Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இத்தாலியர்களை கவர்ந்த விக்ரம் பேட்டி!!

வெனிஸ் திரைப்பட விழாவில் ராவணன் திரையிடப்பட்ட உற்சாக பூரிப்புடன் இருக்கிறார் விக்ரம். சிறந்த சினிமா படைப்பாளிக்கான விருதை பெற்றிருக்கும் ராவணன் படத்தை நூற்றுக்கணக்கான இத்தாலியர்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்திருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சியை நிருபர்களிடம் பகிர்ந்து கொண்ட விக்ரம் கூறியதாவது:-
இந்த வெனிஸ் பயணம், மனரீதியான பெரிய சந்தோஷம், உற்சாகம் தந்த அனுபவமா இருந்தது. வெனிஸ் ஃபிலிம் பெஸ்டிவல் பெரிய அளவுல புகழ் பெற்றது. இப்போ நடந்தது 67வது திரைப்பட விழா. உலக நாடுகளிலிருந்து படங்கள் வரும். இந்த வருஷமும் 86 படங்கள் வந்திருச்சாம். வெவ்வேறு 4 பிரிவுகளில் திரையிடப்பட்டன. அதில் 24 படங்கள் போட்டிக்குப் போனது. இதற்கான போட்டியில் ஜெயிச்சவை கோல்டன் லயன் அவார்டு பெறும். அப்படி ஒரு சிறந்த கவுரவம்தான் மணி சாருக்கு கிடைச்சுது. அதை வாங்கத்தான் மணிசார் போனார். இந்த பெருமைக்குரியவரின் ‘ராவணன்’ படமும் விழா நிகழ்ச்சியில் திரையிட்டாங்க. அதில் நடிச்சவன்கிற முறையில் நானும் போனேன்.
அந்த விழாவுல ‘ராவணன்’ படம் தமிழில் திரையிடப்பட்டது. அந்த ஆடிட்டோரியத்தில் அறுநூறு எழுநூறு பேர் இருப்பாங்க. எல்லாரும் பெரும்பாலும் இத்தாலியன்ஸ். இந்தியர்கள் விரல்விட்டு எண்ணுற அளவுக்கு நாலைஞ்சுபேர்தான் இருந்தாங்க. வந்தவங்க எல்லோருமே பொதுவான ஆடியன்ஸ். சினிமா விமர்சகர்களோ, அவார்டு கமிட்டியைச் சேர்ந்தவர்களோ கிடையாது. கமிட்டியிலிருந்து 10 பேருக்குள்தான் படம் பார்க்க வந்திருப்பாங்க. படம் போடப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே ஆரவாரம். ‘உயிரே போகுது’ பாடலுக்கு அத்தனை வரவேற்பு. ‘கோடு போட்டா’ பாட்டுக்கு கைதட்டல் மட்டுமல்ல எழுந்து ஆடவே ஆரம்பிச்சிட்டாங்க. ப்ரியாமணி சம்பந்தப்பட்ட காட்சிகளில் அத்தனை ஈடுபாடா ரசிச்சாங்க. நம்மூர் தியேட்டரில் மொழி தெரிஞ்சு ரசிக்கிறது வேறு. மொழி தெரியாத நம்மூர் கலாச்சாரம் தெரியாத ஆடியன்ஸ் ரசிக்கிறதை ஒவ்வொருத்தர் முகத்தையும் அருகிலிருந்து நேருக்குநேர் பார்க்க மனம் பறந்திச்சு.
ஆடியன்ஸின் வரவேற்பைப் பார்த்து விருது தேர்வுக் குழுவினருக்கு மகிழ்ச்சி. சரியான நபரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கோம்னு அதன் டைரக்டர் மார்க்கோ முல்லர் சொன்னார். எங்களைப் பார்த்து ரசிகர்கள் ‘பிராவோ’ன்னு பலமா கத்தினாங்க. ப்ராவே… ப்ரோவோ அலையலையா வந்திச்சு… ப்ராவோன்னா பிரமாதம்னு அர்த்தமாம். சிலர் எக்சலன்ட்னு கத்தினாங்க அவர்களிடம் இருந்த உற்சாகம் அளவிட முடியாதது. எனக்கு சந்தோஷத்தில் கண்ணில் கண்ணீர் முட்டிச்சு… அழுகையே வந்திச்சு. என் வாழ்க்கையில் வெனிஸ் திரைப்பட விழா சந்தோஷத்தை மறக்கவே முடியாது. என் வாழ்க்கையில சேது ஹிட்டானப்பே, தேசிய விருது கிடைச்சப்பே அந்நியன் படத்துக்கு வரவேற்பு கிடைச்சப்போ, என் குழந்தைகள் பிறந்தப்போ எல்லாம் நான் அளவில்லாத சந்தோஷப் பட்டேன். அந்த வரிசையில் இந்த வெனிஸ் திரைப்பட விழா அனுபவமும் இருக்கு.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: