Thursday, February 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

என் வயது 61. ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி.  திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிறது. நான்கு மகன்கள்; மூன்று பேர் இன்ஜினியராக, நல்ல உத்தியோகத்தில் இருக்கின்றனர். நான்காவது மகன் மேல்படிப்பு படிக்கிறான்.
என் மனைவி ஒரு பட்டதாரி. திருமணமாகி இரண்டு ஆண்டுகளில், நான் வேலை செய்யும் நிறுவனத்தில், மேலதிகாரிகளின் உதவியால், படாதபாடுபட்டு ஒரு வேலையை அவளுக்கு வாங்கி தந்தேன். அதுவும் நான் குடியிருக்கும் ஊருக்கே மாறுதல் கேட்டு வாங்கி வந்தேன்.
அவள் வேலை செய்யும் அலுவலகம், காவல் துறையில் கைரேகைப் பிரிவாகும். இதுதான் என் வாழ்க்கையில் செய்த மாபெரும் தவறு. அவளது அலுவலகத்தில் பணியாற்றிய செக்ஷன் கண்காணிப்பாளர் ஒரு பெண் பித்தன். என் மனைவி  பணியில் சேர்ந்தவுடன், அவன் எப்படியோ பேசி, அவளை, தன் வயப்படுத்திக் கொண்டான்.திருமணமாகி மூன்றாண்டுகள் தான் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். அவளது அலுவலகத்தில் வேலை செய்பவனின் தொடர்பு கிடைத்ததால், என்னை உதாசீனப்படுத்தினாள். அப்போதெல்லாம் என் பணியில் நான் மிகவும் கவனமாக இருந்ததால், அதை பெரிசாக எடுத்துக் கொள்ளவில்லை.தற்போது அவன் ஓய்வு பெற்று, இதே ஊரில் இருக்கிறான். இவர்களுடைய தொடர்பு இன்னும் இருக்கிறது. அலுவலகம் சென்றவுடன், அவனிடம் தொலைபேசியில் பேசிவிட்டு தான் மறு வேலை பார்ப்பாள்.இருவரும் பணியில் இருந்த காலத்தில், ஒரு வருடம் இங்கு இருப்பர்; அடுத்த வருடம் வேறு மாவட்டத்திற்கு மாறுதலாகி போய் விடுவர். அப்போதெல்லாம், என் பணியின் சுமை காரணமாக, இவற்றை கவனிக்காமல் விட்டு விட்டேன். கடைசியில், உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து விட்டாள். இப்போது அவளது சர்வீஸ் 28 வருடம் ஆகிறது. இதுநாள் வரையில், ஒரு நாள் கூட லீவு போட்டு, வீட்டில் இருந்தது கிடையாது.
என் மகன் திருமணத்திற்கு மட்டும் 25 நாள் லீவு போட்டாள். இப்போதும் அவனுடன் தொடர்பு வைத்து இருக்கிறாள். நானும், ஓரிரு முறை அவனை வழியில் பார்த்து சண்டை போட்டேன். அது தெரிந்ததும், எதையாவது சாக்கு சொல்லி, என்னிடம் வீண் சண்டை போடுவாள் என் மனைவி.
இரவு தூக்கத்திலும், அவனோடு பேசுவது போலவே பேசுவாள். என் உடன் பிறந்த சகோதரியான உங்களிடம்  சொல்வதற்கு என்ன… நாங்கள் தாம்பத்ய உறவு கொண்டே, 25 வருடம் ஆகிறது. இப்போது அவளுக்கு வயது 57 ஆகிறது. பணியிலிருந்து ஓய்வு பெற இன்னும் ஓராண்டு உள்ளது. நான் ஓய்வு பெற்று வீட்டில் இருப்பதால், தேவையில்லாமல் என்னிடம் வீண் சண்டை போட்டு, அவனுடைய யோசனையின் பேரில் என்னை பாடாய்படுத்துகிறாள். இது சம்பந்தமாக என் பிள்ளைகளிடம் சொன்னால், என்னை தான் குறை சொல்கின்றனர். அவர்களது தாயை ரொம்பவும் நம்புகின்றனர்.
நான் என்ன செய்வது என்று புரியவில்லை. தற்கொலை செய்து கொள்வதற்கும் எனக்கு துணிவில்லை. இவைகளேயே நினைத்து, உடல் மிகவும் மெலிந்துவிட்டது. என்ன செய்வது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. அமைதியோடும், கவலை எதுவும் இல்லாமல் சாக வேண்டிய நேரத்தில், எனக்கு இப்படியொரு நிலை. ஒரு தெரு நாயை விட கேவலமாக, வாயில் வராத வார்த்தைகளால் திட்டுகிறாள். இதற்கெல்லாம் காரணம், அவளது ஆசை நாயகன் தான். இரவெல்லாம் என் கண்களில் கண்ணீர் வராத நாட்கள் இல்லை. நீங்கள் தான் எனக்கு நல்ல தீர்வு சொல்ல வேண்டும்.  — இப்படிக்கு,  பெயர் சொல்ல விரும்பாத சகோதரன்.

