Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

1. அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

அன்புள்ள அம்மாவுக்கு —
நான் ஒரு பெண்.  என் குடும்பத்தில் நான், அப்பா, அம்மா, அக்கா உள்ளோம். அக்கா காதல் திருமணம் செய்தவள். என் மாமா நல்ல உள்ளம் உடையவர். என் அக்காவின் காதல் திருமணத்திற்கு, என் அப்பாவே ஒரு காரணம்.   அப்பா படித்தவர்; டிரைவர். முன்பு பெண்கள் விஷயத்தில் மோசமானவர். அவர் செய்த பாவம், எங்களை கடவுள் தண்டிக்கிறார். அன்பு, பாசம் என்றால் என்னவென்று தெரியாதவர். பெற்ற பிள்ளை, கட்டின மனைவி என்று பார்க்க மாட்டார். நடு வீதியில் எங்களை அடித்து, துன்புறுத்துவார். நான் ஒருவனை நேசிக்கிறேன். அவன் வயது 23; என் வயது 25.  அவன் மனதும், என் மனதும் ஒரு சில சமயம் ஒரே மாதிரி யோசிக்கும். நான் பசியால் வாடும்போது, அவன் வீட்டுக்கு தெரியாமல் எனக்கு உதவினான். அவன் உயர்ந்த ஜாதி; நான்  அப்படியல்ல. அவன் பணக்காரன்; நான் ஏழை. அவனுக்கு நிறைய சொந்தக்காரர்கள் உள்ளனர்; எங்களுக்கு இல்லை. அம்மா… இப்படி இருக்கும் போது, என்னை காதபலிப்தாக சொன்னான். முதலில் தயங்கிய நான், அவனைப் பற்றி எல்லாரும் புகழும் போது, அவன் நல்ல உள்ளத்தை தூக்கிபோட முடியாமல், சரி என்றேன். “உன் அப்பா, அம்மா சம்மதத்துடன், திருமணம் செய்து கொள்கிறேன்…’  என்றான்.
ஒன்பது வருடம் ஓடிவிட்டது. என்னை பெண் பார்க்க என் மாமன் மகன் வந்தான்; நல்ல வசதியானவன். என்னை, அவனுக்கு பிடித்துவிட்டது. என் அப்பா, அவனை திருமணம் செய்து கொள்ள, தினமும் வற்புறுத்தினார்.
அப்போது, என்னவன் படித்துக் கொண்டிருந்தான். அவன் என்னை உண்மையாக நேசிக்கிறானா, இல்லையா என்று தெரிந்து கொள்வதற்காக, இவன், என்னை காதலிப்பதாக அவன் தாய் மாமாவிடம் சொன்னேன். என்னவன், என்னை உண்மையாக நேசிக்கிறான் என்றால், அவன் பெற்றோரிடம் சொல்லி என்னை திருமணம் செய்து கொள்வான்; இல்லையேல், விட்டு விடுவான் என்று நினைத்து, நானே தெரியப்படுத்தினேன்.
நான் ஏன் தெரியப்படுத்தினேன் என்றால், எதிர்காலத்தில் என்னால் கஷ்டபட முடியாது அம்மா. சின்ன வயதில் இருந்து எத்தனையோ துன்பத்தை அனுபவித்துள்ளேன். அவன் குடும்பத்தை பார்த்தால், எங்கள் வீட்டு அருகில் இருப்பவர் கூட பயப்படுவர். ஜாதி வெறி, பண வெறி பிடித்தவர்கள். என் தோழிகள், பக்கத்து வீட்டுகாரர்கள், உறவினர்கள் கூட, “பையன் நல்ல பையனா என்று உனக்கு இப்போது தெரியாது. அவனை, சூனியத்தால் மாற்றி விடுவர்…’  என்கின்றனர். பிறகு, அவன் மாமா, என் அப்பாவிடம் வந்து சண்டை போட்டார். “இவள், என் அக்கா பையனை கட்டினால், இவளையும், அவனையும் கொன்று விடுவேன்; பிரித்து வைத்து விடுவேன்…’ என்று மிரட்டினார். இத்தனை பிரச்னைக்கு இடையில், அவன், “என் படிப்பை விட்டுவிட்டு வந்தால், நாம் கஷ்டப்படுவோம். நீ எங்கு இருந்தாலும் நன்றாக இரு…’ என்று ஒதுங்கிக் கொண்டான். ஆனால், அவன் அப்பா – அம்மாவிடம், “நான் அவளைத்தான் திருமணம் செய்வேன்…’ என்று சொல்லி விட்டான்.
அவன் படிப்பு முடிய ஆறு மாதம் இருக்கும்போதே, என் அத்தை குடும்பத்தார், என்னை பெண் கேட்டு வந்துவிட்டனர். அத்தை மகனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றுஎன்  அப்பா, என்னை, நடுரோட்டில், அடித்து, உதைத்தார். அதனால், மனதில் அவனை நினைத்துக் கொண்டு, சரி என்றேன். என் முகத்தில் சந்தோஷம் இல்லாததால், என் அத்தை பையனுக்கு என் மேல் ஒரே சந்தேகம். நான் உண்மையைக் கூறினேன். திருமணத்திற்கு முன்பே என்னை சந்தேகப்பட ஆரம்பித்தான். அதனால், நின்றது திருமணம். என் வேலையை தொடர்ந்தேன், நிம்மதி இல்லாமல். என்னவன் வந்தான். “என் காதல் உண்மையானது. அதனால், உன் திருமணம் நின்றது…’ என்று சந்தோஷம் அடைந்தான்.  எனக்கு இப்போது பெரிய குழப்பம் அம்மா… என்னை விட இரண்டு வயது இளையவனை திருமணம் செய்யலாமா? அதனால், நான் பாதிக்கபடுவேனா? இல்லை, இவனை விட்டு விடுவதா? நான் நன்றாக சமுதாயத்தில் வாழ வழி சொல்லுங்கள். இருவரும் படித்து நல்ல வேலையில் உள்ளோம். நான் ஒரு ஆசிரியை. அவன் பெற்றோர் என்னை ஏற்று கொள்வரா? என் அப்பா, அம்மா மனம் பாதிக்குமா? தீர்வு என்ன? நான் காதல் திருமணம் பண்ணலாமா? என் வாழ்க்கைக்கு ஒரு பதில் தாருங்கள். குழப்பத்திலிருந்து காப்பாற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் பதிலை வைத்துதான் என் வாழ்க்கையை தேர்ந்தெடுக்க போகிறேன். இவனை ஏமாற்ற மனம் இல்லை. இவன் உண்மையாக, என்னை திருமணம் செய்வானா இல்லையா என்று எப்படி நான் தெரிந்து கொள்வது. நான் எல்லார் முன்னும் ஜெயித்துக்காட்ட வழி சொல்லுங்கள். எங்களை இந்த சமூதாயம் ஏற்றுக்கொள்ளுமா? ஏற்றுக் கொள்ள என்ன பண்ண வேண்டும்? அம்மா நான் பதிவு திருமணம் செய்து கொண்டேன்.
— இப்படிக்கு, அன்பு மகள். அன்பு மகளுக்கு —
வாசித்தேன் உன் ஜூனூன் தமிழ் கடிதத்தை. கல் நிறைந்த  அரிசி போலிருந்தது. இலக்கணப் பிழைகள் நிறைந்த உன் கடிதம், வட மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்தோர் உன் பெற்றோர் என யூகிக்கிறேன். நீ ஆசிரியையாக இருப்பதாக கூறியிருக்கிறாய். டிடிஈடி படித்திருப்பாய் என நம்புகிறேன். காதல் திருமணம் செய்து கொண்ட அக்கா. பெண்கள் விஷயத்தில் மோசமான அப்பா. சொந்தபந்தங்கள் இல்லாத ஏழைப்பெண் நீ.  உயர் ஜாதி பணக்காரன் உன் காதலன்.
தற்சமயம், உனக்கு வயது 25; காதலனுக்கு 23. ஒன்பது வருடங்களுக்கு முன்பே உங்களுக்குள் காதல் துளிர்த்து விட்டது என எழுதியிருக்கிறாய். அதாவது, உனக்கு 16 வயதும், உன் காதலனுக்கு 14 வயதும் ஆகியிருந்தபோது, உங்களுக்குள் காதல் வந்து விட்டது. விடலைகள் காதலை, கன்னுக்குட்டி காதல் என்பர். ஒன்பது வருடக் காதல் சற்று ஆழ அழுத்தமானதுதான்.
உன் தந்தையோ, மாமன் மகனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். நீ அசட்டுத் துணிச்சலுடன் காதலனின் மாமாவிடம், உங்களுக்குகிடையே ஆன காதலை வெளிப்படுத்தி இருக்கிறாய். நீ தமிழ் எழுத்துக்களை எழுதும் விதத்தை வைத்து, நீ ஆண்மையானவள், பிறரை அடக்கியாளும் மனோபாவம் உடையவள் என அனுமானிக்கிறேன். விரும்பியது கை நழுவி போய்விடக்கூடாது என்ற ஆவலாதியுடன், காதலை வெளிப்படுத்தி இருக்கிறாய்.
உன்னுடைய செயல் நல்ல விளைவுகளை ஏற்படுத்தவில்லை. பதிலாக காதலன் வீட்டாரை விழிப்படைய செய்து விட்டது. காதலனின் மாமா உன் வீடு புகுந்து உனக்கும், உன் வீட்டாருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ரகசியமாய் தன் காதலின் ஆழத்தை உன் காதலன் பெற்ற தாயிடம் கூறிவிட்டு, வெளியுலகப் பார்வைக்கு உன்னிடமிருந்து விலகிக் கொண்டான். வன்முறை பிரயோகித்து, உன் தந்தை, மாமன் மகனை திருமணம் செய்து கொள்ள உன்னிடம் வலுக்காட்டாய சம்மதம் பெற்று விட்டார். உதடுகள், “எஸ்’ என்றாலும், உன் முகம், “நோ’ என ஓலமிடுவதை, உன் மாமன் மகன் மோப்பம் பிடித்து விட்டான். மாமன் மகனுடனான உன் திருமணம் நின்று விட்டது. உங்கள் மெய்யான காதல், கட்டாயக் கல்யாணத்தை நிறுத்தி விட்டது என குதூகலிக்கிறான் உன் காதலன்.
1. வயதில் இளையவனை காதல் திருமணம் செய்து கொள்ளலாமா? 2.எங்கள் திருமணத்தை எங்கள் பெற்றோர் ஏற்றுக் கொள்வரா? 3. எங்கள் திருமணத்தை சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா?  என்ற மூன்று கேள்விகளுடன் கடிதத்தை எழுதி முடித்துவிட்டு, எனக்கு போஸ்ட் பண்ணாமல் நீயே வைத்திருந்திருக்கிறாய். கடிதம் எழுதின சில மாதங்கள் கழித்து, காதலனையே பதிவு திருமணம் செய்து கொண்டிருக்கிறாய். பதிவு திருமணம் செய்து கொண்டதை ஒரு வாக்கியமாக முன்னர் எழுதிய கடிதத்துடன் பிற்சேர்க்கை செய்திருக்கிறாய்.
பிற்சேர்க்கை மனதில் கொண்டு, பின்வரும் பதிலை கூறுகிறேன் வெளிமாநிலத்துக்கிளியே!
உங்கள் ஒன்பது வருட காதல் பதிவு திருமணமாகியிருக்கிறது. உங்கள் திருமணம் சகல விதத்திலும் வெற்றி பெறும். உங்கள் வயது வித்தியாசம் பெரிய விஷயமில்லை. என்ன…  உன் காதலன் குதிரையாகவும், நீ ஜாக்கியாகவும் இருப்பீர். உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பானதாய் அமையும் விதத்தில், உங்கள் பெற்றோர் மற்றும் சமுக எதிர்பார்வைகள் வலுவிழந்து பொடியும். ஜெயிக்க வழி கேட்டிருக்கிறாய். திருமண பந்தந்திலும், பொது வாழ்க்கையிலும் ஜெயிக்க சிங்கிள் டோஸ் மேஜிக் மாத்திரை எங்கும் கிடையாது. உன் முன்னுக்கு பின் முரணான அவசர செயல்பாடுகளை விடு. உன்னவருடன் அமர்ந்து பேசி, திட்டமிட்டு செயல்படு. நீ வெற்றி பெறாவிட்டால், வேறு யார் வெற்றி பெறுவர் செல்லம்?
நீ எதிராளியிடம் கேள்வி கேட்பது அறிவுரை பதில் பெற அல்ல. உன் காதலன் உண்மையானவன். ஆனால், அவன் உண்மையானவனா என கேட்டிருக்கிறாய். நூறு கனவு ஆண்கள் வந்து உன்னை பெண் கேட்டாலும், நீ, உன் காதலனைத் தான் திருமணம் செய்து கொள்வாய். ஆனாலும், காதலனை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்டிருக்கிறாய்.

