Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு

தமிழக டி.ஜி.பி.,யாக லத்திகா சரணை நியமித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. புதிய டி.ஜி.பி., நியமிக்கும் வரை, பதவியில் லத்திகா சரண் தொடரலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழக டி.ஜி.பி.,யாக லத்திகா சரணை கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு நியமித்தது. இதை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், டி.ஜி.பி., நடராஜ் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை, தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடராஜ் மனு தாக்கல் செய்தார்.அதில், “எனது சீனியாரிட்டியை புறக்கணித்து விட்டு, டி.ஜி.பி.,யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த வழிமுறைகள், டி.ஜி.பி., நியமனத்தில் பின்பற்றப்படவில்லை. எனவே, லத்திகா சரண் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட் வழிமுறைகளை பின்பற்றி, டி.ஜி.பி.,யை தேர்ந்தெடுக்க உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.மனுவை நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்’ விசாரித்தது. டி.ஜி.பி., நடராஜ் சார்பில் சீனியர் வக்கீல் சோமயாஜி, வக்கீல் என்.எஸ்.நந்தகுமார் ஆஜராகினர்.

 

“டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:ஆவணங்களை பரிசீலிக்கும் போது, டி.ஜி.பி., நியமனத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது வெளிப்படுகிறது. பெயர் தெரியாத அதிகாரி தயாரித்த குறிப்புகளைத் தவிர, சம்பந்தப்பட்ட அதிகாரியின் சாதக, பாதக அம்சங்களை பரிசீலனை செய்ததை சுட்டிக்காட்டும் அளவுக்கு, கோப்பில் எதுவும் இல்லை.முறையான தேர்வு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன என்பதை இந்தக் கோப்பு வெளிப்படுத்தவில்லை. மற்றவர்களை விட லத்திகா சரணுக்கு முன்னுரிமை வழங்கி தேர்வு செய்ததற்கான காரணம் எதையும் கோப்பில் தெரிவிக்கவில்லை. லத்திகா சரணை தேர்வு செய்யும் போது, தகுதியுள்ள மற்ற அதிகாரிகளின் சர்வீஸ் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியவில்லை.சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றவில்லை. டி.ஜி.பி., நியமனத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை.

 

டி.ஜி.பி., விஜயகுமார் அயல் பணிக்கு சென்றுள்ளார். இதனால் அவர் ஏற்கனவே பணியாற்றிய துறையில் உள்ள உரிமை தொடர்ந்து இருக்கும். அடிப்படையில் எந்தத் துறையில் இருந்து சென்றாரோ, அந்தத் துறைக்கான சலுகைகளை பெற அவருக்கு உரிமை உள்ளது. எனவே, பதவி உயர்வு மற்றும் சலுகைகள் அவருக்கு தொடரும். டி.ஜி.பி., பதவிக்கு அவரை பரிசீலித்திருக்க வேண்டும். தற்போது டி.ஜி.பி., அந்தஸ்தில் விஜயகுமார் உள்ளார். 2008ம் ஆண்டு செப்டம்பர் முதல் டி.ஜி.பி.,யாக மனுதாரருக்கு இணையாகவும், லத்திகா சரணை விட சீனியாரிட்டியிலும் உள்ளார். இவரது பெயரை, டி.ஜி.பி.,க்கு பரிசீலித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், இந்த முகாந்திரத்தின்படியே லத்திகா சரணை டி.ஜி.பி.,யாக நியமித்ததை ரத்து செய்யலாம்.டி.ஜி.பி.,யாக லத்திகா சரணை நியமித்தது செல்லும் என மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

 

சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த வழிமுறைகளை கருத்தில் கொள்ளாமல், மனதை செலுத்தாமல் தீர்ப்பாயம் இப்படி உத்தரவிட்டுள்ளது. இந்தப் பிரச்னையை தீர்ப்பாயம் முறையாக அணுக தவறி விட்டது. எனவே, தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. லத்திகா சரணை டி.ஜி.பி.,யாக நியமித்து பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு பின்பற்றப்படவில்லை என எங்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, அதை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்பதை உறுதி செய்யும் பொறுப்பு, கடமை எங்களுக்கு உள்ளது. பொதுநலன் கருதி டி.ஜி.பி., பதவியை காலியாக வைத்திருக்க நாங்கள் விரும்பவில்லை.

 

  • டி.ஜி.பி., ரேங்கில் உள்ள தகுதிவாய்ந்த அதிகாரிகள் பெயரை, அவர்களின் பணி ஆவணங்களுடன் மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு (யு.பி.எஸ்.சி.,) தமிழக தலைமைச் செயலர் அனுப்ப வேண்டும். பட்டியலை தயாரிக்குமாறு கேட்டு இதை அனுப்ப வேண்டும். வரும் 26ம் தேதிக்குள் யு.பி.எஸ்.சி.,க்கு கிடைத்து விட்டதா என்பதை தலைமைச் செயலர் உறுதி செய்ய வேண்டும்.
  • தமிழக அரசு அனுப்பிய பெயர்கள், விவரங்களில் விளக்கம் பெற யு.பி.எஸ்.சி., கருதினால், அதை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். தேவைப்பட்டால் தனியாக ஒருவரை நியமித்து அவர் மூலம் நவம்பர் 12ம் தேதிக்குள் தெளிவுபடுத்த வேண்டும்.
  • சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி பட்டியலை தயாரித்து, அதை நவம்பர் 26ம் தேதிக்குள் தமிழக தலைமைச் செயலருக்கு யு.பி.எஸ்.சி., அனுப்ப வேண்டும்.
  • அதை தலைமைச் செயலர் பெற்ற உடன், அந்தப் பட்டியலில் உள்ள அதிகாரிகளில் ஒருவரை தேர்ந்தெடுத்து, டிசம்பர் 7ம் தேதிக்குள் டி.ஜி.பி.,யாக நியமிக்க வேண்டும்.
  • அதுவரை டி.ஜி.பி.,யாக பணியாற்ற லத்திகா சரணை அனுமதிக்க வேண்டும். கோர்ட் உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை டிசம்பர் 14ம் தேதி தலைமைச் செயலர் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.

 

சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அரசு முடிவு : “டி.ஜி.பி., நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டின் வழிமுறைகளை கொஞ்சமும் வழுவாமல் தமிழக அரசு பின்பற்றியுள்ளது. ஐகோர்ட் தீர்ப்பின் நகலைப் பெற்று, சட்ட ரீதியான உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்’ என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழக டி.ஜி.பி., நியமனம் குறித்த தமிழக அரசின் விளக்கம்:தமிழக டி.ஜி.பி., நியமனத்தை பொறுத்தவரை, சுப்ரீம் கோர்ட்டின் வழிமுறைகளையே, தமிழக அரசு பின்பற்றியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி, இப்பதவிக்கான நியமனம் ஒரு தேர்வு நியமனம். இப்பணியிடத்திற்கு தேர்வு செய்யும் போது, அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் பணியாற்றும் டி.ஜி.பி., அந்தஸ்தில் இருந்த அனைத்து அலுவலர்களின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு, அவர்களது பணித்திறன்,  அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் மாநில டி.ஜி.பி., தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்த நியமனம் தேர்வு நியமனம் என்பதால், பணி மூப்பு அடிப்படையில் மட்டும் செய்யப்படுவதில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள டி.ஜி.பி., பதவியிடங்களுக்கு பட்டியல் தயாரிக்கும் பொறுப்பை சுப்ரீம் கோர்ட், மத்திய அரசு பணியாளர் தேர்வாணயம் (யு.பி.எஸ்.சி.,) ஏற்று செய்ய வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இருந்த போதிலும் அதை நடைமுறைப்படுத்த யு.பி.எஸ்.சி., மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை கோரியுள்ளது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டும், மத்திய அரசும் இது குறித்து உரிய உத்தரவுகள் எதையும் இதுவரை பிறப்பிக்கவில்லை.இந்த விவரங்களை யு.பி.எஸ்.சி., சென்னை ஐகோர்ட்டிலும் தனது பதில் உறுதி ஆவணத்திலும் சுட்டிக் காட்டியுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசும் இரு முறை மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த விவரத்தையும் தமிழக அரசின் தலைமை வக்கீல் சென்னை ஐகோர்ட்டின் கவனத்திற்கு, வழக்கின் போது கொண்டு வந்துள்ளார். யு.பி.எஸ்.சி., பட்டியல் தயாரிக்க இயலாத சூழலில், தமிழகத்தில் அந்த காலகட்டத்தில் பணியாற்றிய அனைத்து டி.ஜி.பி.,க்களும் கருதப்பட்டு, லத்திகா சரண் தமிழக அரசால், டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.எனவே, சுப்ரீம் கோர்ட்டின் வழிமுறைகளைக் கொஞ்சமும் வழுவாமல் தமிழக அரசு பின்பற்றியுள்ளது என்பது தெளிவு. சென்னை ஐகோர்ட்டின் முழுத்தீர்ப்பின் நகலைப் பெற்று, வாசகங்களை நன்கு ஆராய்ந்து, சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து, சட்ட ரீதியான உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும்.இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது.  thanks dinamalar

Leave a Reply