தூத்துக்குடி- கொழும்பு கப்பல் போக்குவரத்து துவங்க வசதியாக, தூத்துக்குடி துறைமுகத்தில் 1.5 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடப்பதாக துறைமுக துணைத்தலைவர் சுப்பையா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: துறைமுகத்திற்குள் கிரீன் கேட் மற்றும் புளுகேட் இடைப்பட்ட பகுதியில், 1.5 கோடி ரூபாய் செலவில் ஏற்கனவே கட்டப்பட்ட கப்பல் பயணிகளுக்கான அறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அங்கு, ஒரே நேரத்தில் 300 முதல் 400 பேர் வரை அமரலாம். கப்பல்போக்குவரத்து அறைக்கான தளம் அமைக்கும் பணி முடிந்துவிட்டது. இந்த கட்டமைப்பு பணிகள் அனைத்தையும் இம்மாதம் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென திட்டமிட்டு அதற்காக செயல்பட்டு வருகிறோம். கப்பலில் வரும் பயணிகள் தூத்துக்குடி நகருக்குள் செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும். கப்பலில் செல்லும் பயணிகளை ஏற்ற வருவோரின், கார்களை பார்க்கிங் செய்ய தனியாக இடமளிக்கப்படும்.
கப்பல் போக்குவரத்து தொடர்பாக இந்தியா – இலங்கையிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டபின், கப்பலை இயக்க விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படும். மத்திய கப்பல் துறை அமைச்சர் வாசன் கூறியுள்ளது போல, மூன்று மாதத்தில் இக்கப்பல் போக்குவரத்தை துவங்க தேவையான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன” என்றார். தூத்துக்குடி – கொழும்பு இடையே 152 கடல்மைல் தூரம் உள்ளது. இங்கிருந்து 12 மணி நேரத்தில் கொழும்பு செல்லலாம். விமானக்கட்டணத்தை விட, கப்பல் கட்டணம் குறைவாகவே இருக்கும். கட்டணம் எவ்வளவு, ஒரு கப்பலில் எத்தனை பேர் செல்வர், ஒருவாரத்திற்கு எத்தனை கப்பல்கள் இயக்கப்படுமென்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.
(நன்றி தினமலர் நாளிதழ்)
படத்தொகுப்பு விதை2விருட்சம்