அன்புள்ள அம்மா —
நான் ஒரு ஆண். தற்போது என் வயது ஐம்பதுக்கும் மேல். எட்டு ஆண்டுகளுக்கு முன், என் உறவுக்கார பெண் ஒருத்தி, ஒருவனை காதலித்து வந்தாள். அவன் வேறு ஜாதியைச் சார்ந்தவன். ஏற்கனவே திருமணமானவனும் கூட. இவை அனைத்தும் தெரிந்தும், அவனையே காதலித்து, அவனுடனேயே சேர்ந்து வாழ முடிவாய் இருந்தாள் அப்பெண். வீட்டிற்குத் தெரியாமல், கிட்டத்தட்ட கணவர் – மனைவியாகவே வாழ்ந்து வந்தனர்.
இது எப்படி சாத்தியம் என்றால், அவர்கள் இருவரும் வேறு நகரத்தில் பணிபுரிந்து, வாரம் ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வரும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். ஆனால், குழந்தை பெற்றுக் கொள்ளாமல், எச்சரிக்கையாய் இருந்தனர். இதற்கிடையில் நான்கு ஆண்டுகளுக்கு முன், அப்பெண்ணிற்கு திருமணம் செய்ய, அவளது வீட்டில், துரித முயற்சி எடுத்தனர்.
ஆனால், இவர்கள் விவகாரம் வீட்டிற்குத் தெரியாது. வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதைத் தடுக்க முடியாமல், அப்பெண் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தாள். எனக்கு இவர்கள் பிரச்னை முழுவதும் ஆரம்பம் முதல் தெரியும். இவள் இறந்தால், அப்பையனும் இறந்து விடுவான் என்ற நிலை. இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற நோக்குடன், நான் அப்பெண்ணிடம் பேசி, அவளை திருமணம் செய்து கொள்வதாக கூறினேன்.
இதற்கு, அப்பெண்ணின் வீட்டி லிருந்து வந்த ஒரே எதிர்ப்பு, எங்கள் இருவருக்குமிடையே வயது வித்தியாசம் 22 என்பதுதான். அப்பெண்ணின் வற்புறுத்தல் காரணமாக எங்கள் இருவரின் விவாகம் நடைபெற்றது. நான், அப்பெண் இருவரும் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறோம். இன்றும் அவ்வப்போது அந்த பையனுடன் கலந்து, மகிழ்ந்து வருகிறாள். இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
தற்போது ஒரு குழந்தை உள்ளது. அவனை, முழு மனதுடன் ஏற்று, என் மகனாகவே வளர்த்து வருகிறேன். இதுவரை எந்தவித குழப்பமும் இல்லை. திருமணமான புதிதில், நான் என் மனைவியை கட்டாயப்படுத்தவில்லை. அவர்கள் நிம்மதி தான் அவசியம் என்று கூறிவிட்டேன். திருமணமான இரண்டாவது மாதம் முதல், என்னுடன் நெருங்கி பழக ஆரம்பித்தாள்.
தற்சமயம், அப்பெண்ணின் மனதில் என்ன தோன்றியதோ, மெதுவாக அப்பையனுடன் பழகுவதை குறைத்துக் கொண்டு வருவது தெரிகிறது. எது எப்படியானாலும் நான் விட்டுக் கொடுக்கும் சுபாவம் கொண்டவன். ஆகவே, பிரச்னைகள் ஏதும் இதுவரை இல்லை; இனியும் வர வாய்ப்பில்லை. அவர்களாகவே பழக்கத்தை குறைத்துக் கொள்வதை நான் வரவேற்பதன் நோக்கம், அவனுடைய குடும்பம் பாதிக்கக்கூடாது என்பதே!
இந்நிலையில், ஒரு உண்மையை நான் கூறியாக வேண்டும். என்னுடைய வயது காரணமாக அப்பெண்ணை முழுமையாக என்னால் திருப்திப்படுத்த முடியாது. இதை, அவள் குறையாக கருதவில்லை. இருப்பினும், அவர்கள் தொடர்பு குறையும் போது, இது பிரச்னையை உண்டாக்குமா? என் நிலையை நான் எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
இன்று வரை என் மற்றும் என் மனைவியின் வருமானத்தை கொண்டு நாங்கள் வாழ்வதோடு மட்டுமல்லாமல், கூடிய மட்டும் அந்த பையனுக்கும் உதவி செய்து வருகிறோம்.
எந்த விகல்பமும் இல்லாமல் செல்லும் இவ்வாழ்க்கை தவறு என்று தெரிந்தாலும், இரு குடும்பத்தினரையும் காப்பாற்றிய திருப்தியும், அதற்கும் மேலாக எனக்காக என்னை புரிந்து கொண்ட ஒரு பெண் என்னுடன் இருக்கும் மனநிலை நிறைவாக உள்ளது. எனினும், உள்ளது கருத்துக்களுக்காக இதை கேட்கிறேன், தயவு செய்து வழி காட்ட வேண்டுகிறேன்.
— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.
அன்புள்ள சகோதரருக்கு —
உங்களின் கடிதம் கிடைத்தது. உங்களது கடிதத்தில் நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள், என்ன பணி செய்து கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் ஏற்கனவே திருமணமானவரா, திருமணமானவர் என்றால் முதல் மனைவியின் நிலை என்ன போன்ற உபரி தகவல்கள் இல்லை.
சிலர் வியாதி வருவதற்கு முன் தடுப்பு நடவடிக்கையாய் தடுப்பூசி போட்டுக் கொள்வர். சிலர் வியாதியுடன் வந்து, வியாதியை கட்டுப்படுத்த அல்லது வியாதியை படிப்படியாய் குணமாக்க மருந்து கேட்டுப் பெறுவர்; நீங்களோ தனி ரகம். வியாதியை ரசித்து, வியாதியுடன் தொடர்ந்து வாழ டானிக்கும், வைட்டமின் மாத்திரையும் கேட்கிறீர்.
ஒரு மேற்கத்திய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறீர்கள். இவ்வாழ்க்கையில் உங்களின் சுயநல பூர்த்தியே பிரதானம். தான் ஓர் ஆண்மைக் குறைவான ஆண் என்ற தாழ்வு மனப்பான்மை உங்களுக்குள் நீண்ட நாட்களாய் இருந்து வந்திருக்கிறது. இது, மருத்துவ உண்மை இல்லை; உங்களின் மனப்பிரமை என்றே நம்புகிறேன்.
ஐம்பது வயதில் ஒரு புதிய பெண்ணை திருமணம் செய்து கொண்டால், தன் ஆண்மைக் குறையை, வருபவள் வெட்ட வெளிச்சமாக்கி விடுவாள் என பயந்திருக்கிறீர்கள். இவள் உறவுக்காரப் பெண்; 22 வயது இளையவள்; தகாத உறவை வைத்திருப்பவள். இவளை மணந்து கொண்டால், இவள் தன் ஆண்மைக் குறையை பெரிதுபடுத்த மாட்டாள். இவளது தவறுக்கும் தொடர்ந்து பார்வையாளராக இருப்போம். இவளின் குழந்தையை நம் குழந்தையாய் பாவிப்போம் என திட்டம் போட்டிருக்கிறீர்கள்.
உங்களது உறவுக்காரப் பெண், காலம் கடந்த குற்ற உணர்ச்சி பீறிட, தன் கள்ள உறவை கத்தரித்திருக்கிறார். உங்களுடன் முழுமையான தாம்பத்யம் பண்ண அவளுக்கு ஆசை. நீங்களோ அவளது தகாத உறவு நீங்கிவிட்டால், உங்களது இயலாமையை பெரிதுபடுத்தி, இருக்கிற நிம்மதியை சீர்குலைத்து விடுவாள் என பயப்படுகிறீர்கள்.
சாக்கடையில் இரு குழந்தைகள் விளையாடி கொண்டிருக்கின்றன. அவைகளை தூக்கி சுத்தபடுத்தவில்லை நீங்கள். பதிலாக, காலில் மிதித்த சாணம் சமூகத்தின் கண்களுக்கு தெரியாமலிருக்க நீங்களும் சாக்கடையில் குதித்து விளையாடியிருக்கிறீர்கள். உறவுக்காரப் பெண்ணும், அவளது கள்ள உறவு ஆணும், தற்கொலை செய்ய இருந்தனர் என்பது, அவர்கள் சொன்ன பொய் அல்லது அவர்களுக்காக நீங்கள் சொல்லும் பொய்.
அன்றே நீங்கள் உங்கள் உறவுக்கார பெண்ணுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி, அவளது தகாத உறவை கத்திரித்து இருக்கலாம். அவளது முறையான திருமணத்தை நடத்தி, அவளுக்கு நல்லதொரு வாழ்க்கையை தந்திருக் கலாம்; தவறி விட்டீர்கள். மூன்று பாக்தாத் திருடர்கள் கூட்டணிதான் உங்கள் திருமணம்.
சரி… நடக்க வேண்டியதை பார்ப்போம்.
செக்ஸாலஜிஸ்ட்டிடம் சென்று உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஆண்மைக் குறைவிருந்தால் தகுந்த மருத்துவம் மேற் கொள்ளுங்கள். மனைவியின் கள்ளக் காதலனுடன் ஆன செய்தி தொடர்பை கத்தரியுங்கள். அவனுக்கு பண உதவி செய்யாதீர்கள். பிறரின் அந்தரங்க தாம்பத்யத்தை பார்த்து ரசிக்கும், ஊக்குவிக்கும் மனோபாவத்தை கைவிடுங்கள்.
வாழ்க்கையில் மூன்றில் இருபகுதியை வாழ்ந்து பார்த்து வீட்டீர்கள். இனியாவது மிருக வாழ்க்கை வாழாதீர்கள். ஐம்பது வயதில் யாருக்குமே இளமை துள்ளி விளையாடாது என்ற யதார்த்தத்தை உணருங்கள். 80 சதவீதம் அனுசரனையான குணம் + 20 சதவீதம் தாம்பத்யம் = இதுவே வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரெசிபி. இனியாவது உங்களது வாழ்க்கை இரட்டை மாட்டுவண்டி பயணமாய் அமையட்டும். மூன்றாவது மாடு வேண்டவே வேண்டாம்; குடை சாய்ந்துவிடும்.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத
நன்றி தினமலர் வாரமலர் நாளிதழ்
Dude thank you for such a good website. I absolutely agree with it