காமன்வெல்த் போட்டியின் துவக்க விழாவில்,இந்திய கொடியை ஏந்தி வரும் அரிய கவுரவம்”ஒலிம்பிக் தங்க நாயகன்’ அபினவ் பிந்த்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நாளை துவங்குகிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட 70 ஆயிரம் கோடி நிதியில் பெருமளவில் ஊழல், அசுத்தமான விளையாட்டு கிராமம், சுப்ரீம் கோர்ட் கண்டனம் என, நிறையசர்ச்சைகள் வெடித்தன. இவற்றை கடந்து போட்டிகள் வெற்றிகரமாக நடக்க உள்ளன.
கொடி கவுரவம்: நாளை ஜவர்கர்லால் நேருஅரங்கில் மிகப் பிரம்மாண்டமான துவக்க விழா நடக்க இருக்கிறது. இதில், இந்திய குழுவுக்கு முன்பாக மூவர்ணக் கொடியை அபினவ் பிந்த்ரா ஏந்திச் செல்கிறார். கடந்த 2008, பீஜிங் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில்தங்கம் வென்ற இவர், காமன்வெல்த் ஜோதியையும் எடுத்து வர உள்ளார். கொடி மற்றும் ஜோதி என இரண்டையும் இவரே எடுத்து வர முடியுமா என்ற குழப்பம் நிலவியது.இது குறித்து இந்தியக் குழுவின் தலைவர் கலிதா கூறுகையில்,””மூவர்ணக் கொடியை பிந்த்ரா எடுத்து வருவார். செய்னா நேவல், சுஷில் குமார், விஜேந்தர் உள்ளிட்டோர் ஜோதியை எடுத்து வருவர். இவர்கள் ஒவ்வொருவரும் 100 மீ., தூரத்துக்கு ஓடி வருவர். இறுதியாக ஜோதியை பிந்த்ரா எடுத்து வரலாம்,”என்றார்.
டில்லி தயார்: தற்போது, தலைநகர் டில்லி பளபளக்கிறது. சாலைகள் மிகவும் சுத்தமாக உள்ளன.மாபெரும் விளையாட்டு திருவிழாவை நடத்த அனைத்து வகையிலும் தயாராக உள்ளது. விளையாட்டு கிராமும் “சூப்பராக’ பராமரிக்கப்பட்டு வருவதால், அனைத்து நாட்டு வீரர், வீராங்கனைகளும் உற்சாகமாக உள்ளனர். காலையில் கடினமாக பயிற்சி மேற்கொள்ளும் இவர்கள், மாலையில் விளையாட்டு கிராமத்தில் பொழுதை மகிழ்ச்சியாக கழிக்கின்றனர். சிலர் “மெகா’ சமையல் கூடத்துக்கு சென்று விரும்பியதை சாப்பிடுகின்றனர்.பின் “ஐஸ் கிரீம்’, “சாக்லேட்’ போன்றவற்றை சுவைக்கின்றனர். இங்குள்ள “பார்’களில் கூட்டம் நிரம்பி வழிகிறதாம். வீரர்கள் மட்டுமல்லாமல் வீராங்கனைகளும் உற்சாக பானங்களை குடிக்கின்றனர்.
வினோத “ஹேர் ஸ்டைல்’: பெரும்பாலானவர்கள் தங்களது “ஹேர் ஸ்டைலை’ வித்தியாசமாக மாற்றிக் கொள்கின்றனர். இதனால், இங்குள்ள”சலூன்’ மிகவும் “பிசி’யாக உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி “ஹேர்-ஸ்டைலில்’, பார்க்கவே வினோதமாக காட்சி அளிக்கின்றனர். சிலர் பில்லியர்ட்ஸ் விளையாடுகின்றனர். இது “போர்’ அடிக்க துவங்கி விட்டால், கலை நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம். பஞ்சாப் “பாங்கரா’ முதல் இந்திய பாரம்பரிய நடனங்களை காணலாம். “டிஸ்கோ’ ஆடியும் மகிழலாம். கையில் பணம் தீர்ந்து விட்டால் கவலைப் பட வேண்டாம்.விளையாட்டு கிராமத்திலேயே ஏ.டி.எம்., வசதி இருப்பதால், தேவையான பணத்தை உடன் எடுத்துக் கொள்ளலாம்.
“ஹீரோ’ விஜேந்தர்: நேற்று இந்திய குழுவுக்கு வாழ்த்து மற்றும் மூவர்ணக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சி விளையாட்டு கிராமத்தில் கோலாகலமாக நடந்தது. அப்போது “ஒலிம்பிக்குத்துச்சண்டை சாம்பியன்’ விஜேந்தரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால்,பரபரப்பு ஏற்பட்டது. இவருடன் சேர்ந்து “போட்டோ’ எடுக்க, போட்டிக்கானதன்னார்வ தொண்டர்கள், மீடியா மற்றும் குழந்தைகள் அதிக ஆர்வம் செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் யோகாவை கலந்து நவீன நடனம் நடந்தது. இது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இந்தியா வெற்றி : காமன்வெல்த், ஹாக்கி பயிற்சி போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. சந்தீப் சிங்கின் அபார ஆட்டம் அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது. இவர், இரண்டு “பெனால்டி கார்னர்’ வாய்ப்புகளை கோலாக மாற்றினார். முதல் போட்டியில் இங்கிலாந்தை வென்ற இந்திய அணி, இன்றைய பயிற்சி போட்டியில் டிரினிடாட்-டுபாகோ அணியை எதிர்கொள்கிறது.
கடைகளுக்கு விடுமுறை : காமன்வெல்த் போட்டி துவக்க விழா(அக்., 3) மற்றும் நிறைவு விழா(அக்.,14) நடக்கும் இரண்டு நாட்களுக்கு டில்லியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. மத்திய மாநில மற்றும் பொதுத் துறை அலுவலகங்கள் வரும் 14ம் தேதி மூடியிருக்கும். வரும்3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அரசு ஊழியர்களுக்கு பிரச்னையில்லை. பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
“பெடா’ அமைப்பு எதிர்ப்பு : காமன்வெல்த் போட்டி நடக்கும் இடங்களில் குரங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இவற்றை விரட்டி அடிக்க, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட “லங்கூர்’ வகை குரங்குகள் பயன்படுத்தப்பட்டன. இதற்கு மிருக வதைக்கு எதிரான “பெடா’ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “லங்கூர்’ வகை குரங்குகளை, அடிமைகள் போல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.
சுலப சுற்றில் பயஸ்-பூபதி ஜோடி : டில்லி காமன்வெல்த் விளையாட்டில் இடம் பெற்றுள்ள டென்னிஸ் போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடிக்கு எளிய சுற்றாக அமைந்துள்ளது. இவர்களுக்கு அரையிறுதி வரை எவ்வித பிரச்னையும் இல்லை. அரையிறுதியில் இவர்கள்,ஆஸ்திரேலியாவின் பால் ஹான்லி-பீட்டர் லுசாக் ஜோடி அல்லது பாகிஸ்தானின் குரோஷி-அகுயில் கான் ஜோடியை சந்திக்கலாம். ஆஸ்திரேலிய-பாகிஸ்தான் ஜோடி முதல்சுற்றில் மோதுகின்றன. பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ருஷ்மி சக்கரவர்த்தி ஜோடிக்கு, முதல் சுற்றில் “பை’ வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் நேரடியாக 2வது சுற்றில் விளையாடும் வாய்ப்பு பெற்றுள்ளனர். இதன்மூலம் இந்திய ஜோடி பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. கலப்பு இரட்டையரில் பயஸ்-சானியா ஜோடிக்கு சுலப சுற்றாக அமைந்துள்ளது. எனவே இந்த ஜோடி பதக்கம் வென்று சாதிக்க வாய்ப்பு உள்ளது.
thanks d.malar