<<உனக்கு, உன் காதல்தான் முக்கியம். இருதரப்பு பெற்றோரும், சமூகமும் உனக்கு கால் தூசு. இருந்தாலும் அவர்கள் உங்கள் காதல்  திருமணத்தை ஏற்றுக் கொள்வரா எனக் கேட்டிருக்கிறாய். வீட்டுக்குள் படுக்கையறை வரை வந்துவிட்டு, வீட்டுக்குள் வரலாமா என சிலர் கேட்பர். அதுபோல், உள்ளது உன் கேள்விகள். நீ எப்போதுமே பிடித்த காரியங்களை செய்துவிட்டு, ஒப்புக்கு பிறர் அபிப்ராயங்களை கேட்பவள். நடத்து நடத்து உன் நாடகத்தை. எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், உன் சாமர்த்தியத்தை மெச்சுகிறேன் மகளே!

— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

நன்றி – தினமலர் வாரமலர் நாளிதழ்

One Comment

  • மிகச் சரியான ஆலோசனை .வாசகி உணர்வு பூர்வமான முடிவுகளை எடுத்து விட்டு விளைவுகளைச் சிந்திப்பதை எதிர் காலத்தில் தவிர்ப்பது நல்லது..
    தனது முடிவுகளை முடிவு எடுத்த பின் தனக்கே நியாயப் படுத்திக்கொள்ள முயல்வது தேவையில்லை .
    மண வாழ்க்கையில் உணர்ச்சி பூர்வமான முடிவுகளை எடுத்ததும் அதனை உடனே செயல் படுத்தாமல் சிறிது கால அவகாசம் விட்டு முடிவுகளை செயல் படுத்துவது நல்லது..

Leave a Reply