Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பதவி ஏற்ற 70 நாளில் அமெரிக்க ஜனாதிபதி ரீகன் சுடப்பட்டார்

ஆங்கில திரைப்பட (ஆலிவுட்) உலகில் பிரபல நடிகராக இருந்து அமெரிக்க ஜனாதிபதி ஆனவர் ரொனால்டு ரீகன். அமெரிக்க அரசியல் வரலாற்றில் நடிகர் ஒருவர் ஜனாதிபதி ஆனது அதுவே முதல் முறை. 70 வயதான ரீகன் 1981_ம் ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதி ஆனார். அவர் பதவி ஏற்ற 70 நாளில் மிகப்பெரியதொரு மரண போராட்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வாஷிங்டன் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் 31_3_1981 அன்று தொழிற்சங்க மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு ரீகன் வெளியே வந்தார். அவரை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு பேட்டி கண்டனர். நிருபர்களின் கேள்விகளுக்கு ரீகன் பதில் அளித்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஒரு மர்ம மனிதன் திடீர் என்று ரீகனை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். 6 முறை துப்பாக்கி குண்டு வெடித்தன. இதில் ஒன்று ஜனாதிபதி ரீகனின் இடது மார்பில் பாய்ந்தது.
ரீகனின் அருகில் நின்று கொண்டிருந்த அதிபரின் பத்திரிகை செயலாளர் ஜேம்ஸ் பிராடி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேரும், போலீஸ்காரர் ஒருவரும் குண்டு தாக்கி காயம் அடைந்தார்கள்.
போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பாக ரீகனை சூழ்ந்து கொண்டு அருகில் நின்ற குண்டு துளைக்க முடியாத காருக்கு கொண்டு சென்றார்கள். பின்னர் அவரை காருக்குள் தள்ளி கதவை அடைத்தார்கள். கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு விரைந்தது. ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை அருகில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக ஆஸ்பத்திரிக்கு ரீகனை கொண்டு சென்றார்கள். அங்கு அவருக்கு ஆபரேஷன் நடந்தது. மார்பில் குண்டு பாய்ந்து இருந்ததால் அதை அகற்ற 6 அங்குல பகுதியில் ஆபரேஷன் செய்தார்கள். ஏறத்தாழ 3 மணி நேரம் சிகிச்சை நீடித்தது. இடதுபுற நுரையீரலில் (சுவாசப்பை) இருந்து குண்டு அகற்றப்பட்டது. 2 லிட்டர் ரத்தம் அவருக்கு செலுத்தப்பட்டது. ஆபரேஷன் முடிந்த சிறிது நேரத்தில் ரீகனுக்கு நினைவு திரும்பியது. ரீகன் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ரீகனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் டென்னிஸ் ஒரியா கூறியதாவது:-
“ரீகன் உடல்நிலை உறுதியாக இருக்கிறது. கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆஸ்பத்திரியில் 2 வார காலம் தங்கி சிகிச்சை பெறுவார். அதன் பிறகு 3 மாதங்கள் வரை ஓய்வு எடுக்கவேண்டும்.
இவ்வாறு டாக்டர் டென்னிஸ் ஒரியா தெரிவித்தார்.
இந்த கொலை முயற்சியில் ரீகன் அதிர்ஷ்டவசமாகவே உயிர் தப்பினார். குண்டு 4 அங்குலம் தள்ளிப் பாய்ந்து இருந்தால் ரீகனின் இதயத்தை தாக்கி இருக்கும். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருக்கும்.
ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போதும் ரீகன் சுய நினைவுடன் நன்றாக இருந்தார். மனைவி நான்சி மற்றும் உதவியாளர்களுடன் சிரித்து பேசிக்கொண்டே ஆஸ்பத்திரிக்குள் நடந்தே சென்றார்.
