Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழகத்தில் காங்கிரஸ் மாநாடு நடத்த‍ மாட்டோம் – காங்கிரஸ் முடிவு

விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு தர்மசங்கடம் ஏற்படும் வகையில் நடந்து கொள்வதை காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை. இதன் காரணமாக, கட்சியின் அகில இந்திய மாநாட்டை இந்த மாநிலங்களில் நடத்தாமல், வேறு மாநிலங்களில் நடத்த காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு, வரும் டிசம்பர் 20ம் தேதிக்கு முன்பாக நடத்தப்பட வேண்டும்.  ஆனாலும், இதுவரை எந்த ஊரில், எந்த நாளில் மாநாடு நடக்கும் என்பதை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கவில்லை.மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், கோல்கட்டா அல்லது சென்னை ஆகிய இடங்களில் மாநாடு நடத்தப்படலாம் என, தகவல்கள் வெளியானது.தற்போதுள்ள இக்கட்டான அரசியல் சூழ்நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் நடப்பதற்கு காங்கிரஸ் மேலிடம் தயக்கம் காட்டி வருகிறது.

 

இதுகுறித்து காங்., கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:கோல்கட்டா, சென்னை ஆகிய நகரங்களில் மாநாடு நடத்தப்பட்டால், சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனியாக களம் இறங்கப் போகிறதோ என, கூட்டணிக் கட்சிகள் கருதுவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும். இது, தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி விடும்.தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், கூட்டணிக் கட்சிகளின் விருப்பத்துக்கு மாறாக நடந்து கொள்வதை கட்சி மேலிடம் விரும்பவில்லை. எனவே, வட மாநிலங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மாநாடு நடத்தப்படலாம். குறிப்பாக, ஜெய்ப்பூர், டில்லி ஆகியவற்றில் ஏதாவது ஒரு நகரத்தில் மாநாடு நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வர் என, மம்தா பானர்ஜி தன்னை அடையாளப் படுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில், கோல்கட்டாவில் மாநாடு நடத்தினால், காங்கிரஸ் போட்டியாக வந்து விட்டதோ என, மம்தா கருதுவார். எனவே, அங்கு மாநாடு நடத்துவதை காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை.

 

தமிழகத்தை பொறுத்தவரை, தி.மு.க.,வுடன்   பிரச்னையின்றி  கூட்டணி இருக்கும்  சூழ்நிலையில், ஐ.மு., கூட்டணியில் இரண்டாவது பெரிய கூட்டணிக் கட்சியாக இருக்கும் தி.மு.க.,வை, மேலும் நெருக்கடிக்கு ஆளாக்க காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை.  எனவே, இந்த இரண்டு மாநிலங்களை தவிர, வேறு ஏதாவது ஒரு மாநிலத்தில் தான் கட்சியின் மாநாடு நடக்கும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.இவ்வாறு அந்த தலைவர் கூறினார்.

 

சட்டசபை  காங்., தலைவராக யசோதாவுக்கு வாய்ப்பு?தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவி காலியாக உள்ளது. ஏற்கனவே தலைவராக இருந்த சுதர்சனம், வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவர். அவரது மறைவுக்கு பின், வாசன் கோஷ்டிக்கே இப்பதவியை பெற வேண்டுமென முயற்சிகள் நடந்தன. இதனால், மூன்று மாதங்களுக்கு மேலாகியும், இந்த பதவிக்கு இன்னும் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. தலைவர் பதவிக்கான காலம் இன்னும் ஆறு மாதங்களே உள்ளதால், இந்த பதவிக்கு பெரிய அளவில் போட்டிகள் இல்லை. இருந்தாலும் இதை கவுரவ பிரச்னையாக கருதி, தலைவர்கள் தங்களது கோஷ்டியினருக்கு பதவியை பெற்றுத் தர முயற்சிக்கின்றனர்.இதனால், துணைத் தலைவராக உள்ள யசோதா, கொறடாவாக உள்ள பீட்டர் அல்போன்ஸ்  மற்றும் திருவாடனை ராமசாமி, ஞானசேகரன் போன்றோரில் ஒருவர் தலைவராகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ்  தலைவராக ஆதிதிராவிடர் ஒருவரை  நியமிக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார் .

 

இந்நிலையில், யசோதா  பெண் எம்.எல்.ஏ., என்பது மட்டுமன்றி, ஆதிதிராவிட பிரிவைச் சேர்ந்தவர் என்பதாலும், நீண்ட காலமாக கட்சியில் உள்ளதாலும், சட்டசபை காங்கிரஸ் தலைவராக இவரை விரைவில் அறிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, டில்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: