சன்டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடர்களில் ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்த தொடர் “மெட்டி ஒலி. தற்போது மறு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இத் தொடரில் அப்பாவியாக வந்து, ரசிகர்களின் பரிதாபத்தை அள்ளிய உமாவை ஒரு திரைவிழாவில் சந்தித்தோம். தற்போது சின்னதிரையில் உங்களைப் பார்க்க முடியவில்லையே என்றதும் மென்மையான குரலில் நிதானமாக பதிலளித்தார்.
உங்களைப் பற்றி?
எனக்கு சொந்த ஊர் கடலூர். பிறந்தது,வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்திருக்கிறேன். தற்சமயம் அப்பாவோட பிசினஸ் பார்த்து வருகிறேன். இதைதவிர கேப்டன் டிவியில் ஒரு தொடருக்காகப் பேசி வருகிறேன். ஒப்புதல் வந்த பிறகு அடுத்து என்ன தொடர் என்ற விவரங்கள் தெரியும். மற்றபடி “மெட்டி ஒலி’ தொடரும், “மஞ்சள் மகிமை’ தொடரும் மறுஒளி பரப்பு செய்யப்பட்டு வருகிறது. வேறு தொடர் எதுவும் தற்போதைக்கு இல்லை. ஒரு சில சினிமா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறேன்.
சினிமாத்துறைக்கு வந்தது எப்படி?
என் அப்பா தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் அசிஸ்டெண்ட் டைரக்டராக சில படங்களுக்கு பணியாற்றி வந்தார். பெப்ஸி பிரச்னையின்போது வெளியே வந்துவிட்டார். அவருக்கு இருந்த தொடர்பு காரணமாக என் அக்கா வனஜாவுக்கு விஜய் டிவியில் “பரம்பரை’ தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிக்க வந்தார். அவர்கள் மூலமாகத்தான் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தது.
என்ன என்ன தொடர்கள் நடித்திருக்கிறீர்கள்?
மெட்டி ஒலி, மஞ்சள் மகிமைக்குப் பிறகு, “நம்ம குடும்பம்’ தொடரில் நடித்திருந்தேன்.
சினிமாவிலிருந்து தொடர்ந்து வாய்ப்புகள் வருகிறதா?
சினிமாவில் ஒரு சில படங்களில் தங்கை கேரக்டரிலும் தோழி கேரக்டரிலும் நடித்திருக்கிறேன். வருகிற பாத்திரங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருப்பதால் அதில் நடித்தாலும் பெரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதனால் எனக்கு ஏற்ற மாதிரி நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் ஓரிரு காட்சியாக இருந்தாலும் ரீச்சாகிற மாதிரி இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். சவாலான கேரக்டர்களைத்தான் எதிர்பார்க்கிறேன்.
குடும்பம் பற்றி?
அம்மா ராதா. அக்கா வனஜா சின்னதிரை நடிகையாக இருக்கிறார்கள். தம்பி சிவகுமார் படித்துக் கொண்டிருக்கிறார். தங்கை சுமித்ரா அனிமேஷன் முடித்திருக்கிறாள்.
(தினமணியில் வெளிவந்தது)