இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை மர்கோவாவில் நடக்க உள்ள 3 வது ஒரு நாள் போட்டி, மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. கொச்சியில் நடக்கவிருந்த முதல் போட்டி மழையால் ரத்தானது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2 வது போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து முக்கியமான 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை மர்கோவாவில் நடக்க உள்ளது.
கடும் மழை: ஆனால் இப்போட்டி திட்டமிட்ட படி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மர்கோவாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இது மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் கே.வி.சிங் கூறுகையில்,”” இந்த மாதம் மட்டும் 191.7 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. கடந்த 15 நாட்களாக மழை பெய்து வருகிறது. இது இன்னும் 2 நாட்களுக்கு தொடர வாய்ப்பு உள்ளது,” என்றார்.
வீரர்கள் பயிற்சி: மூன்றாவது ஒரு நாள் போட்டியில் பங்கேற்க இரு அணியினரும் மர்கோவா வந்தடைந்தனர். நேற்று காலை ஜவகர்லால் நேரு மைதானத்தில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அதற்குப் பின் மழை பெய்ய ஆரம்பித்ததால், பயிற்சியை தொடர முடியவில்லை.
கடும் நெருக்கடி: நீல்சன்
இந்திய சுற்றுப்பயணம் இந்த முறை கடும் நெருக்கடியாக அமைந்து விட்டது என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டிம் நீல்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து நீல்சன் கூறியது: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என தோல்வி அடைந்தது ஏமாற்றமாக அமைந்து விட்டது. ஒரு நாள் தொடரை பொறுத்த வரை, முதல் போட்டி மழையால் ரத்தானது. 2 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இனி 3 வது போட்டி ஒன்று தான் உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் தொடரை சமன் செய்வது ஒரு புறம் இருந்தாலும், இந்திய சுற்றுப்பயணத்தில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற வில்லை என்ற மோசமான நிலை ஏற்பட்டு விடும். இதனால் நாளை நடக்க உள்ள போட்டி, எங்களுக்கு மிகவும் முக்கியம். அணியில் பாண்டிங், வாட்சன், மைக்கேல் ஹசி, போலிஞ்சர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லை. இருப்பினும் அறிமுக வீரர்களான ஸ்டார்க், ஹேஸ்டிங்ஸ் ஆகியோர் நம்பிக்கை அளித்து வருகின்றனர். சுழற்பந்து வீச்சில் நாதன் ஹாரிட்ஸ் அசத்துவார் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு நீல்சன் தெரிவித்தார்.
ஸ்ரீகாந்த் நம்பிக்கை
ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியின் பலம் அதிகரித்துள்ளது என தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, விசாகப்பட்டினத்தில் நடந்த 2 வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி தேடித் தந்தனர். இந்த வெற்றி, ஒரு நாள் அரங்கில் இந்திய அணியின் பலத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. உலககோப்பை தொடருக்கு முன், இது நம்பிக்கை அளிக்கும் விஷயமாகும். உலககோப்பைக்கு தேர்வு செய்யப்படும் அணி, முழுத் திறமை வாய்ந்ததாக இருக்கும். இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
thanks 24 dunia