பருத்தி ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். உள்நாட்டில் பருத்தி மற்றும் பருத்தி நூலின் தேவையைப் பூர்த்தி செய்த பிறகே, ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அதில் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் எழுதிய கடிதத்தின் விவரம்:
உள்நாட்டில் பருத்தியின் தேவை பூர்த்தி அடைந்த பிறகே, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 23-ம் தேதி தங்களுக்கு (பிரதமர்) கடிதம் எழுதியிருந்தேன். இந்த நிலையில், நவம்பர் மாதத்தில் 55 லட்சம் பேல்கள் பருத்தி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பருத்தி விலை கடந்த இரண்டு மாதங்களில் கடுமையாக உயர்ந்துள்ளது.
20 சதவீதம் விலை உயர்வு: செப்டம்பர் மாதத்திலிருந்து நவம்பர் வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டும் பருத்தி விலை கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் சந்தைக்கு வரும் பருத்தியின் அளவு
குறைந்து உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.
அக்டோபர் மாதத்துக்குப் பிறகு 4 அல்லது 5 மாதங்களுக்கு சந்தைக்கு பருத்தி
அதிக அளவு வரும். 55 லட்சம் பேல்கள் அளவுக்கு ஏற்றுமதி செய்த காரணத்தால், உள்நாட்டுச் சந்தையில் பருத்தி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
பருத்தி ஏற்றுமதியால் அந்தத் துறையில் நமக்கு போட்டியாக விளங்கும் சீனா மிகுந்த பயனைப் பெறுகிறது. ஏற்றுமதி காரணமாக, சீனாவின் கையிருப்பு விகிதம் 33 சதவீதமாக உள்ளது. ஆனால், நமது நாட்டின் விகிதம் 17 சதவீதமாக மட்டுமே உள்ளது.
பருத்தி உற்பத்தி ஜனவரி வரை அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பருத்தியின் இருப்பு விகிதத்தை அதிகரிப்பது அவசியம். விவசாயத் துறைக்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்புகளை அளிக்கும் துறையாக ஜவுளித் துறை விளங்குகிறது. கைத்தறி மற்றும் விசைத்தறிகள் மூலம் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
ஏற்றுமதிக்கு தடை விதியுங்கள்: அதிக அளவுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாக
விளங்குவதால், அந்தத் துறையை பாதிக்கும் பருத்தி ஏற்றுமதியைத் தடுக்க வேண்டும். உள்நாட்டில் பருத்தி போதுமான அளவுக்கு உரிய விலையில் கிடைத்த பிறகே ஏற்றுமதியை அனுமதிக்க வேண்டும்.
பருத்தியைப் போன்று பருத்தி நூலின் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால், நூலைப் பயன்படுத்தித் தொழில் நடத்தும் ஆயத்த ஆடை நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. எனவே, நூல் ஏற்றுமதி செய்வதற்கான அளவுக்கு உச்ச வரம்பை நிர்ணயிப்பதுடன், அதற்கென தனியாக வரியை விதிக்க வேண்டும்.
இந்தப் பிரச்னையில் உடனடியாக தலையிட்டு உள்நாட்டில் பருத்தி மற்றும் பருத்தி நூல் போதுமான அளவுக்குக் கிடைத்திட வழி செய்திட வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
நன்றி தினமணி