Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது’ : அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடகா முடிவு

“தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது’ என, கர்நாடக அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சிக் கூட்டத்தில் நடந்த காரசார விவாதத்துக்குப் பின், இம்முடிவு எடுக்கப் பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

“தமிழக விவசாயத்திற்கு, மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்’ என, தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, முதல்வர் எடியூரப்பா, சட்டசபை மற்றும் மேலவை அனைத்து கட்சிக் கூட்டத்தை அவரது அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் நேற்று மாலை கூட்டியிருந்தார். கர்நாடக அரசியலில், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ம.ஜ.த., கட்சிகள், ஒரு மாதமாக, எடியூரப்பாவின் பா.ஜ., ஆட்சியை ஒழித்து கட்ட வேண்டும் என, கடும் முயற்சி மேற்கொண்டன. மூன்று கட்சித் தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் அறிக்கை விடுவதும், போராட்டங்கள் நடத்தியும் வந்தனர். இந்நிலையில், நேற்றைய கூட்டத்தில் மூன்று கட்சியினரும் கலந்து கொள்வார்களா என சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகத்தை தவிடு பொடியாக்கி, மூன்று கட்சித் தலைவர்களும் ஆஜராகினர்.

 

காங்கிரஸ் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, ம.ஜ.த., எதிர்க்கட்சித் தலைவர் ரேவண்ணா, காங்கிரஸ் மேலவை எதிர்க்கட்சித் தலைவர் மேட்டம்மா, ம.ஜ.த., எதிர்க்கட்சித் தலைவர் நானய்யா, நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் மொம்மை, அமைச்சர்கள் அசோக், சுரேஷ் குமார், ஆச்சார்யா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து விவாதம் நடந்தது. தண்ணீர் திறக்க எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் ஒருமனதாக, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என தீர்மானிக்கப்பட்டது.

 

ஒரு மணிநேரம் நடந்த ஆலோசனைக்குப் பின், நிருபர்களிடம் அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியதாவது: கர்நாடக விவசாயிகளின் நலன் கருதி, தற்சமயம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு சாத்தியம் இல்லை என, ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வயநாடு, குடகு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.,) அணைகள் நிரம்பி வருகின்றன. கே.ஆர்.எஸ்., அணைக்கு தற்போது, 17 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கே.ஆர்.எஸ்., அணையின் உயரம், 124.8 அடி. தற்போது 124.7 அடி தண்ணீர் உள்ளது. நீர் வரத்து மேலும் அதிகரித்தால், அணையின் பாதுகாப்பு கருதி, தண்ணீர் திறந்து விடப்படும். தமிழகத்திலிருந்து மேலும் தண்ணீர் வேண்டும் என கோரிக்கை வருமேயானால், மீண்டும் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி, முடிவெடுக்கப்படும். தமிழக அரசு எவ்வளவு தண்ணீர் வேண்டுமென்று கேட்கவில்லை. தண்ணீர் வேண்டுமென்று கேட்டுள்ளது. தண்ணீரின் அளவு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருப்பதால், விரிவாக விவரிக்க இயலாது. இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

 

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறுகையில், “முதலில் கர்நாடக விவசாயத்திற்கு தண்ணீர் தேவைப்படுகிறது. அதன் பிறகே, மற்ற மாநிலங்களுக்கு தண்ணீர் தர முடியும். ஆனாலும், கே.ஆர்.எஸ்., அணை நிறைந்து விட்டது. தண்ணீரை சேர்த்து வைக்க இயலாது’ என்றார்.

 

தமிழகத்துக்கு எதிராக மட்டும் ஒற்றுமை! கர்நாடகாவில் ஒரு மாதமாக ஏற்பட்ட அரசியல் பரபரப்பு, 16 எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது, மெஜாரிடியை நிரூபிக்க கூறிய கவர்னர் பரத்வாஜ், இரண்டு முறை மெஜாரிடியை நிரூபித்த முதல்வர் எடியூரப்பா, 16 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம், 11ம் தேதி சட்டசபையில் பயங்கர கலவரம், பா.ஜ.,வுக்கு எதிராக காங்கிரஸ், ம.ஜ.த., மறைமுகமாக ஒன்று சேர்ந்தது, தினம் தினம் ஒவ்வொரு கட்சியின் அறிக்கை, போராட்டம், எம்.எல்.ஏ.,க்களிடம் கோடிக்கணக்கில் பேரம் என, ஒரு மாதமாக எதிரும் – புதிருமாக இருந்த மூன்று கட்சியினரும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாக கோரஸ் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

thanks dinamalar

Leave a Reply