Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘நமது கச்சத் தீவு’ – புத்தக மதிப்புரை

“கச்சத் தீவு ஒப்பந்தம் என்பது இரு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ஒப்பந்தம், தகுந்த காரணங்கள் இல்லாமல் அதனை மாற்றவும் முடியாது, திருத்தவும் முடியாது” என்று ஏதோ ஒரு மதத்தின் புனித நூலிற்கு தரப்படும் மரியாதையுடன் பேசினார் மக்களவையில் இந்திய அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா.

1983ஆம் ஆண்டு முதல் சிறிலங்க கடற்படையினரால் பல நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது நமது நாட்டின் அயலுறவு அமைச்சருக்கு ‘தகுந்த காரணமாக’த் தெரியவில்லை! தமிழக மீனவர்களுக்காக எந்தக் கரிசனமும் காட்டாத அமைச்சர் கிருஷ்ணா, அதற்குக் காரணமான கச்சத் தீவு – கடல் எல்லை வரையறை ஒப்பந்தத்தத்தை காப்பாற்றுவதில் உறுதியாக நின்றார். இது இந்தியாவின் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்வு, யாரும் மறந்திருக்க முடியாது.

இந்திய அரசாலும், காங்கிரஸ் கட்சியாலும் இவ்வளவு ‘ஆழமாக’ மதிக்கப்படும் கச்சத் தீவு ஒப்பந்தம் உருவான வரலாற்றை தெரிந்து கொண்டால், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமை பறிக்கப்படக் காரணமான கச்சத் தீவை எவ்வாறு மோசடியான வழிமுறையைக் கையாண்டு இலங்கைக்கு தாரை வார்த்தது மத்திய அரசு என்பது தெளிவாகும்.

ஆனால் இந்தத் தெளிவைப் பெற, அந்த ஒப்பந்தம் தொடர்பான உண்மைகளை வெளிகொணர முழுமையான ஒரு புத்தகம் இதுவரை இல்லாமல் இருந்தது. அந்த குறையைத் தீர்த்துள்ளது ‘நமது கச்சத் தீவு’.

மகத்தான ஆய்வுப் பணி

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கல்வெட்டுத் தொல்லியல் துறையில் பேராசிரியராகவும், பின் துறைத் தலைவராகவும் 16 ஆண்டுக்காலம் பணியாற்றி ஓய்வுப் பெற்ற அறிஞர் முனைவர் செ. இராசு இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.

‘நமது கச்சத் தீவு’ ஒரு புத்தகம் என்று கூறுவதைவிட, கச்சத் தீவுத் தொடர்பான வரலாற்று ஆவணமாகவும், அது தமிழ்நாட்டிற்கே சொந்தமானது என்பதை ஆணித்தரமாக நீரூபிக்க நீதிமன்றத்தில் முன்மொழியும் வாக்குமூலமாகவும் உள்ளது.

கச்சத் தீவு இராமநாதபுரம் சேதுபதி அரசாட்சிக்கு உட்பட்ட ஜமீன் சொத்தாகத்தான் இருந்து வந்துள்ளது என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை அறிஞர் இராசு தொகுத்தளித்துள்ளார்.

சேதுபதி சீமையின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டதாக 1605ஆம் ஆண்டு முதல் கச்சத் தீவு இருந்து வருவதற்கான வரலாற்றையும். ஆவணங்களை தொகுத்து வழங்கியுள்ளார் அறிஞர் இராசு.

“கி.பி.1605ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சீதையை மீட்க இராமன் செல்லும்போது கட்டிய பாலமே ‘சேது’ என்று சொல்லப்படுகிறது. அதைப் பாதுகாத்த மறவர் வழியினரே ‘சேதுபதிகள்’ என்றழைக்கப்பட்டனர்.

சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன.

தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது” என்று கூறியதோடு நில்லாமல், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலுக்கும் கச்சத் தீவிற்கும் உள்ள உறவையும் எடுத்துக் கூறியுள்ளார் அறிஞர் இராசு.

“சேதுபதிக்குரியது இராமேசுவரம் இராமநாத சுவாமி மலைவளர் காதலி அம்மை ஆலயம். அந்த ஆலயத்திற்குரிய நந்தவனம் கச்சத் தீவில் இருந்தது. அங்கிருந்து கோயில் பூசைக்கு மலர்கள் கொண்டு வரப்பட்டன. இராமேசுவரம் கோயிலுக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட கால்நடைகள் கச்சத் தீவில் மேய்சலுக்கு விடப்பட்டதன. இராமநாத சுவாமி கோயில் அபிடேகத்திற்கு பாலும், தேவையான பஞ்சகவ்யங்களும் வந்தன. இவைபற்றி இலங்கை தினகரன் நாளேட்டில் 01.05.1975 அன்று விரிவான கட்டுரை வந்துள்ளது” என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழ்நாடு வெள்ளையரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர் என்றும், அவர் 1803 பட்டம் ஏற்று 1812 வரை நிர்வாகம் செய்தார் என்ற வரலாற்றையும் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார்.

அதுமட்டுமல்ல, கச்சத் தீவு இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியது என்பதை விக்டோரியா மகாராணி தனது பிரகடணத்தில் கூறியிருந்தார் என்பதை, இலங்கை அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரீஸ் என்பவர் (1936-40ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் இருந்தவர்) கூறி பதிவு செய்ததையும், அது இலங்கையில் இருந்து வெளிவரும் ‘டெய்லி மிர்ரர்’ நாளிதழிலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் வெளியிடப்பட்ட ஆதாரங்களையும் இப்புத்தகத்தில் கொண்டு வந்துள்ளார்.

1880ஆம் ஆண்டு கச்சத் தீவு குத்தகைக்கு விடப்பட்ட வரலாறு மற்றும் சட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குத்தகை ஆவணத்தை முழுமையாக அளித்துள்ளார் கல்வெட்டறிஞர் இராசு.

thanks webdunia

Leave a Reply