வங்கக் கடலில் புதிதாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். அதிக பட்சமாக பரங்கிப் பேட்டையில் 22 செ.மீ., மழை கொட்டியது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை மூலம், பல கட்டங்களாக மழை கிடைத்து வருகிறது. வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் விடாமல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கை – ஆந்திராவை ஒட்டிய பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று முன்தினம் உருவானது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதிகபட்சமாக, பரங்கிப்பேட்டையில் 22 செ.மீ., சோழவரத்தில் 13 செ.மீ., மழை கொட்டியது. சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறும்போது, “தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக் கடல் ஒட்டியுள்ள இலங்கை – தமிழகம் – தெற்கு ஆந்திர கடலோரத்தில் நேற்று நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் மழை விட்டுவிட்டு பெய்யும். நகரின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். வடகிழக்கிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ என்றார்.
(செய்தி – தினமலர், படத்தொகுப்பு விதை2விருட்சம்)