அடுத்த மாதம் நடைபெறவுள்ள கலைஞர் வீட்டு வசதி திட்ட தொடக்க விழாவில் கலந்துகொள்ளு மாறு எதிர்க்கட்சித் தலைவர் ஜெய லலிதாவுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.இந்த விழாவில் கலந்துகொள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ளன.
.
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குடிசை வீடுகளை மாற்றி 21 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டிக்கொடுக்கும் கலைஞர் வீட்டு வசதி திட்டம் விரைவில் அறிமுகப் படுத்தப்படவுள்ளதாக கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது.அதன்படி இந்த திட்டத்தின் தொடக்க விழா அடுத்த மாதம் 3-ந் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. முதலமைச்சர் கருணாநிதி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்த மெகா திட்ட தொடக்க விழாவில் கலந்துகொள்ளுமாறு, எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா முதல் புதிய பாரதம் தலைவர் ஜெகன்மூர்த்தி வரை சட்டப்பேரவை கட்சிகளுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.இந்த திட்டம் அவரது உள்ளாட்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படவிருப்பதால், அந்த துறையின் அமைச்சர் என்ற முறையில் துணை முதல்வர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அரசு திட்டத்துவக்க விழாக்களில் அனைத்துக்கட்சிகளும் பங்கு பெறுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் தமிழகத்தில் மட்டுமே பிரதான எதிர்க்கட்சி இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வருகிறது.கடந்த காலத்தில் 2001-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அன்பழகன், சென்னை மேயராக இருந்த ஸ்டாலின் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று அவர்கள் இருவரும் கலந்துகொண்டனர்.
இதேபோல சுனாமி நிதி வசூலித்த போது, ஸ்டாலின், கருணாநிதியின் சார்பில் காசோலைகளை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கினார்.இந்த ஜனநாயக மாண்பை கட்டிக் காக்கும் வகையில் ஜெயலலிதாவுக்கு தான் அழைப்பு விடுத்திருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட துவக்க விழாவின் போதும் தான் இதேபோல கடிதங் களை அனுப்பியதாக ஸ்டாலின் கூறினார்.இதனிடையே துணை முதல்வர் ஸ்டாலின் அழைப்பை ஏற்று இந்திய கம்யூனிஸ்ட் சட்டமன்ற கட்சித் தலைவர் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டமன்ற கட்சித் தலைவர் பாலபாரதி ஆகியோர் விழாவில் கலந்துகொள்ள இசைவு தெரிவித்துள்ளனர்.ஆனால் ஜெயலலிதாவிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.