ஒபாமா அமெரிக்க அதிபர் ஆனதற்கு பிறகு முதல் முதலாக அவர் அடுத்த மாதம் இந்தியா வருகிறார். அவருடன் மனைவி மிச்சேலியும் வருகிறார்.
6-ந்தேதி இந்தியா வரும் அவர் 4 நாட்கள் இங்கு தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
ஒபாமா சுற்றுப்பயண முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து 5-ந்தேதி புறப்படும் ஒபாமா 6-ந்தேதி மும்பை வந்து சேருகிறார்.புகழ்பெற்ற தாஜ் ஓட்டலில் அன்று தங்குகிறார்.மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தாஜ் ஓட்டலும் இலக்கானது.மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்கு அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் ஓபாமா அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் அங்கு நடக்கும் இந்திய- அமெரிக்க வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார்.
7-ந்தேதி காலை மும்பையில் உள்ள ஒரு பள்ளிக்கு செல்லும் அவர் பள்ளி குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடுகிறார். மும்பையில் உள்ள காந்தி மியூசியத்தையும் சுற்றி பார்க்கிறார். பின்னர் டவுன் ஹாலில் நடக்கும் நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
7-ந்தேதி மாலை ஒபாமா மும்பையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். அங்கு முதல் நிகழ்ச்சியாக முகாலய மன்னர் ஹிமாயூன் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார். இரவு பிரதமர் மன்மோகன்சிங் ஓபாமாவுக்கு விருந்து அளிக்கிறார்.
8-ந்தேதி காலையில் பாராளுமன்ற கூட்டுக் கூட்டம் நடக்கிறது. இதில் ஒபாமா கலந்து கொண்டு பேசுகிறார். அடுத்து ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். அப்போது பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. பொருளாதார ஒத்துழைப்பு, தீவிரவாதிகள் ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவா திக்கப்பட இருக்கிறது
பிரதமர் சந்திப்பு முடிந்ததும் மன்மோகன்சிங்கும், ஓபாமாவும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளிக் கின்றனர். அன்று இரவு ஜனாதிபதி மாளிகையில் ஓபாமாவுக்கு அரசு சார்பில் விருந்து அளிக்கப்படுகிறது.
9-ந்தேதி காலை அவர் இந்திய சுற்றுப்பயணம் முடிந்து இந்தோனேசியாவுக்கு புறப்பட்டு செல்கிறார். அவருடன் வெளியுறவு செயலாளர் கிலாரியும் வருவதாக இருந்தது. ஆனால் அவர் இந்தியா வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது
அவர் பங்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவிலை சுற்றி பார்ப்பதாக இருந்தது. பொற்கோவிலை பார்க்க வேண்டுமானால் சீக்கிய மத முறைப்படி தலையில் துணி அணிய வேண்டும். இதை ஒபாமா ஏற்பாரா? இல்லையா? என்ற சர்ச்சை எழுந்தது. ஆனால் ஒபாமா அமிர்தசரஸ் செல்லவில்லை
ஒபாமா வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தி விடாமல் தடுக்க எல்லையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன
டெல்லி, மும்பை, ஆக்ரா நகரங்களில் இப்போதே போலீசார் விழிப்புடன் கண்காணிப்புகளை மேற்கொண்டு உள்ளனர். சந்தேகத்திற்கு இடமான பகுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வாகன சோதனைகளும் நடக்கின்றன
ஓபாமா வருகையயொட்டி அமெரிக்கா உளவுப்படையைச் சேர்ந்த 20 அதிகாரிகள் இந்தியா வந்துள்ளனர். ஓபாமா பயணம் செய்யும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். ஓபாமா பயணம் செய்யும் இடத்தில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வெடிகுண்டு ரிமோட், செல்போன் போன்றவற்றை செயலிழக்கும் கருவியையும் கொண்டு வந்துள்ளனர்.
ஓபாமாவோடு எந்த நேரமும் உடன் இருக்க 24 மெய்காவலர்களும் அமெரிக்காவில் இருந்து வருகின்றனர். அவசர நிலை ஏற்பட்டால் உதவுவதற்காக அமெரிக்க விமானத் தாங்கி போர் கப்பலும் இந்திய பெருங்கடலில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.