அன்புள்ள சகோதரருக்கு—
உங்களின் கண்ணீர் கடிதம் கிடைத்தது. தொடர்ந்து 28 வருடங்களாக கட்டின கணவனுக்கு துரோகம் செய்து வரும் மனைவியைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். இதுவரை நான் எழுதிய பல பதில்கள், பெண்களுக்கு சார்பாய், அதுவும் தவறு செய்யும் பெண்களுக்கு சார்பாய் இருப்பதாக, சில ஆண் வாசகர்கள், “இ-மெயில்’ விமர்சனம் பண்ணியிருந்தனர்.
கடித நடையை வைத்தும், எழுதியவரின் மனோபாவத்தை யூகித்தும், எழுதப்பட்ட இருவரிகளுக்கிடையே ஒளிந்திருக்கும் சிறுசிறு உண்மைகளை கண்டுபிடித்தும், எழுதியவரின் உள்ளக்கிடக்கையை அவதானித்தும், சில பதில்களை நான் எழுதியிருக்கக் கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக, நான் ஒரு பெண். அதுவும் திருமணமான பெண். பத்துவிதபட்ட பட்டய படிப்புகள் படித்த பெண். ஒரு கனிவான அகிம்சாவழி பதிலைத் தானே கூற முடியும். ஒரு கடிதத்தில் பத்து சதவீதம் பெண்களுக்கு சார்பான க்ளுக்களோ, அலிபிக்களோ தென்பட்டால், தீர்ப்பு பெண்களுக்கு சார்பாகத் தான் அமையும். ஆனால், இக்கடிதம் என்னை ஒரு உலுக்கு உலுக்கி, தலைகீழாய் புரட்டி போட்டு விட்டது. பட்டதாரி மனைவியை அடுக்களைக்குள் போட்டு புகைபடிய வைக்காமல், பிரம்மபிரயத்தனப்பட்டு கைரேகை பிரிவில் ஒரு வேலை வாங்கிக் கொடுத்து, நீங்கள் பணிபுரியும் ஊரிலேயே மனைவி பணிபுரிய ஏற்பாடும் செய்திருக்கிறீர்கள்.மனைவியின் அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு பெண் பித்தன், உங்கள் மனைவியை மயக்கி விட்டதாக கூறியிருக்கிறீர்கள். மனைவியின் முழு தவற்றில் பாதியை அவளது கள்ளக்காதலனுக்கு பிரித்து கொடுத்துள்ளீர்கள். திருமணமாகி மூன்றாண்டுகள் தான் தாம்பத்யம் மேற்கொண்டோம் எனக் கூறியிருக்கிறீர்கள். கடந்த 25 வருடங்களாக உங்களுக்குள் தாம்பத்ய உறவில்லை; ஆனால் உங்களுக்கு, 26, 24, 22, 20 வயதில் மகன்கள் பிறந்திருக்கின்றனர். இவ்விஷயத்தை விரிவாக விவாதிக்க, நான் விரும்பவில்லை.  தாம்பத்ய உறவு தான் கணவன் – மனைவிக்கிடையேயான ஊடல்களை, சாடல்களை, வாடல்களை தீர்க்கும் அருமருந்து. மனைவியின் திருமணம் தாண்டிய உறவு,  27 வருடங்களாக உங்களுக்கு தெரிந்திருந்தும், பணி பளு காரணமாக அதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என கூறியிருக்கிறீர்கள்.
சிறிய புண்ணுக்கு தகுந்த மருத்துவம் காலத்தே பார்க்காமல், புரையோட வைத்து விட்டீர்கள். பொதுவாகவே, காவல்துறை அதிகாரிகள் வீட்டு நிர்வாகத்தில் பூஜ்யமாக இருக்கின்றனர். இடை இடையே, உங்கள் மனைவி, கள்ளக்காதலன் பணிபுரியும் இடங்களுக்கு மாற்றல் வாங்கிப் போய் இருந்திருக்கிறார். உங்களுக்கும், உங்களது நான்கு மகன்களுக்கும் தகவல் தொடர்பு சரியில்லை. எப்படி உங்கள் மனைவி, உங்களுக்கு நல்ல மனைவியாக நடக்கவில்லையோ, அதே போல்  உங்கள் மகன்களுக்கு நல்ல தந்தையாக நீங்கள் நடந்து கொள்ளவில்லை.மனைவியிடம் இமாலயத் தவற்றை வைத்துக் கொண்டு, அவளது கள்ளக்காதலனுடன், நீங்கள் இருமுறை தெருச்சண்டை போட்டது பக்குவமில்லாத செயல். 27 வருடங்களாக ஒரு குற்றம் நடப்பதை வேடிக்கை பார்த்துவிட்டு, இப்போது தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்பது விவேகமில்லாத பேச்சு.உங்களது துணிச்சலின்மை, உடனடி முடிவெடுக்கா தன்மையைப் பார்த்து தான் உங்களது மனைவி தூக்கத்தில் கள்ளக்காதலனுடன் பேசுவது போல் பேசி, உங்களது பொறுமையை சோதித்திருக்கிறாள். நல்ல வேளை… நான்கு மகன்களுக்கு பதில், நான்கு மகள்கள் இருந்திருந்தால், அவர்களின் கதி என்னாகும்?சரி… நடந்ததை விட்டுவிட்டு, நடக்க வேண்டியதை பார்ப்போம். மனைவியிடம் பேசி, பரஸ்பரம் சம்மதம் கூடிய விவாகரத்து கேட்டுப் பெறுங்கள். என்ன காரணத்துக்காக விவாகரத்து என்பதை, ஆபாசமில்லாமல் மகன்களுக்கு விளக்குங்கள். அம்மாவை ஆதரிப்போர், பணி ஓய்வு பெறும் அம்மாவை பராமரிக்கட்டும்; உங்களை ஆதரிப்போர், பணி ஓய்வு பெற்ற அப்பாவை பார்க்கட்டும்.பணி காலத்தில் நேர்மையில்லாமல் நடந்து, பலரின் சாபங்களை பெற்றிருக்கிறீர்கள் என்றால், அதற்கான பரிகாரங்களை யோசித்து செய்து, இறைவனின் மன்னிப்பை பெறுங்கள்.உங்கள் மனைவி, தவறுகளை பொழுதுபோக்காய் செய்யும் குற்றவாளி. அவர் எக்காலத்திலும் திருந்த மாட்டார். திருந்தியது போல் நடித்து, பிற்காலத்தில் உங்களை நாடி வந்தால் ஏமாறாதீர்கள். மறுமணம் உங்களுக்கு ஒத்து வராது; முயற்சிக்காதீர்கள்.  வீட்டை அலட்சியபடுத்திவிட்டு, பணியில் மூழ்கி கிடக்கும் காவல்துறை நண்பர்களை உஷார் படுத்துங்கள். கள்ளக்காதல்கள் பார்த்தீனிய செடிகள் போல. கண்டவுடன் வேரோடு அகற்றுதல் நலம். விட்டால் உலகமே பார்த்தீனியக் காடாகி விடும் என்பதே இக்கடிதம் மற்றும் இக்கடிதத்திற்கான பதில் மூலம் அறிய வேண்டிய நீதி.

—என்றென்றும் தாய்மையுடன்,  சகுந்தலா கோபிநாத்.

தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி

5 Comments

 • உங்கள் கடித்ததில் இருந்து உங்கள் தரப்பில் இருந்து ஏதும் தவறு இல்லை என்பதாகத் தொனிக்கிறது.இது நடை முறை சாத்தியம் இல்லை .உங்கள் மனைவியின் தரப்பு விளக்கங்களை கேட்ட பின்னர், தெளிவான ஆலோசனை கூற இயலும்.
  மேலும் மனைவி தவறு செய்கிறாள் என்று தெரிந்த பின்னரும் இணைந்து வாழ்ந்தது தவறு.
  ஆதாரங்களுடன் திருமணத்தை ரத்து செய்திருக்க வேண்டும்..
  இன்னும் அதையே நினைத்து ,அதுவும் இந்த வயதில் ,வருந்துவது முதிர்ச்சி இல்லை.
  வேண்டுமென்றால் தனியாகச் செல்வது நல்லது.
  உங்கள் குழந்தைகள் தாயை சார்ந்திருப்பதருக்குக் காரணம் யோசித்தீர்களா ?
  உங்கள் மீது தவறு இருந்தால் திருத்திக்கொள்ளவும் .
  உங்கள் பிரச்சினைக்கு முன்னர் அளிக்கப்பட்ட விடையில் தன்னிலை விளக்கம் அதிகம்.

 • […] http://vidhai2virutcham.wordpress.com/2010/10/02/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE… AfrikaansAlbanianArabicBelarusianBulgarianCatalanChineseCroatianCzechDanishDetect languageDutchEnglishEstonianFilipinoFinnishFrenchGalicianGermanGreekHaitian Creole ALPHAHebrewHindiHungarianIcelandicIndonesianIrishItalianJapaneseKoreanLatvianLithuanianMacedonianMalayMalteseNorwegianPersianPolishPortugueseRomanianRussianSerbianSlovakSlovenianSpanishSwahiliSwedishThaiTurkishUkrainianVietnameseWelshYiddish⇄AfrikaansAlbanianArabicBelarusianBulgarianCatalanChineseCroatianCzechDanishDutchEnglishEstonianFilipinoFinnishFrenchGalicianGermanGreekHaitian Creole ALPHAHebrewHindiHungarianIcelandicIndonesianIrishItalianJapaneseKoreanLatvianLithuanianMacedonianMalayMalteseNorwegianPersianPolishPortugueseRomanianRussianSerbianSlovakSlovenianSpanishSwahiliSwedishThaiTurkishUkrainianVietnameseWelshYiddish Detect language » Hungarian […]

 • முதலில் மன்னிக்கவும் இந்த மூடத்தனமான கேள்வியை கேட்பதற்கு …. நான் ஒரு ஆண்மகன் ..சுயஇன்பத்தின் போது விந்து வெளியேறுவதால் முகப்பரு உண்டாகுமா?????மன்னிக்கவும்

 • Raja Durai

  ஐயா வணக்கம்,
  நான் ஒரு 30 வயது இளைஞர்.
  சுய இன்பமோ அல்லது தானாக விந்து வெளிப்பட்டாலோ மறு நாள் தலை வலி ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று அறிய விரும்புகிறேன் மற்றும் அதற்கான தீர்வையும் எதிர்ப்பார்க்கிறேன்.
  நன்றி….

  • இதற்கு காரணம் முழுக்க‍ முழுக்க‍ உங்களுக்கு ஏற்பட்டுள்ள‍ தேவையில்லாத குற்ற‍ உணர்வுதான்

   சுய இன்பம் தவறு என்ற நினைப்பை மாற்றி, அது தவறில்லை. அதுவும் ஒரு செக்ஸ்தேடலுக்கான ஒரு நல்ல‍ தீர்வுதான் என்று நீங்கள் உங்கள் ஆழ்மனத்தில் பதியவைத்தாலொழிய இப்பிரச்சனைக்குத்தீர்வு இல்லை.

   தேவைப்பட்டால் இதுபற்றிய விவரம் அறிய மனநலம் மற்றும் பாலியல் சார்ந்த மருத்துவரை அணுகி மேற்கொண்டு ஆலோசனைகளைப் பெற்று அதன்படி நடந்துபாருங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: