தற்போது பெய்துவரும் கன மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதியாக வழங்க முதல்வர் கருணாநிதி உத்தர விட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தற்போது பெய்துவரும் வட கிழக்குப் பருவமழையினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து, முதல்வர் கருணாநிதி இன்று புனித ஜார்ஜ் கோட்டையில் ஆய்வு செய்தார். பெருமழை காரணமாக நெல்லை மாவட்டம் பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைகள் தவிர, தமிழகத்தில் உள்ள எல்லா அணைகளும், குளங்களும், ஏரிகளும் பெருமளவுக்கு நிரம்பியுள்ளன. இதுவரை மதுரை, தர்மபுரி, கடலூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக வந்துள்ள தகவலையடுத்து; நீர் வடிந்ததற்குப் பிறகு பயிர்ச்சேதம் குறித்து மதிப்பீடு செய்து, உரிய நிவாரணம் வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 548 குடிசைகள் முழுமையாகவும், 1438 குடிசைகள் பகுதியாகவும், ஆக மொத்தம் 1,986 குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள குடிசைகளைப் பொறுத்த வரை, மாவட்ட ஆட்சியர்கள் ஏற்கனவே நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். மழையின் காரணமாக உயிரிழந்த 179 கால்நடைகளுக்கும் உரிய நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியர்கள் வழங்கி வருகிறார்கள். 40 ஆண்கள், 27 பெண்கள், 21 குழந்தைகள் என மொத்தம் 88 பேர் மழையின் காரணமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000/-மும், முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ ஒரு லட்சமும் என ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 2,00,000/- நிவாரண நிதியாக வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
thanks dinamani
Such a good website. Well done