Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

அன்புள்ள அம்மா
நான் தென் தமிழகத்தைச் சேர்ந்த 32 வயது ஆண். எனக்கு திருமணமாகி, ஒரு ஆண் குழந்தை உள்ளது. சென்னையில் இருவரும் சாப்ட்வேர் பணியில் இருக்கிறோம். என் தாய், தந்தை, என் அம்மா வழி பாட்டி மூவரும், ஒன்றாக சொந்த ஊரில் உள்ளனர். அப்பா ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்; அம்மா ஆசிரியை பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். நான் ஒரே மகன். சந்தோஷமான என் குடும்பத்தில், தற்போது பிரச்னையே என் தாய் வடிவில் வந்துள்ளது.

அம்மா… சொல்லவே, நினைக்கவே மனம் கூசுகிறது. என் தாய்க்கு 60 வயது. இப்போது, அவருடைய நடத்தையில் சந்தேகமாக இருக்கிறது என்று என் தந்தையும், பாட்டியும் சொல்கின்றனர். என் தாய் அழகான  உருவ அமைப்பு கொண்டவர். பள்ளியிலிருந்து ஓய்வு பெற்ற பின், மூவரையும் என்னுடன் வந்து, சென்னையிலேயே தங்குமாறு சொன்னேன்; என் தாய் கேட்கவில்லை. பணிபுரிந்த பள்ளிக்கு தினமும் சென்று, அங்குள்ள ஆசிரியர்களிடம், “பள்ளி நிர்வாகி நான் சொல்வதெல்லாம் கேட்பார்; அவர் என் கைக்குள். அதனால், நீங்கள் அனைவரும் என் சொல்படிதான் கேட்க வேண்டும்…’ என, மிரட்டுகிறார். மேலும், ஆசிரியர்களுக்குள் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி, பிரிவினையை உருவாக்கி, அவர்களின் நிம்மதியை கெடுத்து, எங்கள் குடும்பத்தின் நிம்மதியையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்.
வீட்டில் இருப்பதே இல்லையாம். என் தந்தையும், பாட்டியும் சொல்லி அழுகின்றனர். இப்போதும், என் பாட்டி தான் வீட்டில் அனைத்து வேலைகளும் செய்கிறார். ஊரில் எல்லாரும் சொல்கின்றனர் அவருடைய நடத்தையில் தவறு உள்ளது என்று.
நானும், என் பாட்டியும், பள்ளி நிர்வாகியிடம் சென்று பேசியதற்கு, “உன் தாய் தான், எனக்கு சம்பளம் எதுவும் வேண்டாம்; ஆனால், கண்காணிப்பாளர் போன்று தினமும் பள்ளிக்கு வருகிறேன் என்று கேட்டார். நானும் சரியென்று சொன்னேன்…’ என்கிறார்.  நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், கேட்கவில்லை. என்னுடைய கேள்வியே ஓய்வு பெற்ற பின், பள்ளிக்கு ஏன் செல்கிறார்.  இந்த வயதில் ஏன் கூடா நட்பு. இதைச் சொல்லி, என் தந்தையும் தற்கொலைக்கு முயன்று, அவரை காப்பாற்றி இருக்கிறோம். என் தாயிடம் பேசுவதற்கு, என் உறவினர்கள் யாரும் தயாராக இல்லை. தயவு செய்து, நீங்கள் தான் ஒரு யோசனை சொல்ல வேண்டும். நான், என் மகன், மனைவி, அம்மா, அப்பா, பாட்டி அனைவரும் குடும்பமாக, சந்தோஷமாக வாழ வழி சொல்லுங்கள். தங்கள் அறிவுரையை, யோசனையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இப்படிக்கு அன்பு மகள்.

