Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜெகன்மோகன் ரெட்டி தனிக்கட்சி தொடக்கம் – ஆந்திர அரசியலில் பரபரப்பு

ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், காங்., மேலிடத்துக்கும் இடையே நடந்து வந்த மோதல், நேற்று உச்ச கட்டத்தை எட்டியது. ஜெகன் மோகன், தனது எம்.பி., பதவியை உதறியதோடு, காங்கிரசுக்கும் முழுக்கு போட்டார். “ஒய்.எஸ். ஆர்., காங்கிரஸ்’ என்ற புதிய கட்சியை துவங்கப் போவதாக அவரது ஆதரவாளர்கள் அறிவித்து உள்ளதால், பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி, கடந்தாண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து, ராஜசேகர ரெட்டியின் மகனும், கடப்பா தொகுதி காங்கிரஸ் எம்.பி.,யுமான ஜெகன்மோகன் ரெட்டி, தன்னை முதல்வராக்கும் படி, காங்கிரஸ் மேலிடத்திடம் வற்புறுத்தினார். ஆனால், நிதி அமைச்சராக இருந்த ரோசய்யா, முதல்வராக நியமிக்கப்பட்டார். அதிருப்தி அடைந்த ஜெகன், தனது தந்தை மரணமடைந்தபோது, தீக்குளித்து இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக ஆறுதல் யாத்திரை துவக்கினார். இதற்கு காங்கிரஸ் மேலிடம் எதிர்ப்பு தெரிவித்தது. அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து யாத்திரை நடத்தினார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், ஜெகனுக்கு சொந்தமான சாக்ஷி “டிவி’யில் காங்., தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் ஆகியோரைப் பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதை காங்., தலைவர்கள் கண்டித்தனர்.

இதற்கிடையே, ஜெகனை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வந்த ரோசய்யாவை முதல்வர் பதவியில் இருந்து, காங்., மேலிடம் தூக்கியது. சோனியாவுக்கு விசுவாசமானவரான கிரண்குமார் ரெட்டி, முதல்வராக நியமிக்கப்பட்டார். அது மட்டும் அல்ல, ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர் முதல்வரானதால், அது ஜெகனை ஓரங்கட்டும் முயற்சி என்ற பேச்சு எழுந்தது. தன்னை அவமானப் படுத்துவதற்காகவே, கிரண் குமாரை கட்சி மேலிடம் முதல்வராக்கியுள்ளது என, ஜெகன் கருதினார். ராஜசேகர ரெட்டியின் சகோதரர் விவேகானந்தா ரெட்டியை அவசரமாக டில்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, விவேகானந்தா ரெட்டிக்கு, ஆந்திர மாநில அமைச்சர் பதவி தருவதாக கட்சித் தலைமை உறுதி அளித்ததாகவும் தகவல் வெளியானது.

அவமதிப்பு: கட்சி மேலிடத்தின் இந்த நடவடிக்கையால் ஆவேசமடைந்த ஜெகன், காங்., கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று அதிரடியாக அறிவித்தார். இதுகுறித்து காங்., தலைவர் சோனியாவுக்கு எழுதிய ஐந்து பக்க கடிதத்தையும் செய்தியாளர்களுக்கு வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 14 மாதங்களாக, கட்சியின் மேலிட தலைவர்களால் எனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டது. சோனியாவை சந்திக்க என் தாயார் ஒரு மாதத்துக்கும் மேலாக அனுமதி கேட்டும் அனுமதி கிடைக்கவில்லை. பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவர் சிரஞ்சீவிக்கு ஒரே நாளில் அனுமதி கிடைத்தது. கடைசியாக, என் குடும்பத்திலும் பிளவு ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்தன. என் உறவினர்களுக்கு பதவி கொடுப்பதாகக் கூறி, அவர்களை என்னிடம் இருந்து பிரிக்கும் முயற்சி நடந்தன. இதனால் கட்சியில் இருந்து விலகுகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார். கடப்பா தொகுதி எம்.பி., பதவியையும் ராஜினாமா செய்து, சபாநாயகர் மீரா குமாருக்கு ஜெகன்மோகன் ரெட்டி “பேக்ஸ்’ அனுப்பியுள்ளார். இதையடுத்து, ஜெகனின் வீடு முன் திரண்ட அவரது ஆதரவாளர்கள், பட்டாசு வெடித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தாயாரும் ராஜினாமா: இதற்கிடையே, ஜெகன்மோகனின் தாயார் விஜயலட்சுமி, தனது புலிவெந்துலா சட்டபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஆந்திர சட்டசபை சபாநாயகரிடம் இன்று அவர் கொடுக்கிறார். ஜெகனின் இந்த தடாலடி அரசியலால், ஆந்திராவில் காங்., கட்சி கலகலத்துப் போயுள்ளது. இதனால், அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை என்று, காங்., கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இருந்தாலும், ஜெகனுக்கு 36 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுவதால், காங்., மேலிடம் கவலை அடைந்துள்ளது. இந்த இழப்பை ஈடுசெய்வதற்காக, நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியின் ஆதரவை நாடவும், சிரஞ்சீவிக்கு முக்கிய பதவியை தரவும், காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சிரஞ்சீவி கட்சிக்கு 18 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால், ஜெகனால் ஏற்படும் இழப்பை இதன்மூலம் ஈடுசெய்ய முடியும் என, காங்கிரஸ் கருதுகிறது.

துரதிர்ஷ்டவசமானது: வீரப்ப மொய்லி கருத்து: ஜெகன் ராஜினாமா குறித்து, காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி கூறுகையில்,”காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ஜெகன் அறிவித்துள்ளது, துரதிர்ஷ்டவசமானது. இருந்தாலும், ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது. அரசுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது’ என்றார்.

thanks dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: