ஆராயப்படாத வாழ்க்கை வாழத்தகுந்ததல்ல என்றான் ஒரு கிரேக்க ஞானி. ஏனென்றால் ஆராயும் போதே வாழ்க்கை ஆழமாகின்றது. சரியையும், தவறையும் கண்டுபிடித்து எதிர்காலத்தை நிர்ணயிப்பது சாத்தியமாகிறது. அப்படி ஆராயவும், ஆராய்ந்தறிந்த உண்மைகளை உபயோகப்படுத்திக் கொள்ளும் ஒரு முறையே இந்த 80/20 விதி.
இந்த விதியை முதலில் இத்தாலிய பொருளாதார நிபுணர் வில்ப்ரெடொ பரெடொ (Vilfredo Pareto) என்பவர் தன் நாட்டின் பொருளாதாரத்தை ஆராய்ந்த போது கண்டுபிடித்தார். தன் நாட்டின் 80% சொத்துக்கள் 20% மக்களிடம் இருப்பதாக 1906ல் கணக்கிட்டார்.
1930-40களில் அமெரிக்க மேனேஜ்மெண்ட் நிபுணர் டாக்டர் ஜோசப் ஜூரன் (Dr.Joseph Juran) அதே விதி எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும் என்று கூறி வந்தார். எல்லாவற்றிலும் பெரும்பாலான விளைவுகளை சிறுபாலான காரணங்களே ஏற்படுத்துகின்றன என்று கூறிய அந்த விதி பின்னர் பலராலும் பரெடொ விதி அல்லது 80/20 விதி என்றழைக்கப்பட ஆரம்பித்தது.
இந்த விதியை மையமாக வைத்து ரிச்சர்ட் கொச் (Richard Koch) என்பவர் 1998ல் “80/20 விதி – குறைந்ததைக் கொண்டு நிறைய அடையும் ரகசியம்” என்ற ஒரு நூலை எழுதி, அது மிகப் பிரபலமடைந்தது.
இதில் எண்பதும், இருபதும் அதிகத்தையும், குறைவையும் குறிக்கும் குறியீடுகளே தவிர, துல்லியமான சதவீதத்தைக் குறிக்கும் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.
ஒரு வியாபாரி தனக்கு பெரும்பாலான (80%) வியாபாரத்தை அளிப்பது குறைவான எண்ணிக்கையுடைய (20%) பெரிய வாடிக்கையாளர்களே என்பதை எளிதாகக் கூற முடியும். ஒரு மனிதன் தனக்கு அதிகமான (80%) திருப்தியைத் தரும் செயல்கள் ஒரு சில (20%) தான் என்பதைக் காண முடியும். தனக்கு 80% வருவாயைத் தருவது 20% முக்கிய செயல்பாடுகளே என்பதைக் கணக்கிட முடியும். இப்படி எல்லா விஷயங்களிலும் இந்த விதி பெரும்பாலும் பொருந்துவதாகவே இருக்கிறது.
இந்த விதியை நினைவு வைத்து புத்திசாலித்தனமாகச் செயல்படும் மனிதன், அதிக சிரமமில்லாமல் நிறைய சாதிக்க முடியும். வியாபாரத்தில் ஒருவன் முக்கியமான 20% பெரிய வாடிக்கையாளர்களை மிகத் திருப்திகரமாக வைத்துக் கொண்டால் 80% லாபத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இப்படி வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் அதிக பலனைத் தருவனவற்றை அறிந்து வைத்திருந்து, அவற்றை சிறப்பாக செயல்படுத்த முடிபவன் அந்தந்த விஷயங்களில் பெரும் வெற்றியையும், திருப்தியையும் காணலாம்.
மிகவும் ப்ராக்டிகலாகவும், எளிமையாகவும் தெரிகின்ற இந்த உண்மையை பெரும்பாலானோர் உணரத் தவறிவிடுகிறார்கள். முக்கியமானது, முக்கியமில்லாதது, அதிக பலன் தருவது, குறைவான பலன் தருவது என்று பகுத்தறிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக அல்லது எல்லாவற்றையும் ஒரே போல செயல்படுத்துகிறார்கள். பின் ‘நான் எவ்வளவு செய்தாலும் எனக்கு அதிக பலனே கிடைப்பதில்லை’ என்று புலம்பும் மனிதர்களாகி விடுகிறார்கள்.
முதலில் எது முக்கியம் என்பதில் ஓவ்வொருவரும் தெளிவாக இருத்தல் நல்லது.
எது எவ்வளவு பலன் தரும் என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம். ஒவ்வொரு மனிதனுக்கும் எல்லாவற்றையும் முழுமையாக சிறப்பாகச் செய்து முடித்தல் சாத்தியம்
இல்லை. நேரமும், சூழ்நிலைகளும் பல சமயங்களில் பாதகமாக இருக்கும் போது அவன் பலவற்றைச் செய்ய முடியாமல் போகிறது. அப்படிச் செய்ய முடியாமல் போகும் செயல்கள் 80% பலன் தரும் விஷயங்களாக இருந்து விடாமல் அவன் பார்த்துக் கொள்வது புத்திசாலித்தனம்.
அதே போல் அதிக பலன் தரும் விஷயங்களுக்கு மற்ற விஷயங்களுக்குக் காட்டும் அக்கறையையும், உற்சாகத்தையும் விட அதிக அக்கறையும், உற்சாகமும் காட்டுதல் பலன்களின் அளவையும், தரத்தையும் அதிகரிக்கும்.
பலர் பலன் குறைவாகத் தரும் அதிக விஷயங்களில் முதலிலேயே முழு சக்தியையும் விரயமாக்கி விட்டு பின்னர் அதிக பலன் தரும் விஷயங்களுக்கு வரும் போது சோர்ந்து விடுகிறார்கள். அதிக வெற்றிகளை அடைய விரும்புபவர்கள் அப்படி முன்யோசனையில்லாதவர்களாக இருந்து விடக்கூடாது.
- முடிந்தால் 80% பலன்களைத் தரும் செயல்களை ஓவ்வொரு நாளும் முதலில் செய்வது நல்லது.
- முக்கியத்துவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு செயலாகப் புரிவது நல்லது.
- அது நடைமுறைக்கு ஒத்து வராவிட்டால், பிற்பாடே கூட அந்த முக்கிய செயல்களுக்கு அதிக நேரம், அதிக கவனம், அதிக உற்சாகம் தந்து செயல்படுவது நல்ல விளைவுகளைத் தரும்.
இந்த 80/20 விதியை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறீர்களா? இல்லையென்றால் அதை உணர்ந்து செயல்படுத்த ஆரம்பிக்க இன்றே, இதுவே நல்ல முகூர்த்தம்………
என்.கணேசன்
I can’t wait to get my hands on this amazing game. I can tell I’ll be getting minimal rest until I finish the game!!
Howdy! I’m at work surfing around your blog from my new iphone! Just wanted to say I love reading through your blog and look forward to all your posts! Keep up the superb work!
A very helpfull post – A big thank you I wish you will not mind me blogging about this article on my website I will also leave a linkback Thanks