Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர்: காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம்

உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட காமன்வெல்த் போட்டிகள் டில்லியில் இன்று கோலாகலமாக துவங்குகிறது.  தலைநகர் டில்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. “ஹெலிகாப்டர்’ மற்றும் ஆளில்லாத உளவு விமானங்கள், வானில் வட்டமடித்தவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட இருக்கின்றன. நகர் முழுவதும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ராணுவம், போலீசார், கமாண்டோ படை உட்பட ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.டில்லியில் நடக்கும் இந்த போட்டி 19வது காமன்வெல்த் போட்டி.  வரும் 14ம் தேதி போட்டிகள் நிறைவடைகின்றன. மொத்தம் 12 நாட்கள் நடக்கும் இந்த விளையாட்டு திருவிழாவில் 71 நாடுகளை சேர்ந்த  8,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் விஜேந்தர், சுஷில் குமார், சானியா, செய்னா உள்ளிட்ட மிகப் பெரும் நட்சத்திரப் படை களமிறங்குகிறது.

சார்லஸ் பங்கேற்பு: இன்று மாலை ஜவகர்லால் நேரு மைதானத்தில் வண்ணமயமான துவக்க விழா நடக்க உள்ளது. போட்டியை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மற்றும் இளவரசர் சார்லஸ் இணைந்து துவக்கி வைக்கின்றனர். ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்று, 5,000 ஆண்டுகள் பழமையான இந்திய பாரம்பரியத்தை போற்றும் நிகழ்ச்சிகளை அரங்கேற்ற இருக்கின்றனர்.பள்ளிக் குழந்தைகளுடன் சேர்ந்து, முதல் வணக்கப் பாடலை ஹரிஹரன் பாடுகிறார். போட்டியின் அதிகாரப்பூர்வ பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடுகிறார். “அறிவு சார்ந்த மரம்’ என்ற நிகழ்ச்சியில், வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவை பார்க்கலாம். வித்தியாசமான “மனிதச் சங்கிலி’ நடனமும் இடம் பெற உள்ளது. “லேசர் ÷ஷா’, வாணவேடிக்கை என, துவக்க விழா களை கட்ட உள்ளது.

பிந்த்ராவுக்கு பெருமை: தொடர்ந்து நடக்கும் அணிவகுப்பில் இந்திய குழு சார்பில், மூவர்ணக் கொடியை “ஒலிம்பிக் தங்க நாயகன்’ அபினவ் பிந்த்ரா ஏந்தி வர உள்ளார். காமன்வெல்த் ஜோதியை செய்னா, சுஷில் குமார் உள்ளிட்ட நமது நட்சத்திரங்கள் எடுத்து வருகின்றனர்.

பலத்த பாதுகாப்பு: பல்வேறு சர்ச்சைகளை கடந்து போட்டிகள் நடக்க இருப்பதால், டில்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை சமாளிக்கும் பொருட்டு, ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழையும் விமானங்கள், அதிரடியாக சுட்டு வீழ்த்தப்படும். இதற்கு  போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. விளையாட்டு கிராமம் அமைந்துள்ள பகுதியில் ஹெலிகாப்டர்களில் பறந்தவாறு கமாண்டோ படையினர் கண்காணிக்க உள்ளனர். ஒரு சிறு அசம்பாவிதம் கூட ஏற்படக் கூடாது என்பதில் மத்திய உள்துறை அமைச்சகம் மிகவும் கவனமாக உள்ளது. துவக்க விழாவை காண வரும் ரசிகர்கள் முன்கூட்டியே மைதானத்துக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்கள், முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவர். பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

கேமரா கண்காணிப்பு: போட்டி நடக்கும் மைதானங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ரகசிய “சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமரா மூலம், டில்லி போலீஸ் தலைமையகத்தில் இருந்தவாறு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ரசாயனம், கதிர்வீச்சு போன்ற அறிவியல் ரீதியான தாக்குதலை சமாளிக்கவும் தனிப்படை தயாராக உள்ளது.டில்லி போலீசாருக்கு துணையாக 200 மோப்ப நாய்களும் செயல்பட உள்ளன. டில்லி நகரில் ஆங்காங்கே பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. எந்த நிலைமையையும் எதிர்கொள்ள ராணுவம் தயார் நிலையில் உள்ளது. ஒட்டுமொத்தமாக உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், வீரர், வீராங்கனைகள் அச்சமின்றி போட்டிகளில் பங்கேற்கலாம்.
2.5 நிமிடத்துக்கு ஒரு ரயில் : காமன்வெல்த் போட்டிக்காக, டில்லியில் மொத்தம் 181 சிறப்பு “மெட்ரோ’ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. போட்டி நடக்கும் முக்கியமான ஜவகர்லால் நேரு மைதானத்தை இணைக்கும், மத்திய தலைமைச் செயலகம் – பாதார்புர் மார்க்கத்தில் 2.5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதே போல, மற்ற மெட்ரோ ரயில்கள்  5 நிமிட இடைவெளியில் பறக்கும். ரயில்களை தடை இல்லாமல் இயக்க, ஜெர்மனி மற்றும் தென் கொரியாவில் இருந்து இன்ஜினியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ரயில்வே ஸ்டேஷன்களில் கூடுதலாக டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

thanks d.malar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: