வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிப்பதற்கான காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் சந்தோஷ் கே.மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2006ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒருமுறை புத்துப்பித்தல் சலுகையும், 2009ஆம் ஆண்டு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்புப் புதுப்பித்தல் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் வழியே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை ஒருங்கிணைக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக அலுவலகத்தின் அனைத்துப் பணிகளும் கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டன. எனவே, நிறுத்தப்பட்ட இந்தக் காலத்துக்கு ஈடாக வேலைவாய்ப்புப் பதிவினை திங்கள்கிழமை முதல் வரும் 19ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது. பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்கள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு உரிய படிவத்தில் வேலைவாய்ப்புப் பதிவு அடையாள அட்டையின் நகலுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் முறையிலோ மனுச் செய்து பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று சந்தோஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.