Thursday, February 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களுக்கு ரூ.50 லட்சம் உதவி: “வருமானத்தில் பெரும் பகுதியை ஏழைகளுக்கு செலவிடுகிறேன்” நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேச்சு

வடசென்னை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தண்டையார் பேட்டையில் நடந்தது. தே.மு.தி.க. பகுதி செயலாளர் முகமது ஜான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் யுவராஜ் முன்னிலை வகித்தார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இதில் கலந்து கொண்டார். அப்போது பேசியதாவது:-
நான் மதுரையில் வாழ்ந்த காலத்தில் இருந்தே நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். பள்ளி வாசல்களுக்கு தொடர்ந்து அரிசி வழங்கி வருகிறேன். இல்லாதவர்களுக்கு இதை செய்கிறேன்.
நபிகளின் ஐந்து கட்டளைகளில் ஒன்று ஏழைகளுக்கு உதவுதல் தான் முக்கியமானதாக போற்றப்படுகிறது. வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை தானம் செய்ய வேண்டும். வருமானமே கடவுள் கொடுத்தது தான். எனவே, நானும் எனது வருமானத்தில் பெரும் பகுதியை ஏழைகளுக்கு செலவு செய்து வருகிறேன்.
“பெண்கள் நாட்டின் கண்கள்” என்ற திட்டத்தை நான் தொடங்கி இதுவரை ரூ.50 லட்சம் உதவி செய்து இருக்கிறேன். தனி மனிதனாக யாராவது இப்படி செய்து இருக்கிறார்களா? அரசியல்வாதிகள் குல்லா அணிந்து மக்களை ஏமாற்றுகிறார்கள். நான் அப்படிப்பட்டவன் அல்ல.
எனக்கு அனைத்து மதங்கள் மீதும் நம்பிக்கை உண்டு எனது வீட்டிலும், அலுவலக அறையிலும் அனைத்து மத கடவுள் படங்களும் உள்ளது. ஏழைகளுக்கு நல்வாழ்வை அளிக்க வேண்டும் என்பது தான் கடவுளிடம் நான் வைக்கும் கோரிக்கை. என்னிடம் ஆட்சியை கொடுங்கள் நான் ஏழைகளை வாழ வைக்கிறேன்.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு இரண்டு கட்சிகள் தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்துள்ளன. அந்த இரண்டு கட்சிகளும் தவறு செய்துள்ளன. அதனால் தான் என்னை ஆட்சியில் அமர்த்துங்கள் என்று கூறுகிறேன்.
மக்கள் அளிக்கும் ஆதரவால் தான் அக்கிரமங்களை நான் எதிர்த்து வருகிறேன். என்னிடம் உள்ள சொத்துக்களை பறித்தாலும், என்னை தாக்கினாலும் அவற்றை கண்டு அஞ்சமாட்டேன். என்னை வாழ வைத்த மக்களுக்காக எதுவும் செய்வேன். கட்சியை தொடங்குவது பஜனை பாடுவதற்கு அல்ல.
எனக்கு யாரைக் கண்டும் பயம் இல்லை. சிறுபான்மை சமூகங்களின் முன்னேற்றத்துக்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இதை சுட்டிக்காட்டினால் சிலருக்கு கோபம் வருகிறது. சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் வறுமை ஒழியவில்லை. காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலின் போது “ஏழைகளுக்கு மானிய விலையில் 25 கிலோ கோதுமை, கிலோ ரூ.3 என்ற விலையில் நல்ல அரிசி வழங்குவோம்” என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை அதை நிறைவேற்றவில்லை.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
நிகழ்ச்சியில் வ.பாரத்தசாரதி, எல்.கே.சுதீஷ், கிருஷ்ணமூர்த்தி, சந்திரபிர காஷ், தியாகராஜன், ப.மதிவாணன், ராயபுரம் வெ.பாபு, சிமான்சேரன், ஜமால் மொய்தீன், லிங்கம், பாலாஜி, வேல்முருகன், தண்டபாணி, செல்வம், அப்பாஸ், சாகுல் அமீது, தென்னரசு, சந்திரசேகர், அன்புரோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நூர்முகமது நன்றி கூறினார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: