இதய பாதிப்பினால் பாதிக்கப்பட்டு மரணத்தின் வாயிலை அடைந்த 15 வயது சிறுவனுக்கு அவனது இதயத்திற்கு மாற்றாக செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது. உலகத்திலேயே நிரந்தரமாக செயற்கை இதயத்தைப் பொருத்திக் கொண்டு உயிர் வாழும் முதல் சிறுவன் இவன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி நாட்டை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவனுக்கு இருதய கோளாறு ஏற்பட்டது. இந்த நோயால் அவன் மரணத்தின் வாசலுக்கு தள்ளப்பட்டான். இதனால் அவன் ரோம் நகரில் உள்ள பாம்பினோ கெசு குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அவனது இதய தசைகள் வலுவிழந்து கொண்டிருந்தன. இதனால், அவன் மாற்று இதயத்திற்கு காத்திருக்கும் வாய்ப்பை இழந்து கொண்டிருந்தான். எனவே சிறுவனின் உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவனுக்கு ரோபோட் இருதயத்தை பொருத்துவது என்று தீர்மானித்தனர். மருத்துவர் அன்டோனியோ அமோடியோ 8 பேர் கொண்ட மருத்துவர் குழுவுடன் சேர்ந்து இந்த அறுவை சிகிச்சையை நடத்தினார். சுமார் 10 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை முடிந்து சிறுவனுக்கு நினைவு திரும்பி, மருத்துவர்களது கேள்விக்கு பதிலளித்துள்ளான்.
2.5 அங்குலம் நீளம் உள்ள செயற்கை இதயம் அந்த சிறுவனின் உடலுக்குள் பொருத்தப்பட்டது. இந்த எந்திரத்துக்கு மின்சார பிளக் மூலம் மின்னாற்றல் கிடைக்கிறது. இந்த பிளக் சிறுவனின் இடது காதுக்கு கீழே பொருத்தப்பட்டு உள்ளது. இந்த பிளக் ஒரு பேட்டரியுடன் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரி சிறுவன் இடையில் கட்டி இருக்கும் பெல்ட்டில் வைக்கப்பட்டு இருக்கும். இந்த பேட்டரியை இரவு நேரத்தில் சார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.
கிருமித் தொற்றுகள் ஏதும் தாக்காமல் இருப்பதற்காக, நெஞ்சுக் கூட்டுக்குள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இந்த செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த செயற்கை இருதயத்தின் எடை 85.1 கிராம் ஆகும். பருவ வயதை எட்டிய ஒரு மனிதனின் இருதயத்தின் எடை 0.9 கிலோ ஆகும். இந்த ரோபோட் இருதயம் பொருத்தப்பட்ட சிறுவன் 20 முதல் 25 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வான் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதுவரை இந்த செயற்கை இதயத்தை பெரியவர்களுக்கு மட்டுமே பொருத்தியிருக்கிறார்கள். சிறுவன் ஒருவனுக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். தேவை அதிகமாக இருக்கும்போது இதயத்தை தானமாக அளிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மாற்று இதயத்திற்காக காத்திருக்கும் ஏராளமான குழந்தைகள் இதுபோன்ற செயற்கை இதயத்தால் பயன்பெறலாம் என்று மருத்துவமனை தெரிவிக்கிறது.
பொதுவாக இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நபர்களுக்கு மட்டுமே தற்காலிகமாக இந்த செயற்கை இதயத்தை இதுவரை பொருத்தியுள்ளோம். ஆனால், இந்த சிறுவனின் நிலைமை மிகவும் மோசமடைந்ததன் காரணமாகவே அவனுக்கு அவசரமாக இந்த இதயத்தை பொருத்தியுள்ளோம். ஆனால் இந்த இதயத்தின் மூலமே அவன் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ இயலும் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
கிருமித் தொற்றுக் காரணமாக இந்த சிறுவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும், இந்த அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்துவிடக் கூடாது என்பதற்காகவும் அவனது நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது அவன் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ்தான் உள்ளான் என்றும் மருத்துவமனை தெரிவிக்கிறது.
இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் வரும் நோயாளிகளுக்கு இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்வது குறித்து மேலும் விழிப்புணர்ச்சி ஏற்படும் என்று மருத்துவர் கூறினார்.
thanks webdunia