அன்புள்ள மகனுக்கு—
உன் கடிதம் கிடைத்தது. உன் அறுபது வயது தாயார் நடத்தை பற்றி எழுதியிருக்கிறாய். இந்த குற்றச்சாட்டில் எவ்வளவு உண்மையுள்ளது என்பதை முதலில் பார்ப்போம். உன் தாய் ஒரு பேரழகி; ராணுவ வீரனை கணவனாக பெற்றவர். உன் தந்தை குறைந்த பட்சம்,  20 – 25 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்திருக்கிறார். அந்த பிரிவு காலத்தை, உன் தாயார் தவறாக பயன்படுத்தியிருக்க வாய்ப்பிருக்கிறது. உன் அம்மா வழி பாட்டிக்கு, இப்போது 88 வயது இருக்கக்கூடும். கடந்த முப்பது வருடங்களாக மகளின் வீட்டு வேலைகள் செய்து கொடுத்து, உன் அம்மாவை வாழைப்பழ சோம்பேறி ஆக்கியிருக்கிறார். உன் தாய் தனியார் பள்ளியில் நீண்ட காலம் ஆசிரியையாக பணிபுரிந்திருக்கிறார். நிர்வாகிக்கும், அவருக்கும் திருமண பந்தம் மீறிய உறவு இருந்திருக்கிறது. சர்வீசில் இருந்த போது, உன் அம்மா பள்ளியின் இரண்டாவது தலைமையாக செயல்பட்டிருக்கிறார். அவர் இட்டதுதான் சட்டம். சக ஆசிரியர் – ஆசிரியைகளை தன் இஷ்டத்துக்கு ஆட்டுவித்து இருக்கிறார். பணியிலிருந்துதானே உன் அம்மா ஓய்வு பெற்றார்; நிர்வாகியிடமிருந்து இல்லையே… இப்போது, உன் அம்மா பள்ளிக்கு சென்று, அதிகார சாட்டை சொடுக்கி, தன், “குயின் சைஸ் ஈகோ’வுக்கு இரைபோட்டுக் கொண்டு இருக்கிறார். நிர்வாகியின் சொத்துக்கு மானசீகமாய் உரிமை கொண்டாடுகிறார் உன் அம்மா. தன் நடத்தை மூலம் தனக்கும், நிர்வாகிக்கும் இடையே உள்ள தவறான உறவை வெளியுலகத்திற்கு பிரகடனப்படுத்துகிறார். இதனால், நிர்வாகியையும், பள்ளி நிர்வாகத்தையும் ஒரு சேர கையகப்படுத்தி யுள்ளார்.
உன்னிடமும், உன் பாட்டியிடமும் பள்ளி நிர்வாகி சொன்னது சமாதானம். ஒரு காலத்தில், அவர் உன் தாயாருடன் தொடர்பு வைத்திருக்கிறார். இப்போது, அவருக்கு இந்த உறவு தொடர்வதில் விருப்பமில்லை. ஆனால், உன் தாயாரின் வன்முறை செயல்பாடால் மவுனித்து நிற்கிறார். திருடனுக்கு தேன் கொட்டியது போல. உன் தாயாருக்கும், உன் தாயார் வழி பாட்டிக்கும் நீண்ட நாட்களாகவே பனிப்போர் இருந்து வந்திருக்கிறது. “இரு… உன்னை, உன் கணவனிடமும், மகனிடமும் காட்டிக் கொடுக்கிறேன்…’ என, கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார் பாட்டி.
உன் தந்தை படிப்பு வராமல், வீட்டுக்கு அடங்காமல் ராணுவத்திற்கு போனாரா அல்லது தேசபக்தி கொண்டு போனாரோ நான் அறியேன். “நீ, ராணுவத்திற்கு பணிபுரிய போனதால்தான், உன் மனைவி நடத்தை தவறி விட்டாள்…’ என, யாரும் அவர் மீது குற்றம் சாட்ட முடியாது. உலகின் எல்லா உன்னத சேவைகளும், பக்கவிளைவுகள் ஏற்படுத்தும். இப்போது, உன் தந்தை, உன் தாயை கண்டித்தால், “நீ ஏன் ராணுவத்திற்கு பணிபுரிய போய், என்னை நீண்டகாலம் பிரிந்திருந்தாய்?  நானும் மனுஷி தானே… எனக்கும் ஆசாபாசங்கள் உண்டுதானே? ராணுவத்திற்கு போறவன், பிரம்மச்சாரியாக இருப்பது படு நல்லது…’ என, உன் தாய் கூறினாலும் கூறியிருப்பார். உன் தந்தையின் தற்கொலை முயற்சி இயலாமையின், ஆற்றாமையின் பிரதிபலிப்பு.
அறுபது வயது பெண்களிடம் கலவியல் கவர்ச்சி மிஞ்சி, எஞ்சி நிற்கும் என்பது ஒரு அறிவியல் பூர்வ உண்மை. மிக நெருங்கினால் ஏமாற்றமே மிஞ்சும். நிர்வாகிக்கும், உன் தாய்க்கும் தற்சமயம் உடல்ரீதியாக தொடர்பு இல்லை. இருவருக்கும் அனுபவ பாத்தியதை கொண்டாடும் உரிமை யுத்தம். அனுபவ பாத்தியதை கிடையாது என்கிறார் நிர்வாகி; உண்டு என்கிறார் உன் அம்மா. இனி என்ன செய்யலாம் என பார்ப்போமா மகனே?
நிர்வாகியின் குடும்பத்தினரிடம் பேசி, உன் தாய் பள்ளிக்கு வந்து அதிகாரம் செய்வதை தடுக்க, முறையான காவல்துறை நடவடிக்கை எடுக்கச் சொல்லலாம். அதற்கு முன், “ஓய்வு பெற்ற பின் பள்ளிக்குள் வந்து அதிகாரம் செய்வது தவறு. பள்ளிக்குள் இனி அனுமதியின்றி நுழைந்தால், சட்டப்படி தண்டிக்கப்படுவீர்…’ என, நிர்வாகி கையெழுத்திட்ட எச்சரிக்கை கடிதத்தை பதிவு தபால் மூலம் உன் தாய்க்கு அனுப்ப சொல்லலாம்.
“என் தாயை தொடர்ந்து பள்ளிக்குள் அனுமதித்தால், பள்ளியை, என் தாயார் கபளீகரம் செய்து விடுவார்…’ என, நிர்வாகி குடும்பத்தாரை உசுப்பேற்றி விடுங்கள். அவர்கள் பலவித யுக்திகளை கையாண்டு, உன் தாயாரை அடித்து விரட்டுவர். பள்ளிக்கும், உன் தாயாருக்கும் இருக்கும் உறவை, நிரந்தரமாக கத்திரித்து விட்டால், உன் தாயார் இயல்பு நிலை மீண்டு விடுவார்.
நிர்வாகி தவிர, வேறு யாருடனும் உன் தாயாருக்கும் உறவு இருந்ததில்லை. இந்த உறவு கூட 80 சதவீதம் பதவி அதிகாரத்துக் காக; 20 சதவீதம் உடல் தேவைக்காக.
“நாட்டை காக்கும் பதவிகளில் உள்ளோரின் மனைவிமார்கள் சில, பல சுக துக்கங்களை நாட்டுக்காக விட்டுக் கொடுக்க வேண்டும். நீ உன் தவறுகளுக்கு அப்பாவின் பணியை குற்றம் சாட்டாதே…
88 வயதிலும் உன் வீட்டு வேலைகளை செய்யும் அம்மாகாரி எவருக்கு கிடைப்பார்? அவள் அறிவுரைகளை உதாசீனப்படுத்தாதே… ஆசிரியை பதவியை விட, அம்மா பதவி, பாட்டி பதவி மேலானது. மேலானதற்கு, நிலையானதற்கு ஆசைப்படு அம்மா. இனி, நாம் நடந்ததை பேசி, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல், ஒற்றுமை குடும்பமாக வாழ்வோமாக…’ என, ஒரு கடிதம் எழுதி, அம்மாவிடம் ரகசியமாக கொடு. தாய், தந்தை, பாட்டியை சென்னைக்கு அழைத்து வந்து விடு. நீ விரும்பும் சந்தோஷம் கிடைத்து விடும். வழி தவறிய ஆட்டுக்குட்டிகள், காலம் கடந்தாவது தேவமேய்ப்பனிடம் திரும்பட்டும்… ஆமென்.

— என்றென்றும் தாய்மையுடன்,  சகுந்தலா கோபிநாத்.

தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி

0 Comments

 • Anonymous

  Thank you for your interesting post – I will mention your article on my own website. I will also leave a link back 😉 – cu

 • krishna

  Sir எனக்கு இப்போது வயது 24 கடந்த 5 வருடமாக கைபழக்கம் இருந்தது.ஆனால் கடந்த 5 மாதமாக கைபழக்கத்தை நிறுத்தி விட்டேன்.ஆனால் இப்போது 1வாரத்திற்கு ஒருமுறை தூக்கத்தில் விந்தனு (Sperm) அதிகமாக வெளிபடுகிறது ஏன் என்று எனக்கு தெரியவில்லை எனக்கு பயமாக இருக்கிறது please answer me doctor.

  Sir எனக்கு இப்போது வயது 24 கடந்த 5 வருடமாக கைபழக்கம் இருக்கிறது ஆனால் கடந்த 5 மாதமாக கைபழக்கத்தை நிறுத்தி விட்டேன்.ஆனால் இப்போது 1வாரத்திற்கு ஒருமுறை தூக்கத்தில் விந்தனு (Sperm) அதிகமாக வெளிபடுகிறது ஏன் என்று எனக்கு தெரியவில்லை எனக்கு பயமாக இருக்கிறது please answer me doctor.ஆனால் நான் தினமும் வெந்தயம் சாப்பிடுகிறென் அதனல் தான என்று தெரியவில்லை.

 • krishna

  Sir எனக்கு இப்போது வயது 24 கடந்த 5 வருடமாக கைபழக்கம் இருக்கிறது ஆனால் கடந்த 5 மாதமாக கைபழக்கத்தை நிறுத்தி விட்டேன்.ஆனால் இப்போது 1வாரத்திற்கு ஒருமுறை தூக்கத்தில் விந்தனு (Sperm) அதிகமாக வெளிபடுகிறது ஏன் என்று எனக்கு தெரியவில்லை எனக்கு பயமாக இருக்கிறது please answer me doctor.ஆனால் நான் தினமும் வெந்தயம் சாப்பிடுகிறென் அதனல் தான என்று தெரியவில்லை.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: