லாரி வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக டில்லியில் மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சகத்துடன், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் (லாரி உரிமையாளர்கள் சங்கம்) நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இன்று துவங்குவதாக இருந்த நாடு தழுவிய லாரி வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி மையங்களில் சீரான சுங்க வரி வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய லாரி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இந்த சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.லாரி உரிமையாளர்களின் போராட்டத்துக்கு, தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், லாரி புக்கிங் ஏஜன்டுகள் அசோசியேஷன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அதனால், தென் மாநிங்கள் முழுவதும் காஸ், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியது. இச்சூழலில் நேற்று முன்தினம் மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சர் கமல்நாத் தலைமையில், இந்த சங்கத்தின் தலைவர் சண்முகப்பா உள்ளிட்ட நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அந்தப் பேச்சு வார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. நேற்று மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சக செயலர் குஜராலுடன், சங்க நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.அதில், மாவட்ட பதிவு வாகனங்களுக்கு 50 சதவீதம் கட்டணக் குறைப்பு, மல்டி ஆக்சில் வாகனங்களுக்கு வசூல் செய்யப்படும் கட்டணம் 3.45 ரூபாயிலிருந்து 2.45 ரூபாயாக உள்ளிட்ட கோரிக்கை ஏற்பட்டது. அதில், நிர்வாகிகளுக்கு உடன்பாடு ஏற்பட்டதால், நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி தெரிவித்ததாவது: மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சக செயலர் குஜராலுடன் டில்லியில் பேச்சு வார்த்தை நடந்தது. அதில், மாவட்ட பதிவு வாகனங்களுக்கு சுங்கக் கட்டணத்தில் 50 சதவீதம் குறைக்கப்படும். அதுபோல், மல்டி ஆக்சில் வாகனங்களுக்கு கி.மீ., ஒன்றுக்கு 3.45 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. அந்தக் கட்டணம் 2.45 ரூபாய் வீதம் குறைக்கப்படும்.மேலும், சுங்கச்சாவடி மையங்களில் உள்ள கட்டணம் தற்போது உள்ள ஒப்பந்தம் முடிந்தவுடன், அக்கட்டணம் 40 சதவீதமாகக் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டதால், வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இவ்வாறு நல்லதம்பி தெரிவித்தார்.
தனியார் பஸ் ஸ்டிரைக் வாபஸ்: லாரி உரிமையாளர்கள் நடத்தும் ஸ்டிரைக்குக்கு, தனியார் பஸ் உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து, தனியார் பஸ்களும் ஓடாது என அறிவித்திருந்தனர். இதனால், பயணிகள் போக்குவரத்தும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து, தனியார் பஸ் உரிமையாளர்கள் அறிவித்திருந்த ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றனர்.
டில்லியில் நடந்தது என்ன? ஸ்டிரைக் மேற்கொள்வதில் தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் தீவிர ஆர்வம் காட்டிய நிலையில், அகில இந்திய தலைவர் சண்முகப்பா, ஆந்திர மாநில தலைவர் கோபால் நாயுடு உட்பட வடமாநில தலைவர்கள் ஸ்டிரைக் மேற்கொள்ள ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.மத்திய அரசின் தங்க நாற்கர சாலைத் திட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் 28 டோல்கேட்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால், தமிழக லாரி உரிமையாளர்களுக்கு மட்டுமே பாதிப்பு அதிகம்.பிற மாநிலங்களில் ஒற்றை இலக்கிலேயே டோல்கேட் உள்ளதால் அவர்களுக்கு பாதிப்பு குறைவு என்பதால், அகில இந்திய சங்க நிர்வாகிகள் ஸ்டிரைக் மேற்கொள்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால், அதிருப்தியடைந்த மாநில தலைவர் பாதியிலேயே வெளியேறினார்.
(செய்தி- நாளேடு ஒன்றில்)
***
இதன் தொடர்புடைய முந்தைய செய்தி
இன்றைய பிற இடுகைகள்
I was searching in google for something else, but I must admit your website is very good