்தில் உடல்தகனம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளியின் மறைவையொட்டி நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் அறிவித்துள்ளார்.