பகவான் – இப்படியும் ஒரு படத்திற்கு பெயர் சூட்டியுள்ளனர் கோலிவுட்டில்! பகவான் என்றதும் பக்தி படமாக்கும் என ஒதுங்கி பதுங்கி விடாதீர்கள். பத்தும் நிறைந்த படமாக்கும் என்கிறார் இப்படத்திற்கு கதை – திரைக்கதை – வசனம் எழுதி இயக்கவும் செய்திருக்கும் ஏ.ஆர்.சைலேஷ்.
அருண் பிலிம் என்டர்டெயின்மெண்ட் வழங்க, ஸ்ரீ அன்னபூர்ணா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் மாதவி மோகன், ஆஷா முரளிதரனுடன் இணைந்து தயாரிக்கும் படம்தான் பகவான். மலையாளத்தில் 5 படங்களை தயாரித்துள்ள இந்நிறுவனம் மனசே மவுனமா என்ற தமிழ்படத்தையும் தயாரித்திருக்கிறது. மேற்படி மனசே மவுனமா படத்தில் காநாயகராக நடித்த யுவராஜே கதாநாயகனாக நடிக்கும் பகவான் படத்தில் உதயதாரா, வர்ஷினி ஆகிய இரட்டை நாயகிகள். இவர்களுடன் நிழல்கள் ரவி, மறைந்த ராஜன் பி.தேவ், ஷகீலா, ஷர்மிளா, சாப்ளின் பாலு, பெஞ்சமின், கிரேன் மனோகர் உள்ளிட்டோரும் நடிக்க, ஒத்தப்பாட்டுக்கு குத்து டான்ஸ் போட்டிருக்கிறாராம் லக்ஷா.
ஒரு மனிதனுக்குள் கத்தியும் இருக்கிறது; பேனாவும் இருக்கிறது. அவன் கத்தியை எடுப்பதும், பேனாவை எடுப்பதும் இந்த சமுதாயத்தை பொறுத்தே இருக்கிறது. இப்படத்தின் நாயகன் தன் ஆயுதமாக எதை எடுக்கிறான் என்பதே படத்தின் கதை என்கிறார் டைரக்டர் சைலேஷ். அவருக்கும், அவரது கதைக்கும் உறுதுணையாக இருக்கின்றனராம் இசையமைப்பாளர் கே.கே.வும், ஒளிப்பதிவாளர் காசி விஸ்வாவும் அடங்கிய மொத்த யூனிட்டும்.