ரீகன் சுடப்பட்டபோது அவரது 4 மகன்களும் வெளிïரில் இருந்தனர். தகவல் கிடைத்ததும் வாஷிங்டனுக்கு விரைந்து வந்து ரீகனை (தந்தையை) சந்தித்தார்கள். அவர்களிடம் ரீகன் பேசும்போது, “துப்பாக்கி குண்டு எனது இடது மார்பை துளை போட்டதுடன் அன்று நான் போட்டிருந்த புதிய சட்டையையும், `கோட்’டையும் நாசமாக்கி விட்டது” என்று குறிப்பிட்டார். துணை ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் வாஷிங்டன் விரைந்து வந்து ரீகனை சந்தித்தார். ஆஸ்பத்திரியில் இருந்தபடியே ரீகன் தனது அலுவல்களை செய்தார். அரசாங்க சட்டம் ஒன்றில் கையெழுத்துப் போட்டார். உதவியாளர் உள்பட 4 பேர் காயம் அடைந்ததை கேள்விப்பட்டு ரீகன் கண் கலங்கினார். ரீகனை 10 அடி தூரத்தில் நின்று மர்ம வாலிபன் சுட்டான். உடனே ரகசிய போலீசார் பாய்ந்து சென்று அவனை மடக்கி பிடித்து கைது செய்தார்கள்.
அந்த வாலிபன் பெயர் ஜான் வார்நோக் கிங்லி (வயது 25). அவன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து வாஷிங்டன் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவனிடம் நீதிபதி 45 நிமிடம் விசாரணை நடத்தினார். நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு அவன் “ஆம்” என்று பதில் சொல்லி சாதாரணமாகவே காணப்பட்டான். கிங்லி பற்றி கோர்ட்டில் அரசு தரப்பில் வக்கீல் கூறியதாவது:- “கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9_ந்தேதி நாஷ்வில் நகரில் கர்ட்டர் (அப்போதைய ஜனாதிபதி) தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்தார். அந்த இடத்துக்கு அருகே ஜான் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து 3 கைத்துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினார்கள்.
கல்லூரி படிப்பை தொடராமல் நிறுத்தியபின் கிங்லி நாடோடி போல கடந்த 9 மாதங்களாக பல்வேறு ஊர்களில் சுற்றி திரிந்தான். துப்பாக்கிகளை கண்டால் வாங்கி வைத்துக்கொள்கிறான்.” இவ்வாறு அரசாங்க வக்கீல் தெரிவித்தார்.
கடந்த 20_ம் நூற்றாண்டில் ரீகனுக்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்த 6 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்கள். ரீகன் 7_வது ஜனாதிபதி ஆவார்.
1901_ம் ஆண்டு செப்டம்பர் 6_ந்தேதி வில்லியம் மெக்கென்லி நிïயார்க் நகரில் சுடப்பட்டார். 8 நாட்கள் கழித்து அவர் இறந்தார். 1914 அக்டோபர் 12_ந்தேதி தியோடர் ரூஸ்வெல்ட், 1933 பிப்ரவரி 15_ந்தேதி பிராங்ளின் டி ரூஸ்வெல்ட், 1950 நவம்பர் 1_ந்தேதி ட்ரூமன் ஆகியோரும் சுடப்பட்டார்கள். 1963_ம் ஆண்டு நவம்பர் மாதம் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். பிறகு 1976_ல் போர்டு, 2 முறை நடந்த கொலை முயற்சியில் தப்பினார். 7_வதாக ரீகனை சுட்டுக்கொல்ல முயற்சி நடந்தது. ரீகனை சுட்டதாக பிடிபட்ட கிங்லியின் தந்தை பெரும் பணக்காரர். டென்வர் நகரில் பெட்ரோல் வியாபாரம் செய்து வந்தார்.
துணை ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்சுக்கு ஆதரவாக கிங்லி குடும்பத்தினர் பிரசாரம் செய்ததாகவும், தேர்தல் நிதி வழங்கியதாகவும் கூறப்பட்டது. ஜார்ஜ் புஷ்சின் மூத்த மகன் நெயிலூப் என்பவரும் கிங்லியின் அண்ணன் ஸ்காட் என்பவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதனை புஷ் அலுவலகம் மறுத்தது. ரீகனை சுடுவதற்கு முன்னதாக கிங்லி ஒரு ஓட்டலில் தங்கி இருக்கிறான். அந்த அறையில் போலீசார் சோதனை போட்டபோது 2 கடிதங்கள் சிக்கின. அதில் ஒன்று ஆலிவுட் நடிகை ஜோட் போஸ்டர் பெயருக்கு எழுதப்பட்டது. சம்பவத்திற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறான். ஆனால் அதை தபால் பெட்டியில் போடவில்லை. கிங்லி கடிதம் எழுதிய நடிகை போஸ்டருக்கு 18 வயது. திருமணம் ஆகாதவர். பல ஆலிவுட் சினிமாக்களில் நடித்து இருக்கிறார். அவர் நடித்த படங்களில் “டாக்சி டிரைவர்” புகழ் பெற்றது. ஒரு அரசியல்வாதி சுட்டுக் கொல்லப்படுவதுதான் அந்தப் படத்தின் கதை. அந்த படத்தில் ஜோட் போஸ்டர் சிறு வயது விபசாரியாக நடித்து இருந்தார். இந்த வேடம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரீகன் இந்த படத்தை பற்றி விமர்சனம் செய்யும்போது ஜோட் போஸ்டரை குறை கூறி இருந்தார். இதனால் நடிகையின் மானசீக ரசிகனான கிங்லி ஆத்திரம் அடைந்திருந்ததாக கூறப்பட்டது.
கிங்லியின் பெட்டியை சோதனை போட்டபோது அதில் நடிகை ஜோட் போஸ்டரின் கவர்ச்சிப் படங்கள் கண்டு எடுக்கப்பட்டன. அதோடு நடிகைக்கு அவன் ஏராளமான காதல் கடிதங்களும் எழுதி இருக்கிறான். கிங்லி பற்றி நடிகையிடம் விசாரணை நடத்தினார்கள். “அவன் எனக்கு ஏராளமான காதல் கடிதங்கள் எழுதி இருக்கிறான். ஆனால் எனக்கு அவனை தெரியவே தெரியாது. நேரில் பார்த்தது இல்லை. எனக்கும், அவனுக்கும் வேறு எந்த தொடர்பும் கிடையாது” என்று நடிகை ஜோட் போஸ்டர் கூறிவிட்டார். சுடப்பட்ட ரீகனை, போலீசார் சூழ்ந்து கொள்கிறார்கள். (பின்னால், மர்ம மனிதனை போலீசார் பிடித்துக் கொண்டதையும் படத்தில் காணலாம்) ஆனால் நடிகைக்கு கிங்லி எழுதிய கடிதத்தில் கூறி இருந்ததாவது:-
ஜனாதிபதி ரீகனை கொல்லப் போகிறேன். இதில் கட்டாயம் நானும் உயிர் இழப்பேன். ஆகவேதான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். உனக்காக உயிர் தியாகம் செய்யப்போகிறேன். உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை இதில் இருந்தே தெரிந்து கொள்வாய். கடந்த 7 மாதங்களாகவே உனக்கு ஏராளமான காதல் கடிதங்களும், கவிதைகளும் எழுதி அனுப்பி இருக்கிறேன். ஆனாலும் உனக்கு தொல்லை கொடுக்காமல் என் காதலை வெளிப்படுத்த இது ஒன்றுதான் வழி என்று தோன்றியது. உன் கவனத்தை கவர வேறு வழி தெரியவில்லை. ஆகவேதான் ரீகனை தீர்த்து கட்டப்போகிறேன். உனக்காகவே இதை எல்லாம் செய்யப் போகிறேன். எல்லாம் உனக்காக, உன் அன்பை பெறுவதற்காக என்றும் உன்னை விரும்பும்.”
இவ்வாறு எழுதி அடியில் தனது கையெழுத்தை போட்டிருந்தான். இன்னொரு கடிதம் யாருக்கு எழுதப்பட்டது என்பதை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். ரீகனை சுட்ட கிங்லி 1980_ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் பிரசாரத்தின்போது ரீகனுடன் கை குலுக்கி இருக்கிறான். இந்த காட்சி டெலிவிஷன் படமாக எடுக்கப்பட்டிருந்தது. அந்த படத்தையும் போலீசார் கைப்பற்றினர். விரைவாக உடல் நலம் தேறிய ரீகன் ஒரு வாரத்திலேயே ஆஸ்பத்திரி சிகிச்சையை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார். 1989_ம் ஆண்டு வரை ரீகன் ஜனாதிபதியாக இருந்தார். அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக “அல் சிமிர்” (நினைவு ஆற்றல் குறைவு) என்ற தீராத நோயினால் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையில் இருந்தார். கடந்த ஜுன் மாதம் முதல் வாரத்தில் தனது 93_வது வயதில் ரீகன் மரணம் அடைந்தார்.
1911_ம் ஆண்டு பிப்ரவரி 6_ந்தேதி பிறந்த ரீகன் முதலில் ரேடியோவில் பணியாற்றினார். பிறகு 1937_ல் நடிகரானார். பல ஆலிவுட் படங்களில் நடித்தார். 1966_ல் கலிபோர்னியா மாநில கவர்னரானார். 1981 முதல் 1989 வரை ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
thanks malaimalar

Leave a Reply