Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தீபாவளிக்கு சமையல் கியாஸ் கிடைக்குமா

தீபாவளி நெருங்கும் வேளையில், மாநிலம் முழுவதும் சமையல் காஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் கேட்டு  பதிவு செய்தவர்களுக்கு 30 நாள் முதல் 50 நாள் வரை தாமதமாக சிலிண்டர் சப்ளை செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஒன்றேகால் கோடி சமையல் காஸ் இணைப்புகள் உள்ளன. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் சமையல் காஸ் சிலிண்டர்களை சப்ளை செய்து வருகின்றன. இதில், மொத்த இணைப்புகளில் 70 சதவீதம், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வசம் உள்ளது. மற்றவை  இந்துஸ்தான் மற்றும் பாரத் காஸ் நிறுவனங்களால்  கையாளப்படுபவை. எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்’ என்று பெட்ரோலியத்துறை அமைச்சகமும், எண்ணெய் நிறுவனங்களும் தெரிவித்து வருகின்றன. ஆனாலும் ஒரு தடவை சப்ளை செய்த பின் 21 நாட்கள் கழித்து பதிவு செய்யும் நடைமுறையை  கொண்டுவந்து விட்டனர்.எப்போது சிலிண்டர் வேண்டி பதிவு செய்தாலும், 30 நாட்கள் முதல் 50 நாட்கள் வரை சிலிண்டர் சப்ளைக்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

 

இதனால், இரண்டு சிலிண்டர்கள் வைத்துள்ளவர்கள்கூட, சமையலுக்கு மண்ணெண்ணெய் அடுப்பை  சமயத்தில்   பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது சப்ளை தாமதம் ஆவதால்,  தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் காஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

சமையல் காஸ் டீலர்களிடம் கேட்டால், “லோடு வரவில்லை’ என்ற ஒரு வரி பதில் மட்டுமே கிடைப்பதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.  சமையல் காஸ் தட்டுப்பாட்டிற்கு பல்வேறு காரணங்களை முகவர்கள் தெரிவிக்கின்றனர்.சட்டசபை தேர்தல் நெருங்குவதால், இலவச காஸ் வழங்கும் திட்டத்தை  தமிழக  அரசு தீவிரப்படுத்தியுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் இந்த இலவச இணைப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு  தேவைப்படும் சிலிண்டர்கள்  சப்ளை இல்லை. அதனால், சப்ளை  செய்வதில்  தாமதம் ஏற்படுகிறது. இதில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின், “இண்டேன்’ வாடிக்கையாளர்கள்  அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இது குறித்து சமையல் காஸ் ஏஜன்சி முகவர் ஒருவர் கூறியதாவது:சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு அரசின் இலவச காஸ் திட்டம் ஒரு காரணம் என்றாலும், இது தற்காலிகமான பிரச்னையே. தற்போதைய விலையில், ஒரு சமையல் காஸ் சிலிண்டரை சப்ளை செய்தால் எண்ணெய் நிறுவனங்களுக்கு 250 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.இதன் காரணமாக, பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை எண்ணெய் நிறுவனங்கள் குறைந்த அளவில் வினியோகித்து, தங்களது நஷ்டத்தை குறைத்துக் கொள்ளப் பார்க்கின்றன. சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு ஒரு நுகர்வோர் எட்டு அல்லது ஒன்பது சிலிண்டரைத்தான் பயன்படுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்து, அதற்கேற்ப சிலிண்டர் சப்ளை எண்ணிக்கையை குறைத்து வருகின்றன.

 

பொதுமக்களுக்கு வழங்கும் சிலிண்டர் சப்ளையில் தட்டுப்பாடு ஏற்படுத்தும் எண்ணெய் நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு சப்ளை செய்யப்படும் விலை அதிகமான (19 கிலோ 1,050 ரூபாய்) சிலிண்டரை அதிக அளவில் விற்க வேண்டும் என எங்களைக் கட்டாயப்படுத்துகிறது. உண்மையில், காஸ் தட்டுப்பாடு என்றால், ஓட்டல்களுக்கான சிலிண்டர்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்க வேண்டுமே. அதில்  தட்டுப்பாடு வரவில்லை. புதிய  திட்டப்படி, அவசர தேவையென்றால் கூடுதல் விலைகொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என நாங்கள் சொல்வதால், வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமையல் காஸ் பிரச்னையை கவனிக்க தனி பிரிவு ஏற்படுத்தி, நடவடிக்கை மேற்கொண்டால் தான் இப்பிரச்னையை எளிதில் தீர்க்க முடியும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

 

சென்னையில் தட்டுப்பாடு ஏன்? சென்னையில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கான காரணத்தை, “இண்டேன்’ காஸ் வினியோகஸ்தர்கள் சங்கம் விளக்கியுள்ளது.சென்னை, எண்ணூர், அத்திப்பட்டு புதுநகரில் ஐ.ஓ.சி., நிறுவனத்தின் காஸ் சிலிண்டர் நிரப்பும் மையம் உள்ளது. இங்கிருந்து ஒப்பந்த லாரிகள் மூலம் சிலிண்டர்கள், டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த சிலிண்டர்களை டீலர்கள், தங்கள் ஆட்கள் மூலம் இறக்கிக் கொள்ள வேண்டும். இதில் ஈடுபட்ட பலரும்  சம்பளம் போதவில்லை என்று கூறி வேறு வேலைக்குச் சென்றனர் என்று கூறப்படுகிறது. இதனால், காஸ் சப்ளையிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.”ஒரு லாரியில் எடுத்து வரப்படும் 306 சிலிண்டர்களை ஏற்றி, இறக்க 240 ரூபாய் மட்டுமே, டிரான்ஸ்போர்ட் ஒப்பந்ததாரர்கள் மூலம் இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்குகிறது.  இதனிடையே தற்காலிகமாக சமரசம் ஆனதாகவும், பண்டிகை காலத்தில்  சப்ளை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

  • தினமலர் சிறப்பு நிருபர்

Leave a Reply