Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒழுக்க‍த்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத்துறை- கவிஞர் வாலி சாடல்

ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத துறை சினிமா என்று சினிமாத்துறை குறித்து கவிஞர் வாலி தனது கருத்தை தெரிவித்துள்ளார். கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த ஏ.எல்.எஸ்.வீரய்யா “சினிமாவும் நானும்” என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கவிஞர் வாலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

சினிமா துறையைப் பற்றியும், சினிமா துறையில் இருப்பவர்கள் பற்றியும் அவர் புட்டு புட்டு வைத்தார். வாலி பேசியதாவது:-

வியர்வை சிந்தி உழைப்பவன்தான் சினிமாவில் வளர முடியும். காக்காய் பிடிப்பவன் வளர முடியாது. அதே நேரம், நான் பார்த்த, என் அனுபவத்தில் சொல்கிறேன், ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத துறை சினிமா. இதில் ஒழுக்கமாக இருப்பவர்கள் எஸ்.பி.முத்துராமன் போன்ற வெகுசிலர்தான். இன்னொன்று, சினிமாவில் வெற்றியை மண்டைக்குள் கொண்டு போகக் கூடாது. தோல்வியை மனசுக்குள் கொண்டு போகக் கூடாது. எவ்வளவு வளர்ச்சி வந்தாலும் மனிதன் மனிதனாகத்தான் இருக்க வேண்டும்.

திரையுலகைப் பொறுத்தவரை மழை விழுந்தாலும், மாடு சிறுநீர் கழித்தாலும் எந்த மாற்றமும் அடையாத பாறைபோல, கிட்டத்தட்ட சுரணை இல்லாமல் இருக்கவும் பழகிக் கொள்ள வேண்டும். இல்லேன்னா இருக்க முடியாது. சினிமாவுக்கு வருவதற்கு நாடக அனுபவம் ரொம்ப முக்கியம். சினிமாவே செல்லுலாய்டு வடிவிலிருக்கும் நாடகம்தான். ரயில்வே வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தவர் நாகேஷ். உன் முகத்தை கண்ணாடியில் பார்த்திருக்கியா, எந்த தைரியத்தில் சினிமாவுக்கு வந்தே? என்று அவரிடம் நானே கேட்டிருக்கிறேன். ஆனால் பிற்காலத்தில் அவர் வருகைக்காக எம்.ஜி.ஆர், சிவாஜியெல்லாம் 4 மணி நேரம் வரை காத்திருந்ததும் நடந்தது.

கண்ணதாசன் 4 ஆயிரம் பாடல்தான் எழுதி இருக்கிறார். நீங்கள் (வாலி) 15 ஆயிரம் பாடல் எழுதி இருக்கிறீர்களே? என்று என்னிடம் சிலர் கேட்பதுண்டு. கண்ணதாசன் 54 வயது வரைக்கும்தான் வாழ்ந்தார். எனக்கோ இப்போது 80. அவரும் இன்றுவரை உயிரோடு இருந்திருந்தால் 20 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் எழுதி இருப்பார். அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகம் வாழ்க்கை நெறிகளை விளக்கும் அருமையான, உண்மையான புத்தகம். எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் அந்த புத்தகத்தை கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் பாட நூலாக்கி இருப்பேன்.

இவ்வாறு வாலி பேசினார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: