புகழ்ச்செல்வி எனற இதழின் ஆசிரியர் திருவாளர் பரணிப்பாவலன் அவர்கள் நமது விதை2விருட்சம் இணையத்திற்காக எழுதியுள்ள கட்டுரைகள் வாசகப்பெருமக்களே! இவர்தம் வரிகளில் தனது ஆதங்கத்தையும் தனது உணர்ச்சிகளையும் தான் எழுத்துக்களாக வடித்துள்ளார். ஆகையால் வாசகப் பெருமக்களே! இவருடைய ஆதங்கத்திற்கும் உணர்ச்சிகளுக்கும் மதிப்பளித்து இனி நாம் ஒவ்வொருவரும் தமிழிலேயே பேசி பழக உறுதி ஏற்போம் தமிழர்களே! இதோ அன்னைத் தமிழுக்காக திருவாளர் பரணிப்பாவலன் அவர்களின் கட்டுரை இதோ . .
எம் இனிய தொப்புள் கொடி உறவுகளுக்கு வணக்கமும், வாழ்த்தும்,
உங்களோடு இந்த விதை2விருட்சம் என்ற இணையதளத்தின் மூலமாக உறையாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் இருவரும் இணைந்து செயலாற்றிட வழிவகுத்த விதை2விருட்சம் ஆசிரியர் – தொடர்பாளர் அய்யா வாய்மையாளன் என்கிற ரா. சத்தியமூர்த்தி அவர்களுக்கு, புகழ்ச்செல்வியின் இதழாசிரியரான பரணிப்பாவலன் ஆகிய நான், எனது நெஞ்சார்ந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சூரியப் பந்து பெற்றெடுத்த முதல் குழந்தை இந்த உலகப் பந்தில் முதலாக தோன்றிய மாந்தன் தமிழன். அவன் பேசிய மொழி தமிழ் என பல்வேறு தமிழறிஞர்களும் பல்வேறு உலகியல் வரலாற்று அறிஞர்களும் ஒப்புக்கொண்டு நிறுவியும் உள்ளனர். அத்தகைய மொழியானது அந்த மொழியில் தோன்றிய இலக்கியம், இலக்கணம் இன்று சிதைந்து, சீர்கெட்டு உள்ளது என்பதை நாம் அறியும் நிலையில் மனம் வெம்புகிறது. கண்ணில் குருதி கசிகிறது. இதற்கான தாழ்வுநிலைகளை ஒருமுறை எண்ணிப்பார்ப்போம்.
பல்வேறு இனத்தால் ஆளப்பட்டு வந்த தமிழ் இனம், பல்வேறு மொழிகளால் தாக்கப்பட்ட தமிழ் இனம், தன்னுடைய முகவரியை இழந்து தவிக்கிறது. ஒரு இனத்தின் பெருமையை அதன் மொழிப் புலமை முதன்மை பங்கு ஏற்கிறது. அவ்வகையில் நமக்கு கிடைத்த இலக்கியங்களை ஆய்வு செய்கையில், தொல்காப்பியம் மிகத் தொன்மையான நூலாகும். மேலும் இது ஒரு இலக்கண நூலாகும்.
முதலில் ஒரு மாந்தன் தனது தேவைகளை மற்றொருவனுக்கு உணர்த்திட உடல் உறுப்புக்களை அசைத்து காட்டினான். பின்பு நாவினால் பேசிட இல்லை இல்லை கத்திட இயம்பினான். இவ்வாறு ஒவ்வொரு சொல்லும் பிறந்தது. பிறகு ஒவ்வொரு சொல்லும் இணைந்து சொற்றடராக வளர்ந்து பின்பு இலககியமாக வடிவெடுத்து, பின்பு எழுந்த இலக்கியத்தை செப்பனிட இலக்கணம் பிறந்தது.
அவ்வாறு பிறந்த இலக்கணம், இலக்கியம் கொண்டத் தமிழ் இன்று புதைகுழியில் உள்ளது என்பது வருந்ததக்க நிலைதான் என்றாலும் தமிழை மீட்டெடுக்க தமிழனாக உள்ள ஒவ்வொருத் தமிழனும் செயல்பட வேண்டும். அதற்காக இந்த நொடி முதல் நம் நாக்கைத் திருத்த வேண்டும்.
பேசுகின்ற ஒவ்வொரு சொல்லும் எழுதுகின்ற ஒவ்வொரு எழுத்தும் தமிழுக்கு ஏற்றமளிக்க வேண்டும் என்பதை மனத்தில் நிறுத்தி நம் செயல்களை தொடங்கிடுவோம். நமது இலக்கினை வென்றடைவோம்.
பரணிப்பாவலன்,
புகழ்ச்செல்வி இதழாசிரியர்
அலைபேசி எண்-7871187306
எம் தலையைக்கொய்தாலும் துயரில்லை
எம்தமிழ்தான் வாழ்ந்தாக வேண்டும்.