Thursday, September 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாளை அலகாபாத் ஐகோர்ட்டில் தீர்ப்பு, அயோத்தி வழக்கில் தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாவதில் இருந்த தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கி, தீர்ப்பு வழங்க அனுமதித்தது . தீர்ப்பை தள்ளி வைக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, அலகாபாத் ஐகோர்ட் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பை, தள்ளிவைக்கக் கோரும் மனு மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்தது. தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையில், நீதிபதிகள் அப்தாப் ஆலம் மற்றும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பை தள்ளிவைத்து, கோர்ட்டுக்கு வெளியே சுமுகமாக பிரச்னையை தீர்த்துக் கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும், என ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் மனு தாக்கல் செய்து இருந்தார். வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினரும், ஆஜரான வக்கீல்களும், தீர்ப்பு வெளிவரவேண்டும் என உறுதியாக இருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரண்டு மணி நேர விசாரணைக்கு பின், மூன்று உறுப்பினர் பெஞ்ச், திரிபாதியின் மனுவை தள்ளுபடி செய்து, அயோத்தி வழக்கில் இருந்துவந்த தடையை நீக்கினர். தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா தலைமையிலான பெஞ்ச் திரிபாதியிடம்,” கடந்த 50 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போதுதான் இப்படி ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள். இவ்வளவு காலம் அமைதி காத்துவிட்டு, தீர்ப்பு வெளிவரும் நேரத்தில் மனு செய்தது ஏன்?’ என்று கோபமாகக் கேட்டார். இவ்வழக்கு குறித்த வாதிபிரதிவாதங்களை கேட்டபின், திரிபாதியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பை வெளியிட அனுமதி வழங்கினர். நீதிபதிகள் ஏகமனதாக வெளியிட்ட தீர்ப்பில், “இம்மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டியதாக நாங்கள் கருதுகிறோம். அந்த அடிப்படையில் தள்ளுபடி செய்கிறோம்’ என்று குறிப்பிட்டனர். திரிபாதி சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோதகி ஆஜரானார்.
அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வாதி,” பல ஆண்டுகளாக இருந்து வரும் பிரச்னைக்கு தீர்வு காணும் நிலையில், நிச்சயமற்றதன்மை தொடர்ந்து நிலவுவதை அனுமதிக்கக் கூடாது என்று அரசு விரும்புகிறது’ என்று வாதிட்டார். இவ்வழக்கில் சில மனுதாரர்கள் சார்பில் ஆஜரான பிரபல வக்கீல் சோலிசொரப்ஜி,”அலகாபாத்ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் தீர்ப்பை வழங்க அனுமதிக்க வேண்டும்’ என்று கோரினார்.
30ம் தேதி தீர்ப்பு: வழக்கை தள்ளுபடி செய்வதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்த சில நிமிடங்களில், அலகா பாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச்சின் சிறப்பு அதிகாரி ஹரிசங்கர் துபே வெளியிட்ட அறிவிப்பில், “அயோத்தி வழக்கு தொடர்பான தீர்ப்பை, நீதிபதி எஸ்.யு.கான் தலைமையில் நீதிபதிகள் சுதிர்அகர்வால்,டி.வி.சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வரும் 30ம் தேதி (நாளை) மாலை 3.30 மணிக்கு வழங்கும்’ என குறிப்பிட்டார்.
கட்சிகள் வரவேற்பு: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ், பாரதிய ஜனதா, இடதுசாரி கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் வரவேற்றுள்ளன. மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில், ” சுப்ரீம் கோர்ட் சரியான நேரத்தில் முடிவை அறிவித்துள்ளது’ என்றார். பா.ஜ.,வை சேர்ந்த மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், இந்து மகாசபா சார்பில் வழக்கில் ஆஜரானார். தீர்ப்புக்கு பின் நிருபர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,”பல பிரதமர்கள், சங்கராச்சாரியார்கள், முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் எல்லாம் சமரச பேச்சுவார்த்தைக்கு முயன்றும் தோல்வி ஏற்பட்டது. அப்படியிருக்கும் போது திடீரென்று எப்படி வந்தார் திரிபாதி. வழக்கில் தொடர்புடையவர்களின் எண்ணப்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்ததை வரவேற்கிறேன்’ என்றார்.
சிதம்பரம் ஆலோசனை: சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அயோத்தி உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பிற்கு மத்திய படையினர், அவர்களை அனுப்ப விமானப்படை விமான வசதி உட்பட அனைத்தும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தீர்ப்பு நாளன்று, நாடு முழுவதும் 32 இடங்களை பிரச்னைக்குரிய இடங்களாக மத்திய உள்துறை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. இதில் நான்கு இடங்கள் உ.பி.,யில் உள்ளன. தமிழகத்தில் கோவையும் ஒன்று. உ.பி., – மகாராஷ்டிரா, குஜராத், ம.பி., – கர்நாடகம்,கேரளா ஆகியவை அதிக கவனத்தில் வைக்கப்படும் மாநிலங்களாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தடையாக இருந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததை கேட்டதும் பலரும் அயோத்தியில் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Leave a Reply