Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அந்தர் பல்டி அடித்த சல்மான்கான்

மும்பை தாக்குதல் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட நடிகர் சல்மான்கானுக்கு எதிர்ப்பு வலுத்தது. இதையடுத்து அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். நாட்டையே உலுக்கிய இந்தத் தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக சமீபத்தில் நடிகர் சல்மான்கான் பாகிஸ்தான் டிவிக்கு அளித்த பேட்டியில், மும்பை தாக்குதலின்போது இரண்டு பெரிய ஓட்டல்கள் தாக்குதல்களுக்கு ஆளானதாலும், அதில் பணக்காரர்களும், செல்வாக்கான மனிதர்களும் இறந்ததாலும்தான் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு விட்டது. இந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் அரசைக் குற்றம் சொல்லக்கூடாது. மும்பை தாக்குதல் பாதுகாப்பு துறையின் தோல்வியால்தான் நிகழ்ந்தது, என்று கூறியிருந்தார்.
சல்மான்கானின் இந்த கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அரசு மற்றும் அரசியல்வாதிகள் தரப்பில் சல்மானுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சல்மான்கான் தனது கருத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ட்விட்டர் இணையதளத்தில் அவர், மும்பை தாக்குதல் குறித்த எனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா உயிர்களும் சம மதிப்பு கொண்டவைதான். உலகின் எந்த இடத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தாலும் அது மன்னிக்க முடியாததுதான், என எழுதி அந்தர் பல்டி அடித்துள்ளார்.

Leave a Reply