Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

அன்புள்ள அம்மாவிற்கு —
என் வயது 40. என் குடும்பம் ஏழ்மையான குடும்பம்; என் கணவர் குடும்பம் சுமாரான குடும்பம். நான் படிக்காதவள்; அவர் படித்தவர். மூன்றாண்டுகள் என்னை காதலித்து, காத்திருந்து, திருமணம் செய்து கொண்டார்.
“நம் திருமணம், என் அண்ணன், தம்பிகளுக்கு தெரிய வந்தால், அவர்களும் என்னை போல் காதல் திருமணம் செய்து, கவுரவத்தை குலைத்து விடுவர்…’ எனக் கூறியதால், என் வீட்டு <உறவுகளுடன் மட்டுமே எங்கள் திருமணம் நடந்தது.
திருமணமானதிலிருந்து, இதுவரையில், என்னுடன் தங்குவதே இல்லை. மதியம் சாப்பாட்டு நேரம் வருவார்; செலவிற்கு பணம் கொடுத்து செல்வார். அப்போது நான் கேட்டபோதெல்லாம், “கொஞ்சம் பொறுமையா இரு… நமக்கு குழந்தை பிறந்தவுடன் வீட்டில் உண்மையைச் சொன்னால், உன்னையும், நம் குழந்தையையும் என் வீட்டார் சேர்த்து கொள்வர்…’ எனச் சொன்னார்.
நாட்கள் சென்றன. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. சில நாட்களில்,  என் கணவருக்கு இரண்டாவது திருமணம் நிச்சயமானது. அந்த பெண் வசதியானவள். படித்து நல்ல வேலையில் இருக்கும் பெண். அந்த நேரத்தில், என் கணவருக்கு  நல்ல வேலை கிடையாது.
என் கணவனின் இரண்டாவது திருமணம், அவர்கள் வீட்டினரின் முன்னிலையில் நடந்தது. இந்த விஷயம் அவர் நண்பரின் மூலம் எனக்கு தெரிய வந்தது. என் கணவரிடம் கேட்டபோது, “இந்த கல்யாணத்தை நிறுத்தினால், என்னை உயிருடன் பார்க்க முடியாது…’ என்று சொன்னார்.  வேறு வழியே இல்லாமல் மவுனமாக இருந்தேன்.
இனிமேல், நம்பிக்கை கெட்டவருடன் வாழ முடியாது என நினைத்து, விஷம் குடிக்கும் நிலைக்கு போய்விட்டேன். என்னை  சமாதானம் செய்து, சிறிது காலத்திற்கு பொறுமையாக இருக்கச் சொல்லி, காலத்தை கழித்து வந்தார்.
அந்த பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. என் மகள்கள் இருவரையும் ஓரளவுக்கு படிக்க வைத்தார். அம்மா… அவர், எங்கள் தேவைகளை இதுவரையிலும் நிவர்த்தி செய்து வருகிறார்; ஆனால், வெளியே எங்கேயும் சேர்ந்து போனது கிடையாது.
என் கவலை, வயதுக்கு வந்த பெண்களுக்கு, அப்பாவின் பாதுகாப்பில்லை என்பது தான். குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருக்கணும் என்ற உணர்வு, அவருக்கு கிடையாது. எங்கள் தேவைகளை மட்டும் நிவர்த்தி செய்தால் போதும் என எண்ணுகிறார். இனியும், அமைதியாக இருக்க முடியாது என அவரிடம் கேட்டபோது, “பிள்ளைகள் படிப்பு  முடியட்டும்…’ என்கிறார்.
நம்ம கஷ்டம் நம்முடன் போகட்டும். பிள்ளைகளின் படிப்பும், மனதும் இதனால் பாதிக்கப்படக் கூடாது என நினைத்து, மனதிலேயே போட்டு புதைத்து வைத்தேன். என் மூத்த மகளுக்கு திருமணமாகி, ஒரு பெண் குழந்தை பிறந்தது. அப்போது பிரச்னை முற்றியது.
