மூத்த குடிமக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுப்பதற்கான விழிப்புணர்வு முகாம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடந்தது. சிறப்பு விருந்தினராக கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தர் கலந்து கொண்டு பேசியதாவது:-
சென்னையில் முதியவர்களுக்கு எதிராக கொடுமைகள் நடந்ததாக 4 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். 2007 சட்டப்படி இந்த வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. மேலும் முதியோருக்கு எதிராக கொடுமை நடப்பதாக புகார்கள் வந்தால் குற்றவாளிகளுக்கு 3 மாத ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
சட்டத்திற்கு உட்பட்டு இதுபோன்ற குற்றங்கள் செய்வோரை தண்டித்தாலும் அவர்களாக திருந்தினால்தான் குற்றங்கள் தடுக்கப்படும்.
பொதுமக்கள்-போலீஸ் நல்லுறவை வளர்ப்பதற்காக அக்டோபர் 1-ந்தேதி அன்று சென்னையில் உள்ள 9 போலீஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் எந்த நேரத்திலும் செல்லலாம். பள்ளி மாணவ-மாணவிகள் போலீஸ் நிலையங்களுக்கு சென்று போலீஸ்துறை தொடர்பான எந்த கேள்வி களையும் கேட்கலாம். எப்படி வழக்குப்பதிவு செய்கிறார்கள், குற்றங்களை எப்படி தடுப்பது உள்பட அனைத்து சந்தே கங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹெல்ப்பேஜ் இந்தியா தொண்டு நிறுவன ஆலோசகர் இந்திராணி ராஜதுரை கூறும்போது, சென்னையில் 33 சதவீதம் முதியோர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர்.கடந்த 2004-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 81 மில்லியன் முதியோர் உள்ளனர். அது 2040-ம் ஆண்டுக்குள் 324 மில்லியனாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அக்டோபர் மாதத்தில் மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்ட கலெக்டர்களை சந்தித்து முதியோர் கொடுமை பற்றி ஆலோசனை நடத்த உள்ளோம் என்றார்.