108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் மற்றும் பெரிய கோயில் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலைப் பற்றிய ஒரு சில புராண விஷயங்களைப் பற்றி இங்கு கூற விரும்புகிறோம்.
திருச்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ரங்கநாதர் ஆலயம் ஒன்றல்ல, இரண்டல்ல பல்வேறு சிறப்புகளைப் பெற்றத் தலமாகும். இந்த கோயில் இந்த ஆண்டுதான், இவரால் கட்டப்பட்டது என்பது கூட அறியப்படாத அளவிற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. அதன் பின் வந்த பல மன்னர்கள் இந்த கோயிலின் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தகவல்கள் மட்டுமே கிட்டியுள்ளது.
கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றிய மண்டபம் இத்தலத்தில் உள்ளது. ராமானுஜர் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கோயிலுக்கு வந்து பூஜை முறைகளை ஒழுங்குபடுத்தி அமைத்து, இங்கேயே இருந்துள்ளார். கோயில் வளாகத்தில் தான் அவர் சமாதி அடைந்துள்ளார். அவர் உட்கார்ந்த நிலையில் பெருமாளின் வசந்த மண்டபத்தில் சமாதி ஆகியுள்ளார்.
மூலவர் ரங்கநாதனோ, ஆதிசேஷன் மீது தனியாக படுத்தபடி பள்ளி கொண்டுள்ளார். இந்த நிலையில் நாம் ரங்கநாதனைக் காண வேண்டும் என்றால் அதற்கு ஸ்ரீரங்கத்திற்கு நிச்சயமாகப் போகத்தான் வேண்டும்.
மூலவரின் விமானம் தங்கக் கோபுரம் ஆகும். மூலவரது விமானத்தை முதலில் 23 கிலோ தங்கம் கொண்டு தங்க கோபுரமாக மாற்றியமைத்தனர். பின்னர் சில முறை தங்கம் கூடுதலாக சேர்க்கப்பட்டதும், மெருகேற்றப்பட்டதும் உண்டு. கோபுரத்தின் பாதுகாப்பிற்காக கோபுரத்தைச் சுற்றி மின் வேலி அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரங்கநாதர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கத்தை வாழ்வில் ஒரு முறை சுற்றி வந்தால் போதும், நாம் இந்துவாகப் பிறந்ததன் அர்த்தம் ஏற்பட்டுவிடும். கொள்ளிடமும், காவிரியும் இரண்டாகப் பிரிந்த இடத்தில் அமைந்த ஒரு சிறிய தீவினை ஒத்த இடமாக அமைந்துள்ளது இந்த தலம்.
இந்த கோயிலுக்கு செல்வதென்றால், அவசர அவசரமாக போய்ப் பார்க்காமல், ஒவ்வொரு இடத்தையும் ரசித்தும், அதன் சிறப்பு பற்றி அறிந்து கொண்டும் நிதானமாக சென்றால், ஒரு தெய்வீக அம்சம் பொருந்திய ரங்கநாதர் ஆலயத்தை வாழ்நாள் முழுவதும் மறக்காமல் இருப்பீர்கள்.
Thanks Webdunia