Wednesday, July 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அயோத்தி தீர்ப்பால் நாடு முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கை, உஷார் நிலையில் போலீசார் . . .

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதையொட்டி, நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க உஷார்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக, கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கின் இறுதித் தீர்ப்பை, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் இன்று வழங்குகிறது. இந்த தீர்ப்பை அறிந்து கொள்வதற்காக நாடே, லக்னோவை நோக்கி திரும்பியுள்ளது. நீதிபதி எஸ்.யு.கான் தலைமையில் நீதிபதிகள் சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகின்றனர். இந்த தீர்ப்பு வருவதையொட்டி லக்னோ, அயோத்தி நகரங்களை மையமாக வைத்து, உ.பி., முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. எவ்வித சூழ்நிலையையும் சமாளிக்க லக்னோ, அயோத்தி, பைசாபாத் நகரில் அதிதீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், ஊரடங்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை.
அலகாபாத் ஐகோர்ட் பெஞ்ச் அமைந்துள்ள லக்னோ நகரில், ஐகோர்ட் பகுதியை யாரும் நெருங்க முடியாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் உட்பட ஐகோர்ட்டால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மற்றும் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் தீர்ப்பு வழங்கும் அறையில் அனுமதிக்கப்படுவர்; தீர்ப்பு முடியும் வரை வெளியேற முடியாது. இதற்கான உத்தரவை, மாவட்ட கலெக்டர் அனில் சாகர் பிறப்பித்துள்ளார். ஐகோர்ட் அமைந்துள்ள பகுதியில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, இப்பகுதி முழுவதும் துணை ராணுவ கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு எப்படி: தீர்ப்பு விவரத்தை பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்க, ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி, கலெக்டர் அலுவலகத்தில் அறிவிப்பார் என்றும், அதனால் பத்திரிகையாளர்கள் ஐகோர்ட் வளாகத்தில் கூட வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தீர்ப்பு விவரம் மற்றும் அதன் முக்கிய பகுதிகள் இணையதளத்தில் வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்திலும் மற்றும் பதட்டம் நிறைந்த பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். உ.பி., மாநிலத்தையொட்டியுள்ள நேபாளம் மற்றும் உத்தரகண்ட் எல்லையோரம் சீல் வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீர்ப்பு வரும் வரை இப்பகுதிகளிலிருந்து வருபவர்களை அனுமதிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரச்னை வரக்கூடும் என்று கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு படைகள் விரைந்து செல்வதற்காக ராணுவ ஹெலிகாப்டர்கள், விமானங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மன்மோகன், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் விடுத்த அறிக்கையில், தீர்ப்பை அமைதியுடன் மக்கள் ஏற்க வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். உள்துறை அமைச்சர் சிதம்பரமும், இத்தீர்ப்பு மட்டுமே இறுதியானது அல்ல என்றும் அதற்குப் பின்னும் தேவைப்பட்டால், சுப்ரீம் கோர்ட்டை அணுக வாய்ப்புகள் உள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
பாதுகாப்பு: உ.பி.,யில் துவங்கி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் கூறுகையில், “உ.பி., மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’ என்றார். மொபைல் போன்களில், மொத்தமாக எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் இரண்டு நாட்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று பிற்பகலில் இருந்து நாளை காலை வரை தமிழகத்தில் லாரிகள் ஓடாது என லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் லாரிகள் ஓடாது: அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று மதியம் முதல், மறுநாள் காலை 6 மணி வரை லாரிகள் ஓடாது என, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. தொடர்ந்து அந்த அந்த பகுதிகளில் உள்ள நிலைமைக்கேற்ப, லாரிகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
thanks d.malar

Leave a Reply