கடந்த ஒரு வருடமாக உடல்நிலையை காரணம் காட்டி, சி.பி.ஐ., விசாரணையிலிருந்து தப்பித்து வந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தலைவர் ராமலிங்க ராஜுவிடம் சி.பி.ஐ., போலீசார் நேற்று நான்கு மணிநேரம் விசாரணை நடத்தினர்.
பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில், 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு நடந்ததாக அதன் தலைவர் ராமலிங்கராஜு உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது இ.த.ச., 409, 420 மற்றும் 468, 471 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமலிங்கராஜுவிற்கு நுரையீரல் கோளாறு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே, அவருக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கும்போதெல்லாம் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, நிசாம் மருத்துவ மையத்தில் ராமலிங்கராஜு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதன்காரணமாக, தன் மீதான சி.பி.ஐ., விசாரணையை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். கடந்த சனிக்கிழமை ராமலிங்கராஜு, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதையொட்டி, அவருக்கு சி.பி.ஐ., போலீசார் சம்மன் அனுப்பியதன் பேரில், நேற்று மண்டல சி.பி.ஐ., அலுவலகத்திற்கு ராமலிங்கராஜு வந்தார். அவரிடம், சி.பி.ஐ., போலீசார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக துருவித் துருவி விசாரணை நடத்தினர். அவரிடம், வெளிநாட்டு வங்கிகளில் செய்துள்ள முதலீடு மற்றும் சத்யம் நிறுவனத்தின் நிதி மற்ற வகையில் கைமாறிய விதம் குறித்து விசாரணை நடைபெற்றது. பிரிட்டன் வெர்ஜின் தீவுகள் மற்றும் பெல்ஜியம் நாடுகளில் துவங்கியதாக கருதப்படும் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கேட்டறிந்தனர். விசாரணை முடிந்த பின், வெளியே வந்த ராமலிங்கராஜுவை நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். இருப்பினும், அவர்களுக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து அவர் நகர்ந்தார். ராமலிங்கராஜுவுடன் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றவர்களிடமும் சி.பி.ஐ., போலீசார் விசாரணையை துவங்கவுள்ளனர். இதற்கிடையே, ராமலிங்கராஜு மற்றும் சிலருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்யும் வகையில், சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல விசாரணை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Thanks DINAMALR