இதுவரையிலும் அவருக்கு நான் நம்பிக்கை ஆனவளாகத்தான் இருக்கிறேன். இள வயதிலேயே நான் சந்தோஷமாக இருந்தது கிடையாது. இதுவரை வாழ்ந்த வாழ்விற்கு அர்த்தமில்லாமல் போகுமோ என்று நினைக்கிறேன்.
கணவனே தெய்வம். அவர் சொல்வது தான் வேதவாக்கு என வெகுளித்தனமாக இருந்திருக் கிறேன். இப்போது, வயதும், அனுபவமும், எவ்வளவு பைத்தியகாரியாக இருந்திருக்கிறேன் என  உணர்த்துகிறது. இப்போது அவர் அண்ணன், தம்பிகள், நண்பர்கள் எல்லாரும், என் வீட்டு நல்ல காரியங்களுக்கு வந்து போவர். ஆனால், அந்த பெண்ணுக்கும், அவங்க வீட்டிற்கும் தெரியாது.
“இதற்கெல்லாம் எப்ப தான் தீர்வு!’ என, என் கணவரிடம் கேட்க, “இரண்டாவது மகளுக்கு நல்ல இடத்தில் வரன் வரட்டும். அதுவரையில் அமைதியாக இரு…’ என்கிறார். இப்படியே எங்களுக்குள் வாக்குவாதம் நடந்து, மன அமைதி இழந்து தவிக்கிறேன். இனி என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன். உங்கள் ஆலோசனைப் படி நடக்க காத்ருக்கிறேன்.
— இப்படிக்கு,  உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு —
உன் கடிதம் கிடைத்தது. படித்து முடித்ததும், உன் மீது தீரா கோபம் கிளர்ந்தெழுந்தது. உன்னைப் போலொரு பத்தாம்பசலியை இதுவரை நான் பார்த்ததே கிடையாது. உன் கணவர், உன்னை செய்து கொண்டது, “பொம்மைக் கல்யாணம்!’ உ<ண்மையில் நீ அவருக்கு ஓர் ஆசை நாயகியாகத்தான் இருந்து வருகிறாய்.
உன் திருமணம் சட்டப்பூர்வமாக நடந்ததா அல்லது கோவிலில் மாலை மாற்றிக் கொண்டீர் களா என்பதை நீ குறிப்பிடவில்லை. உன் திருமணம் சட்டப்படி நடந்திருந்தால், உன் கணவரின் இரண்டாவது திருமணம், இந்து திருமண சட்டப்படி செல்லாது.
உன் கணவர் ஒரு ஒயிட்காலர் கிரிமினல். மிக அழகாக திட்டம் போட்டு, காய் நகர்த்தி வருகிறார். உங்கள் காதல் திருமணம், அவரது சகோதர, சகோதரிகளுக்கு தெரிந்தால், அவர்களும் காதல் பண்ணி, குடும்ப கவுரவத்தை கெடுத்து விடுவராம். காடாறு மாதம் நாடாறு மாதம் விக்கிரமாதித்யன் போல், உன் கணவர் பகலில் உன் வீட்டிலும், இரவில் இரண்டாவது மனைவி வீட்டிலும் இருந்து வருகிறார். அவருக்கு, உன் வீடு ஒரு மங்கம்மா சத்திரம் போல. குழந்தை பிறந்தவுடன் உன்னை தன் வீட்டாருடன் சேர்த்துக் கொள்வதாக பசப்பியிருக்கிறார். “கல்யாணத்தை நிறுத்தினால், தற்கொலை செய்து கொள்வேன்…’ என, எமோஷனல் பிளாக்மெயில் பண்ணியிருக்கிறார்.
பின், உன் முதல் மகள் திருமணம் நடந்தது. அவளுக்கு ஒரு குழந்தை பிறந்து, நீங்கள் இருவரும் தாத்தா-பாட்டி ஆகி விட்டீர்கள். அடுத்த மகள் திருமணம் நடக்கட்டும்; பையனின் படிப்பு முடியட்டும் என சால்ஜாப்பு கூறுகிறார் உன் கணவர்.
எழுதி வைத்துக்கொள்… கொள்ளுப்பேரன் பிறந்தாலும், அவர் குடும்பத்துடன் உன்னை இணைக்க மாட்டார். உன்னை வெகுளி என திட்டுவதா, வாத்து மடைச்சி என திட்டுவதா?
