பீகார் மாநில சட்டசபைக்கு இன்று நடந்த முதல்கட்ட தேர்தலில் 54 சதவீத ஓட்டுகள் பதிவானது. முதல்கட்ட தேர்தல் நடந்த பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை.
மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் கொண்ட பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கியஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக, வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பல்வேறு நலப்பணிகள் நடத்தி இருப்பதாக ஆளும் அரசு மக்களிடம் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தனர்.
மாநிலத்தில் பல முறை ஆட்சி செய்த லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரியஜனதா தளம், மற்றும் பஸ்வான் தலைமையிலான லோக்ஜனசக்தி கட்சியினர் விலைவாசிஉயர்வை முன்வைத்து ஓட்டு கேட்டு வருகிறது. காங்கிரஸ் இந்த முறை தனித்து நின்று தனது பலத்தை நிரூபிக்க களம் இறங்கியிருக்கிறது. இந்த மாநிலத்தில் வேட்பாளர்கள் 40 சதவீதத்திற்கும் மேலானவர்கள் குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் .
6 கட்ட ஓட்டுப்பதிவு நடத்த திட்டமிட்டு இன்று முதல்கட்ட ஓட்டுப்பதிவு காலையில் துவங்கியது. எட்டு மாவட்டங்களில் 47 தொகுதிகளுக்கு நடக்கும் தேர்தலில் மொத்தம் 631 பேர் போட்டியிடுகின்றனர். இதில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய பிரமுகர்கள் பப்புயாதவ், ஆனந்த்மோகன் அடங்குவர். மூத்த அமைச்சர்கள் விஜேந்திரபிரசாத் யாதவ், நரேந்திரன் யாதவ், ரேனுகுமாரி , அருண்பிரசாத் ஆகியோரும் அடங்குவர்.
54 சதவீத ஓட்டுப்பதிவு: இன்று மாலையுடன் முடிந்த தேர்தலில், சுமார் 54 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தேர்தல் எவ்வித அசம்பாவித சம்பவமும் இன்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது அனைவரையும் நிம்மதியடையச் செய்துள்ளது. அங்கு இரண்டாம்கட்ட ஓட்டுப்பதிவு வரும் 24ம் தேதி நடக்கவுள்ளது.
வானில் பறந்தபடியும் பாதுகாப்பு: இந்தோ- நேபாள் எல்லையோர மாவட்டங்கள் மதுபானி, சாப்புல், கிசஜ்கன்ஜ், ஆகியன சீல் வைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் வானில் பறந்தபடியும் பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. காலையில் துவங்கிய ஓட்டுப்பதிவில் மிதமான அளவு இருப்பதாகவும், மக்கள் பலர் ஆர்வமாக வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர். இன்றைய முதல்கட்ட தேர்தலில் ஒரு கோடியே 7 லட்சம் பேர் இன்று ஓட்டளிக்கின்றனர். இதில் 50 சதம் பெண் வாக்காளர்கள் ஆவர்.
மாரடைப்பால் தேர்தல் அதிகாரி மரணம் : ஒரு ஓட்டுச்சாவடியில் காலை பதிவு துவங்கும் நேரத்தில் தேர்தல் அதிகாரி ஒருவர் மாரடைப்பால் உயிர்பிரிந்தது. கத்தியார் மாவட்டம் பரம்பூர் சாவடிக்கு மாற்று அதிகாரி அனுப்பி ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஒரு சில சாவடிகளில் மின்னணு இயந்திரம் பழுது ஏற்பட்டதால் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது.
Thanks Dinamalar