எக்கச்சக்க விளம்பர படங்களை இயக்கிய அனுபவத்துடன் டைரக்டர் விஜய் ஆதித்யா இயக்கி வரும் புதிய படம் ஈசல். விளம்பத்துறையில் இருந்தபோது ஒரு நிமிடத்தில் ஓருடஜன் தகவல்களை கச்சிதமாக சொல்லி பாராட்டை பெற்ற விஜய் ஆதித்யா, முதல் படத்திலேயே ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என நினைத்ததன் விளைவாக கின்னஸ் சாதனையில் இடம்பெறும் வகையில் பாடல் ஒன்று உருவாகியிருக்கிறது. ஆம்! 24 மொழிகளில் உள்ள வார்த்தைகளை பயன்படுத்தி பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார் விஜய் ஆதித்யா.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, குஜராத்தி, கொங்கணி உள்ளிட்ட 24 மொழிகளில் உள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி இப்பாடலை மாஸ் வெங்கட், ராய் ஆகியோர் எழுதியுள்ளனர். “வந்தேமாதரம்” பாடலைப்போன்று தேசப்பற்றுமிக்க பாடலான இப்பாடலை 24 மொழிகளில் உள்ள பாடகர்கள், பாடகிகளை வைத்து சமீபத்தில் பதிவு செய்தனர். நடிகர் பார்த்திபன் மலையாள வரிகளையும், நடிகர் சுரேஷ் கோபி தமிழ் வரிகளையும் பாடியுள்ளனர். இதுபோல ஒவ்வொரு மொழிக்காரரும், இன்னொரு மொழியில் பாடியுள்ளனர். இப்படி ஒரு பாடல் இதுவரை எங்குமே பாடப்படவில்லையாம். எனவே இது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் என படத்தின் இயக்குநர் விஜய் ஆதித்யா கூறுகிறார். அதுமட்டும் இன்றி இந்த 24 மொழிகளுக்கான காட்சிகளை அந்தந்த ஊரிலேயே படமாக்கியுள்ளார்கள் என்பது கூடுதல் சுவாரஸ்யம்