நீ படிக்காதவள். வெளியுலக அனுபவம் இல்லாதவள். வெளுத்ததெல்லாம் பால் என எண்ணுபவள். ஏமாற்றுவதையே சுவாசமாய் கொண்ட கணவனை, கண்டிக்கத் தெரியாத, தட்டிக்கேட்கத் தெரியாத கோழை. இத்தனை வருடம் நீ வாழ்ந்தது, ஓர் அடிமை வாழ்வு. நீ படித்து பணிக்கு செல்பவளாய் இருந்திருந்தால், பொருளாதார சுதந்திரம் பெற்றிருந்திருப்பாய். மதம் கொண்ட யானையாய் எழுந்து, கணவனை துவம்சம் பண்ணியிருப்பாய். இரண்டாம் கல்யாணமே உன் கணவனுக்கு நடந்திருக்காது. முதல் குழந்தை பெற்ற கையோடு, கணவனின் வீட்டில் போய், “ஜங்’ என்று உட்கார்ந்திருக்க வேண்டும் நீ.
நடந்ததை விடு; இனி நடக்க வேண்டியதை பார்ப்போமா செல்லம்?
உன் அறியாமையே, உன் கணவர் செய்யும் குற்றத்தின் மூலதனம். வீறு கொண்டெழு. உன் பிறந்த வீட்டார், உன் மூத்த மகளின் புக்கவீட்டாருடன், கணவரின் வீட்டுக்கு நேரே போய் நியாயம் கேள். உன் கணவரின் வீடு உனக்கு முழு உரிமையானது. உனக்கு போகத்தான் எதுவும், யாருக்கும். உன் கணவரின் இரண்டாம் திருமணம், அப்பளமாய் நொறுங்கிப் போகும். விஷயம் தெரிந்து, உன் கணவரின் இரண்டாம் மனைவி, ஒன்று கணவனை விட்டு விலகுவாள் அல்லது உன்னுடன் சமாதானம் பேசி, வீட்டில் சொற்ப பங்கு கேட்பாள். உன் கணவர், உன்னுடனான திருமணத்தை, ஊரறிய, உலகறிய ஒத்துக்கொள்ளா விட்டால், நீதிமன்றம் போவேன் என மிரட்டு. அரசு பணியில் இருந்தார் என்றால், வேலை போய்விடும் என எச்சரிக்கை செய்.
கரை வரை வந்து போனால், வெறும் கடலலை. ஊருக்குள் ஏறி, கண்டதையும் வாரி சுருட்டினால், அது ஆழிப்பேரலை. மனைவி, தாய், மாமியார், பாட்டி உறவுமுறைகளில் உனக்கான முழு அங்கீகாரத்தை தட்டிபெறு. ரயிலின் கடைசி பெட்டி போவதற்குள் விழிப்பாய் செயல்படு. விரைந்தோடி வண்டிக்குள் ஏறு. உன் காலம் தாழ்ந்த விவேகம், உன் மகளுக்கு சீதனமாய் அமையட்டும். “கணவன் தெய்வம், கணவன் சொல் வேதவாக்கு’ சித்தாத்தங்கள் காலாவதியானவை. கணவன் தெய்வமல்ல; உன்னுள் பாதி. வாழ்க்கை எனும் வியாபாரத்தை நடத்தும் சமபங்கு முதலீட்டாளர்கள். எந்த விஷயத்தை காதுற்றாலும், கண்ணுற்றாலும், தீர விசாரித்து நம்பு. இனி, மீதி வாழ்நாளுக்கு, உன் கணவனை நீதிமன்றக்காவலில் இருக்கும் விசாரணைக் கைதியாய் ஒரு படி தாழ்த்தி வை. அகிம்சாவழிகளில் அவனை தண்டி. ஒரு நாள், கதறி உன் காலில் விழுவான். விழும் சுபசெய்தியை எனக்கு தெரிவி.

என்றென்றும் தாய்மையுடன்,  – சகுந்தலா கோபிநாத்

நன்றி – தினமலர் வாரமலர் நாளிதழ்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: