Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இறுதித் தீர்ப்பு இறுதியான தீர்ப்பல்ல

அயோத்தியில் பாபர் மசூதியா, ராமர் பிறந்த இடமா என்பது தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்குவதற்கு எதிராக விதித்த தடையை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் விலக்கிக் கொண்டுவிட்ட நிலையில், இந்தியாவின் விடுதலைக்குப் பின்னான வரலாற்றில் உணர்வுப்பூர்வமான ஒரு பிரச்சனை தொடர்பான வழக்கின் தீர்ப்பை நாடு எதிர்நோக்கியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி விஸ்வ இந்து பரிஷத், பாரதிய ஜனதா உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில் அதற்கு முன் இராமர் கோயில் இருந்ததா? என்கிற கேள்விக்கு ‘அந்த இடம் யாருக்குச் சொந்தம்’ என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் வரும் 30ஆம் தேதி வியாழக்கிழமை வழங்கப்போகும் தீர்ப்பு பதிலாக அமையப்போகிறது.
அயோத்திச் சிக்கல் வரலாறு
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், ஃபைசலாபாத் மாவட்டத்தில், அமைந்திருந்த ஐந்து நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த பாபர் மசூதி வெள்ளையர் காலத்திலேயே பிரச்சனையானது. 1857ஆம் ஆண்டு வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக அவர்களது படையில் இருந்த இந்தியர்கள், வெள்ளைய அதிகாரிகளுக்கு எதிராக துவக்கிய, ‘சிப்பாய்க் கலகம்’ என்றழைக்கப்பட்ட, இந்தியாவின் முதல் சுதந்திரப் போரை உடைக்க, இந்து, முஸ்லீம் படையினருக்கு இடையே வெள்ளையர் உருவாக்கிய மதப் பிரச்சனை சமூக அளவில் ‘வேலை செய்ய’த் துவங்கியிருந்த நிலையில், பாபர் மசூதிக்கு செல்லும் பாதையில் ஒரு மேடையை அமைத்த சாது ஒருவர், அதுவே இராமர் பிறந்த இடம் என்று கூறி, ஒரு பீடத்தை எழுப்பி அதில் இராமர், சீதை சிலைகளை வைத்து பூசை செய்யத் துவங்கினார்.
அதற்கு எதிர்ப்பு இருந்தது. ஆனாலும் பூசையும் தொடர்ந்தது. அவ்வாறு தொடர்ந்து பூசை செய்துவந்த அந்த பூசாரி 1885ஆம் ஆண்டில் அந்த மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். தான் பூசை செய்துவரும் இடம் இராமர் பிறந்த இடம் என்றும், அந்த இடத்தை தங்களுக்கு (இந்துகளுக்கு) சட்டப் பூர்வமாக்க வேண்டு்ம் என்று மனுச் செய்தார்(ஜூலை 19, 1885). அதனை மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ஆனால் அந்த இடம் எங்களுக்கு உரியது என்ற இந்துக்களின் மனப்பாங்கு வளரத் தொடங்கியது. அதுவே ஒரு சட்டச் சிக்கலாக பிறப்பெடுத்தது.
இந்தியா விடுதலை பெற்றதற்குப் பிறகு, 1949ஆம் ஆண்டில், இராமர், சீதைக்கு பூசை நடந்த இடத்தில் ஒரு வார காலத்திற்கு ராமர் சரித்திர பஜனை நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஒரு நாள் இரவு, பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை முடித்துக் கொண்டு முஸ்லீம்கள் அனைவரும் வெளியேறிய பிறகு, அந்த சிலைகள் மசூதிக்கு உள்ளே கொண்டு செல்லப்பட்டு தொழுகை நடந்த இடத்தில் வைக்கப்பட்டது. மறுநாள் காலை வந்த பார்த்த முஸ்லீம்கள் அதிர்ச்சியுற்றனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தையடுத்த மசூதியின் கதவுகளை மாவட்ட நிர்வாகம் பூட்டி வைத்தது.
இந்நிகழ்வைத் தொடர்ந்து 1950ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கினையடுத்து பாபர் மசூதி அமைந்திருந்த அந்த இடம் சர்ச்சைக்குரிய பகுதி (disputed land) என்றானது. இதன் பிறகு அங்கு முஸ்லீம்கள தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை. அந்த இடத்தில் இராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற முழக்கம் பிறந்து, அது நாளுக்கு நாள் மதவாதிகளால் வலிமைபடுத்தப்பட்டுவந்தது.
இரத யாத்திரையும் மசூதி தகர்ப்பும்
1990ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஜனதா தளம் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசின் பிரதமராக இருந்த விஸ்வநாத் பிரதாப் சிங், நீதிபதி பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையை ஏற்று இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் உத்தரவை பிறப்பித்தார்.
இதனை ‘சாதிய ரீதியில் இந்து சமூகத்தை பிளக்கும் நடவடிக்கை’ என்று கூறிய பாரதிய ஜனதா கட்சி, ‘இந்துக்களை ஒன்றுபடுத்த’ இராமர் ஜன்ம பூமி பிரச்சனையை கையில் எடுத்தது. இராமர் பிறந்த இடத்தில் உள்ள பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் இராமருக்கு கோயில் கட்டுவோம் என்ற முழக்கத்துடன் இரத யாத்திரை புறப்பட்டார் அத்வானி. 1990ஆம் ஆண்டு செப்படம்பர் 17ஆம் தேதி குஜராத்தின் சோமநாதர் ஆலயத்தில் இருந்து அத்வானி துவக்கிய இரத யாத்திரை சென்ற இடத்திலெல்லாம் மதக் கலவரம் மூண்டது. அப்படி வந்த இரத யாத்திரை பீகாருக்குள் நுழைந்ததும், அதனை தடுத்து நிறுத்திய பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அத்வானியை கைது செய்தார். ஆயினும் கலவரம் தொடர்ந்தது.
FILE
அத்வானி இரத யாத்திரையை தடுத்து நிறுத்தியதைக் காரணமாக்கி வி.பி.சிங் அரசிற்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டது பாரதிய ஜனதா. மண்டல் அறிக்கையை காங்கிரசும் எதிர்த்தது. இதனால் மண்டல் அறிக்கை நடைமுறைக்கு வந்த 3 மாதத்தில் வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்தது.
அடுத்து வந்த சந்திரசேகர் ஆட்சியும் 3 மாதத்தில் கவிழ்ந்ததையடுத்த நடந்த தேர்தலில் மண்டல் அறிக்கை, இராமருக்கு கோயில் ஆகிய இரண்டுமே முக்கியமான பிரச்சனைகளாக இருந்தது. ஆனால் தேர்தலின் போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால் உருவான அனுதாப அலை காங்கிரஸை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியது.
ஆயினும் இராமர் கோயில் பிரச்சனை பாரதிய ஜனதாவிற்கு 120 இடங்களில் வெற்றியைத் தந்தது (அதற்கு முந்தைய தேர்தலில் அக்கட்சி 88 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது). எனவே இராமர் கோயில் பிரச்சனையை அக்கட்சியும், அதோடு விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளும் கூர்மைபடுத்தின.
உத்தரபிரதேசத்தில் கல்யான் சிங் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்த நிலையில், ‘மத்திய, மாநில காவற்படைகளின் பலத்த பாதுகாப்பு’ வளையத்தில் இருந்த பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி இடித்துத் தள்ளப்பட்டது.
இடித்துத் தள்ளப்பட்ட அந்த மணல் குவியலின் மீது இராமர், சீதை சிலைகள் வைக்கப்பட்டு, அந்த இடத்தில் ஒரு கூரையும் போடப்பட்டு, பூசை துவங்கியது. பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலப்பகுதியை அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, அதனை சர்ச்சைக்குரிய பகுதியாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்தே அந்த இடம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு துவங்கியது. கோபால் சிங் விஷாரத், நிர்மோகி அகாரா, உத்தரபிரதேசம் சுன்னி வக்ஃப் வாரியம், ராம் லாலா விராஜ்மான் ஆகிய நபர்களும், அமைப்புகளும் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.யு.கான், டி.வி.சர்மா, சுதிர் அகர்வால் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்தது.
தொல்லியல் துறையின் ஆய்வு!
இந்த வழக்கின் ஒரு முக்கிய அம்சம் என்னவெனில், சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படும் 1538ஆம் ஆண்டிற்கு முன்னர், அங்கு கோயில் இருந்ததே என்பதே. கோயில் இடித்துத் தள்ளப்பட்டே அங்கு பாபர் மசூதி கட்டப்பட்டது என்று இந்து மத அமைப்புகள் கூறி வருகின்றன.
இந்த சர்ச்சைக்கு முடிவுகட்ட, வழக்கை விசாரித்துவரும் அலகாபாத் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு இணங்க, சர்ச்சைக்குரிய அந்த 2.77 ஏக்கர் நிலப்பரப்பிற்குட்பட்ட பகுதியில் இந்திய தொல்லியில் துறையினர் அகழ்வாராய்ச்சி செய்தனர். அவர்கள் தங்கள் ஆய்வில் கட்டறிந்த விவரங்களை அறிக்கையாக நீதிமன்ற அமர்விடம் அளித்துள்ளனர்.
பாபர் மசூதி – ராம் ஜன்ம பூமி வழக்கு என்று அழைக்கப்படும் இவ்வழக்குத் தொடர்பாக பல திருப்பங்கள் நிகழ்ந்தன. இந்த இடம் தொடர்பான விவரங்களைக் கொண்ட 23 கோப்புகள் காணாமல் போய்விட்டதாக நீதிமன்றத்தில் புகார் செய்யப்பட்டது. அதுகுறித்து விசாரிக்கும்படி நீதிமன்ற அமர்வு அளித்து உத்தரவிற்கு இணங்க புலனாய்வு மேற்கொண்ட மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
முழுமையான நீண்ட விசாரணைக்குப் பின், நாளை மறுநாள் இறுதித் தீர்ப்பு வழங்கவுள்ள அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு கீழ்கண்ட 3 முக்கிய கேள்விகளுக்கு பதில் கூறும்;
1) 1538ஆம் ஆண்டிற்கு முன் அந்த (பாபர் மசூதி இருந்த) இடத்தில் இந்து கோயில் இருந்ததா?
2) அந்த இடம் தங்களுக்கே உரியது என்று 1961ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்த பாபர் மசூதி குழுவின் (Babri committee) கோரிக்கை நியாயமானதா?
3) முஸ்லீம்கள் அந்த இடத்தை ஆக்‌கிரமித்துக் கொண்டு அதற்கான ஆவணங்களை உருவாக்கிக் கொண்டார்களா?
இம்மூன்று கேள்விகளுக்குமான விடையே 30ஆம் தேதி அளிக்கப்படவுள்ள இறுதித் தீர்ப்பாகும். ஆனால் இந்தத் தீர்ப்பே, நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு சர்ச்சைக்கு இறுதியான முடிவு தரப்போவதாக இருக்காது. தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாத எந்த ஒரு தரப்பும் மேல் முறையீடு செய்யலாம். எனவே அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதித் தீர்ப்பு என்று கூறப்பட்டாலும் அது இறுதியானத் தீர்ப்பாகப் போவதில்லை.
ஆனால் அந்தத் தீர்ப்பு பல உண்மைகளை வெளிக்கொணரப் போகிறது, அதனை இந்த நாட்டு மக்கள் அனைவரும் மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அத்தீர்ப்பு வெளிப்படுத்தவுள்ள உண்மைகள் இதற்கு மேலும் ஒரு மத வன்முறையை ஏற்பட விடாமல் தடுக்கும் அளவிற்கு நமது மனப்பாங்கை பண்படுத்துவதாக இருக்கும்.
Thanks Webdunia

Leave a Reply