Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை: கொரியாவுக்குள் நுழைந்தால் நடப்பதே வேறு

தென்கொரியா, தனது மக்களை போர்க் கேடயமாக பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ள வடகொரியா, “அமெரிக்காவின் “ஜார்ஜ் வாஷிங்டன்,’ கொரியாவின் மஞ்சள் கடல் எல்லைக்குள் வந்தால் அதன்பின் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது’ என்று, புதிய மிரட்டல் விடுத்துள்ளது. வடகொரியா அடுத்தடுத்து விடுத்துவரும் எச்சரிக்கைகளால் தென்கொரிய மக்களிடையே மேலும் மேலும் கோபம் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில், தென்கொரியாவுக்கு சொந்தமான இயான்பியாங் தீவு மீது வடகொரியா நடத்திய தாக்குதலில் தென்கொரிய கடற்படைவீரர்கள் இருவர், 60 வயதுள்ள இரண்டு பேர் என நான்கு பேர் பலியாயினர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று தென்கொரியத் தலைநகர் சியோல் அருகில் உள்ள சியோன்க்னம் நகரின் ராணுவ மருத்துவமனையில், பலியான இரு கடற்படை வீரர்களுக்கான இறுதியஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்கொரிய பிரதமர் கிம் ஹ்வாங் சிக் உட்பட அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய புதிய ராணுவ அமைச்சர்  கிம் க்வான் ஜின் கூறுகையில், “வடகொரியாவின் இச்செயலுக்கு நாம் இரண்டு மடங்கு பதிலடி கொடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். அதேநேரம், சியோலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் கடற்படை வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வடகொரியாவின் கொடி மற்றும் அதிபர் படங்களை எரித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

வடகொரியா புதிய மிரட்டல்: இந்நிலையில், வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது: கொரியாவின் மேற்குக் கடற்பகுதியில் அமெரிக்கா தன் போர்க்கப்பலை கொண்டு வருமானால், அதன் விளைவுகள் என்ன என்று யாராலும் கணிக்க முடியாது. வடகொரியாவின் தாக்குதலில் இறந்து போன பொதுமக்களை வைத்து தென்கொரியா தீவிரப் பிரசாரம் செய்கிறது. தாக்குதலுக்கு முன், அதிகாலையில் தென்கொரியாவுக்கு போன் மூலம் வடகொரியா நோட்டீஸ் விட்டது. கடைசி நேர மோதலைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் விடுக்கப்பட்ட அந்த நோட்டீசை தென்கொரியா புறக்கணித்து விட்டு, மேலும் மேலும் வடகொரியாவைத் தூண்டிவிடும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அதில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சீனா முயற்சி: இவ்விவகாரத்தில் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தும் படி சீனாவுக்கு பலதரப்பில் இருந்தும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜெய்ச்சி, வடகொரியா தூதரை நேரில் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, அமெரிக்க மற்றும் தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களுடன் போனில் உரையாடினார். இவ்விவகாரத்தில், வடகொரியாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அமெரிக்கா, இந்த கூட்டு ராணுவப் பயிற்சி வடகொரியத் தாக்குதலுக்கு முன்பே  திட்டமிட்டதுதான் என்று கூறியுள்ளது.அமெரிக்காவுடன் தென்கொரியா கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ள  சில மணி நேரங்களே இருந்த நிலையில் வடகொரியா விடுத்துள்ள இச்செய்தியும், சியோலில் நடந்த கடற்படை வீரர்களின் இறுதியஞ்சலி நிகழ்ச்சியும் தென்கொரியாவில் மேலும் பதட்டத்தை அதிகப்படுத்தியுள்ளது. (தினமலர் நாளிதழில் வெளியான செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: