Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கிணற்றைக் காணலை . . . கிணற்றைக் காணலை . . .

சென்னை : வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், அரசு சார்பில் வெட்டப்பட்ட கிணற்றைக் காணவில்லை எனக் கூறி, சினிமா பாணியில் வக்கீல் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ள வெற்றிவேல் என்பவர் வேலூர் மாவட்டம், அரக்கோணம் கிராமிய போலீஸ் ஸ்டேஷனில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகா, இச்சிபுத்தூர் கிராமத்தில் நான் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். கடந்த 70 ஆண்டுகளாக எங்கள் மூதாதையர் இதே முகவரியில் வசித்துள்ளனர். இச்சிபுத்தூர் கிராமத்தில் புஞ்சை சர்வே எண்: 533/1பி என்ற நிலத்தில் கடந்த 83-84ம் ஆண்டில் பொதுப்பணித் துறையால் ராட்சத குடிநீர் கிணறு வெட்டப்பட்டது. அந்த கிணறு, வறட்சி நிவாரணத்துக்காக மாநில அரசால் வெட்டப்பட்டது.ராட்சத குடிநீர் கிணறு இச்சிபுத்தூர் மக்களின் குடிநீர் மற்றும் அத்தியாவசிய உபயோகத்திற்கு பயன்பட்டு வந்தது. அக்கிணற்றை சுற்றியுள்ள நிலம், மயான பாதைக்காக பயன்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி வழக்கம் போல் தண்ணீர் எடுக்க கிணற்றுக்கு சென்றபோது, அங்கு கிணற்றைக் காணவில்லை.
இதுகுறித்து, இச்சிபுத்தூர் கிராம மக்கள் சார்பில், 2008ம் ஆண்டு முதல் வட்டார வளர்ச்சி அலுவலர், அரக்கோணம் ஜமாபந்தி அதிகாரி, வேலூர் கலெக்டர், ராணிப்பேட்டை கோட்டாட்சியர், அரக்கோணம் பொதுப்பணித்துறை பொறியாளர், அரக்கோணம் வட்டாட்சியர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே, போலீஸ் சார்பில் இப்புகார் மீது விசாரணை நடத்தி காணாமல் போன குடிநீர் கிணற்றை கண்டுபிடித்துத் தர வேண்டும். கிணற்றை களவாடிய மர்ம ஆசாமிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வெற்றிவேல் கூறியுள்ளார்.
சினிமா பாணியில் இந்த புகார் மனுவை ஐகோர்ட் வக்கீல் கொடுத்திருப்பதால், இந்த மனு மீது போலீசார் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என்பதைக் காண இச்சிபுத்தூர் கிராம மக்கள் மட்டுமின்றி, அனைவரும் ஆர்வமுடன் உள்ளனர்.

One Comment

Leave a Reply